தற்போதைய செய்திகள்

மார்பக புற்றுநோயை கண்டறிய அதிநவீன கருவி அறிமுகம் – புதுக்கோட்டையில் அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார்

புதுக்கோட்டை

புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மேமோகிராம் மற்றும் ஆர்ஜன் கிரீன் லேசர் பயன்பாட்டினை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் உமா மகேஸ்வரி தலைமை வகித்தார்.

இந்நிகழ்ச்சியில் அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் பேசியதாவது:-

முதலமைச்சரின் சிறப்பு குறை தீர்க்கும் திட்டத்தின் கீழ் புதுக்கோட்டை மாவட்டத்தில்உ ள்ள பொதுமக்களிடம் இருந்து பல்வேறு கோரிக்கைகள் தொடர்பான மனுக்கள் பெறப்பட்டுள்ளது. இவ்வாறு பெறப்பட்ட மனுக்களின் மீது பரிசீலனை செய்து உரிய நடவடிக்கை மற்றும் நிவாரணம் வழங்கப்படுகிறது. அந்த வகையில் தமிழ்நாட்டில் இதுவரை இல்லாத வகையில் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட 73 சதவீத மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் மட்டும் பொதுமக்களிடம் இருந்து 9621 மனுக்கள் பெறப்பட்டது. பட்டா மாறுதல், முதியோர் உதவித்தொகை போன்ற பல்வேறு கோரிக்கைகள் தொடர்பான 7030 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. இதன் மூலம் மாவட்ட நிர்வாகமும், பொதுமக்களின் குறைகளை போக்கும் வகையில் திறம்பட செயலாற்றி வருகிறது.

மேலும் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பொதுமக்களுக்கு பல்வேறு உயர்தர மருத்துவ சிகிச்சைகளை வழங்கி சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அந்த வகையில் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூ.18.79 லட்சம் மதிப்பீட்டில் மேமோகிராம் என்ற மார்பக புற்றுநோயினை பரிசோதிக்கக்கூடிய சிறப்பு கருவி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

மேலும் சர்க்கரை நோயாளிகளுக்கு கண்ணில் ஏற்படும் பாதிப்புகளை ஆய்வு செய்யும் வகையில் ரூ.13.5 லட்சம் மதிப்பீட்டில் ஆர்கான் கிரீன் லேசர் என்ற புதிய கருவி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டுள்ளது. ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் போன்ற தொற்று நோய்களை கண்டறியும் வகையில் 30 வயதிற்கு மேல் உள்ள ஆண், பெண் இருபாலும் அருகில்உள்ள அரசு மருத்துவமனைகளில் வருடத்திற்கு ஒருமுறை உடல் பரிசோதனை செய்து கொள்ள தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் தொற்று நோயாளிகள் பிரிவிற்கு தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் புதிய நவீன மருத்துவ உபகரணங்கள் வழங்ககப்பட்டு வருகிறது.

முதலமைச்சர் எனது மருத்துவமனை எனது பெருமை என்ற திட்டத்தினை சட்டமன்றத்தில் அறிவித்தார். பெரிய கார்ப்பரேட் நிறுவன நிதிகளில் இருந்து சுகாதாரத்துறைக்கு நல்ல பல உதவிகளை வழங்குவது இடத்திட்டத்தின் நோக்கமாகும். இத்திட்டத்தின் திருச்சி பன்னாட்டு விமான நிலைய சேவை பிரிவின் சார்பில் புதுக்கோட்டை மாவட்டம் ஏம்பல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு ரூ.15 லட்சத்தில் வழங்கப்பட்ட அவசர சிகி்ச்சை ஊர்தியினை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து பொதுமக்கள் பயன்பெறும் வகையில் இதுபோன்ற மக்கள் நல திட்டங்களை முதலமைச்சர் தலைமையிலான அரசு மிக சிறப்பாக செயல்படுத்தி வருகிறது.

தமிழகத்தில் டெங்கு முழு கட்டுப்பாட்டில் உள்ளது. அனைத்து துறைகளையும் உள்ளடக்கிய பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதுடன் முதலமைச்சர் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடத்தப்பட்டு அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் ஒத்துழைப்புடன் சுகாதாரத்துறை இணைந்து உரிய ஆலோசனைகள் வழங்கப்பட்டு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இவ்வாறு அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் அழ.மீனாட்சி சுந்தரம், நகராட்சி ஆணையர் ஜீவா சுப்பிரமணியம், மத்திய தொலை தொடர்புத்துறை ஆலோசனைக்குழு உறுப்பினர் பாஸ்கர், முன்னாள் நகரமன்ற துணைத்தலைவர் சேட், மருத்துவர்கள், செவிலியர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்்.