தற்போதைய செய்திகள்

வாக்காளர் பட்டியலில் விடுபட்டவர்களை சேர்ப்பதில் தனி கவனம் செலுத்துங்கள் – கழக நிர்வாகிகளுக்கு அமைச்சர் கே.பி.அன்பழகன் உத்தரவு

தருமபுரி

வாக்காளர் பட்டியலில் விடுபட்டவர்களை சேர்ப்பதில் தனி கவனம் செலுத்துங்கள் என்று கழக நிர்வாகிகளுக்கு அமைச்சர் கே.பி.அன்பழகன் உத்தரவிட்டுள்ளார்.

தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி கிழக்கு, மேற்கு ஒன்றியத்தின் சார்பில் உள்ளாட்சி தேர்தல் பணிகள் மற்றும் கழக வளர்ச்சி பணிகள் குறித்த நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் தருமபுரி மாவட்ட கழக அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்தக்கு ஒன்றிய கழக அவைத் தலைவர் முருகேசன் தலைமை வகித்தார்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் உயர்கல்வித்துறை அமைச்சரும், மாவட்ட கழக செயலாளருமான கே.பி.அன்பழகன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அவர் பேசியதாவது:-

நடந்து முடிந்த நாடாளுமன்ற மற்றும், 22 சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில், ஒரு நாடாளுமன்ற தொகுதி மற்றும் 9 சட்டசபை தொகுதிகளில் வெற்றி பெற்றோம். தருமபுரி மாவட்டத்தில், அரூர், பாப்பிரெட்டிப்பட்டி ஆகிய இரண்டு தொகுதிகளிலும் வெற்றி பெற்றதற்கு அனைவரும் ஒருங்கிணைந்து பணியாற்றியதே காரணமாகும். தருமபுரி மாவட்டத்திற்கு முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி ஏராளமான நலத்திட்டங்களை செயல்படுத்தியுள்ளார்.

உள்ளாட்சித் தேர்தல் கண்டிப்பாக டிசம்பரில் நடக்கும். இந்த தேர்தலில் கூட்டணி வெற்றி பெற கட்சியினர் ஒற்றுமையுடன் பணியாற்ற வேண்டும். உள்ளாட்சி தேர்தலில் கட்சி அறிவிக்கும் வேட்பாளருக்கு எதிராக போட்டியிடக் கூடாது. மக்களிடம் சென்று அவர்கள் பிரச்சினைகளை கேட்டறிந்து, அவற்றை தீர்க்க வரும், 20 நாட்களில் கட்சியினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போதுதான், உள்ளாட்சி தேர்தலுக்கு மக்களிடம் சென்று ஓட்டு கேட்க முடியும். வாக்காளர் பட்டியலை சரிபார்ப்பதுடன், விடுபட்ட பெயர்களை நவம்பர் 18-ந்தேதிக்குள் சேர்ப்பதில் தனி கவனம் செலுத்த வேண்டும்.

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் நல்லம்பள்ளி ஒன்றியத்தில் தான் அதிக வாக்குகள் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கதாகும். உள்ளாட்சி தேர்தலில் ஊராட்சி மன்ற தலைவருக்கு கழகம் சார்பில் இரண்டு பேர் நின்று எதிரிக்கு வாய்ப்பு கொடுக்கக்கூடாது. ஊராட்சிக்குட்பட்ட பொறுப்பாளர்கள் கலந்து பேசி ஒருவர் மட்டுமே நிற்க வைக்க வேண்டும். தருமபுரி மாவட்டத்தில் கழக தொண்டர்கள் கடுமையாக உழைத்ததால் இரு சட்டமன்ற இடைத்தேர்தலில் எவ்வாறு நாம் வெற்றி பெற்றோம். உள்ளாட்சி தேர்தலில் கடந்த சட்டமன்ற இடைத்தேர்தலில் வேலை செய்தோமோ அதே போல் கடுமையாக உழைத்தால் தான் உள்ளாட்சி தேர்தலில் அதிக இடங்களில் வெற்றி பெற முடியும்.

இவ்வாறு அமைச்சர் கே.பி.அன்பழகன் பேசினார்.