தற்போதைய செய்திகள்

வரும் உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க. வரலாறு காணாத தோல்வி அடையும் – அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி பேட்டி

விருதுநகர்

வரும் உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க. வரலாறு காணாத தோல்வி அடையும் என்று அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி கூறினார்.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் ஓய்வுபெற்ற காவல்துறையினர் நலச்சங்க கட்டடத்தை பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி திறந்து வைத்தார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

நடிகர் ரஜினிக்கு மத்திய அரசு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்குவது பொருத்தமானது. இந்த விருதை பெற்றிருக்கின்ற ரஜினிக்கு எனது வாழ்த்துக்கள். இதற்கும் அரசியலுக்கும் சம்பந்தம் இல்லை. வரும் உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க. வரலாறு காணாத தோல்வியை சந்திக்க போகிறது. 2021 சட்டமன்றத் தேர்தலில் திமுகவிற்கு அடி விழ போகிறது என்பதின் தொடக்கம் தான் கழகம் இடைத்தேர்தலில் வெற்றி பெற்றது. ஸ்டாலினுக்கு முதல்வராகும் யோகம் கிடையாது. இடைத் தேர்தல், பொதுத்தேர்தல் எந்த தேர்தல் வந்தாலும் கழகம் தான் வெற்றி பெறும்.

நடிகர்கள் யார் வேண்டுமானாலும் அரசியல் பேசலாம், தவறில்லை. நடிப்பவர்கள் நல்லவர்களாக இருக்க வேண்டும். திரைப்படத்தில் நடிப்பது போல் நிஜ வாழ்க்கையில் நடிக்கக்கூடாது. புரட்சித்தலைவி அம்மாவின் மறைவிற்கு பின்பு நடிகர்கள் வாய்ப்பு கிடைக்கும் என்ற நோக்கத்தில் அரசியல் பேசுகிறார்கள்.

கழகத்தை வீழ்த்த இனி ஒருவன் பிறந்து தான் வர வேண்டும். அ.ம.மு.க. கட்சியே அல்ல. அது ஒரு குரூப், அங்கு யாரும் இருக்க மாட்டார்கள். கழகத்தை நோக்கி அனைவரும் வந்து கொண்டிருக்கிறார்கள். தினகரன் கூடாரம் காலியாக உள்ளது. டிடிவி தினகரன் கலப்படவாத அரசியல்வாதி என தெரிந்து அமமுக வில் இருந்து விலகி அனைவரும் கழகத்திற்கு வருகின்றனர்.

கழகத்திற்கும், தி.மு.க.விற்கும் மட்டுமே தேர்தலில் போட்டி. எனவே தான் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக சிறுவன் சுஜித் மீட்பு விவகாரத்தில் கழக அரசை ஸ்டாலின் குறை கூறுகிறார். கழக அரசை விமர்சிக்க அவருக்கு எந்த தகுதியும் கிடையாது.

இவ்வாறு அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி கூறினார்.