மதுரை

அரசின் சாதனைகளை கூறினாலே கழகம் 100 சதவீதம் வெற்றி பெறும் – வி.வி.ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. உறுதி

மதுரை:

அரசின் சாதனைகளை கூறினாலே கழகம் 100 சதவீதம் வெற்றி பெறும் என்று வி.வி.ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. கூறினார்.

மதுரை கிழக்கு தொகுதி பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் புறநகர் கிழக்கு மாவட்ட கழகச் செயலாளர் வி.வி.ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. ஆலோசனை வழங்கி பேசியதாவது:-

நடைபெற்று முடிந்த நாங்குநேரி, விக்கிரவாண்டி ஆகிய இரண்டு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் நாம் மகத்தான வெற்றியை பெற்றுள்ளோம். இந்த இடைத்தேர்தலில் ஸ்டாலினின் பொய் பிரச்சாரம் மக்களிடம் எடுபடவில்லை. மக்கள் மனதில் முதலமைச்சரின் சாதனை திட்டங்கள் நிலைத்து நிற்பதால் அதற்கு பரிசாக வெற்றியை கொடுத்துள்ளனர்.

அதேபோல் வருகிற உள்ளாட்சித் தேர்தலிலும் நாம் வெற்றி பெற வேண்டும். இதற்கு முன்னோட்டமாக கழக அரசின் சாதனைகளை வீடு வீடாக சென்று எடுத்து கூறுங்கள். தினந்தோறும் கிராம மக்கள் கூடும் இடங்களில் கழக அரசின் சாதனைகளை எடுத்துக்கூறுங்கள். ஏனென்றால் மக்கள் மனதில் முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் இடம் பிடித்துவிட்டனர். ஆகவே நமக்கு வெற்றி எளிதாகி விட்டது. இன்று தீவிர பணியாற்றுங்கள். நமக்கு 100 சதவீதம் வெற்றி உறுதி.

இவ்வாறு புறநகர் மாவட்ட கழக செயலாளர் வி.வி.ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. பேசினார்.

இக்கூட்டத்தில் ஒன்றிய கழக செயலாளர் தக்கார் பாண்டி, பகுதி கழக செயலாளர்கள் ஜீவானந்தம் , வண்டியூர் முருகன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பொன்னம்பலம், மாவட்ட இளைஞரணி செயலாளர் வக்கீல் ரமேஷ், ஒன்றிய செயலாளர் நிலையூர் முருகன், பொதுக்குழு உறுப்பினர் முத்துக்குமார், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் ஓம்.கே.சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.