சிறப்பு செய்திகள்

கழகத்தை எந்த சக்தியாலும் வீழ்த்த முடியாது அமைச்சர் எஸ்.பி.வேலுமணி முழக்கம்

கோவை:-

கழகத்தை எந்த சக்தியாலும் வீழ்த்த முடியாது. அழிக்க நினைப்பவர்கள் தான் அழிந்து போவார்கள் என்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறினார்.

உள்ளாட்சி ேதர்தல் குறித்து கோவை மாநகர் மற்றும் புறநகர் மாவட்ட கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் இதயதெய்வம் மாளிகையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு தமிழ்நாடு கோ-ஆப்டெக்ஸ் தலைவரும், கோவை புறநகர் மாவட்டக் கழக அவைத் தலைவருமான ஏ.வி.வெங்கடாசலம் தலைமை தாங்கினார். கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், கழக வர்த்தக அணி மாநில தலைவருமான அம்மன் கே.அர்ச்சுனன் வரவேற்று பேசினார்.

உள்ளாட்சித் தேர்தலில் எவ்வாறு பணியாற்றுவது என்பது குறித்து கழக அமைப்புச் செயலாளர் ஏ.கே.செல்வராஜ் எம்.பி., கழக தேர்தல் பிரிவுச் செயலாளர், பொள்ளாச்சி வி.ஜெயராமன், கோவை மாநகர் மாவட்ட கழக செயலாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் எம்.எல்.ஏ. ஆகியோர் ஆலோசனை வழங்கினர்.

பின்னர் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசியதாவது:-

கழகத்தை வீழ்த்த நினைத்தவர்கள் வீழ்ந்து போவார்கள். கடந்த தேர்தல் முடிவுகள் துரோகிகளுக்கும், எதிரிகளுக்கும் ஒரு சம்மட்டி அடி, கழகத் தொண்டர்கள் ஒற்றுமையுடன் இருந்து விசுவாசத்துடன் பணியாற்றினால் இனி எந்த தேர்தலிலும் கழகத்தை யாராலும் தோற்கடிக்க முடியாது.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுகவின் வஞ்சக வலையில் மக்கள் ஏமாந்து போனார்கள். செய்ய முடியாத பொய் வாக்குறுதிகளை அள்ளி வீசி மக்களை குழப்பி வெற்றி கண்டனர். புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் மற்றும் புரட்சித்தலைவி அம்மா ஆகியோர் வழியில் சாதாரண இணை செயலாளராக இருந்து இன்று தமிழ்நாட்டின் முதல்வராக உயர்ந்தவர் எடப்பாடியார். நடந்து முடிந்த இடைத்தேர்தலில் விக்ரவாண்டி, நாங்குநேரியில் 45 ஆயிரம், 35 ஆயிரம் என வாக்கு வித்தியாசத்தில் நாம் வெற்றி கண்டுள்ளோம். கழகம் தலைமையிலான ஆட்சியை தமிழக மக்கள் விரும்புகின்றனர். கழகத்திற்கு துரோகம் செய்தவர்கள் வீழ்ந்து போவார்கள்.

கடந்த 2006 2011 வரை திமுக ஆட்சி காலத்தில் இடைத்தேர்தலில் தோல்வி கண்டோம். ஆனால் மூன்று மாதத்தில் கழகம் அமோக வெற்றி பெற்றது. எனவே தேர்தலில் யார் வேட்பாளராக நின்றாலும் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் மற்றும் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் நிற்பதாக நினைத்து கொண்டு நமது கழக வேட்பாளர்களை வெற்றிபெறச் செய்ய வேண்டும்.

கடந்த காலங்களில் கூட்டுறவு தேர்தலில் திமுக காங்கிரஸ் மட்டுமே வெற்றி பெற்று வந்தது. அதையெல்லாம் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் மாற்றி காட்டினார். கடந்த தேர்தலில் ஒரு லட்சம் கழக தொண்டர்கள் கூட்டுறவு வங்கியில் வெற்றி பெற்றுள்ளனர். அதேபோல் இந்த தேர்தலிலும் கழக நிர்வாகிகள் வெற்றி பெற்றுள்ளனர். அவர்கள் அனைவரும் கட்சிக்கு விசுவாசமாக வருகிற தேர்தலில் பணியாற்றிட வேண்டும். கழகத்திற்காக உழைத்த பலர் இன்று வரை எந்த பொறுப்பும் இல்லாமல் உள்ளனர். அவர்களுக்கு இந்த தேர்தல் ஒரு வாய்ப்பாக அமையும். புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். மற்றும் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் வழியில் கழகத்தை நம்பிய யாரும் கைவிடப்பட மாட்டார்கள்.

கோவை மாவட்டத்தில் சாலைகள், மேம்பாலங்கள், கிராம சாலைகள், 24×7 குடிநீர் இணைப்பு, 3 வது கூட்டு குடிநீர் திட்டம், அரசு மருத்துவமனை விரிவாக்கம் தனியார் மருத்துவமனைகளுக்கு இணையாக சிகிச்சையில், முதியோர் ஓய்வு ஊதியம், பள்ளி மாணவ மாணவிகளுக்கு எண்ணற்ற திட்டங்கள், வேலைக்கு செல்லும் பெண்களுக்கு இருசக்கர வாகனம் 25 ஆயிரம் மானியத்துடன், தாலிக்கு தங்கம், பன்னிரண்டாம் வகுப்புவரை படித்தவர்களுக்கு ரூ.25 ஆயிரம் 8 கிராம் தங்கம், பட்டம் படித்தவர்களுக்கு ரூ.50 ஆயிரம் 8 கிராம் தங்கம் என புரட்சித்தலைவி அம்மா அவர்கள் கொண்டு வந்த அனைத்து திட்டங்களும் நிறைவேற்றும் ஒரே அரசு கழக அரசு. ஆகவே நமது கழக நிர்வாகிகள் துண்டு பிரசுரம் போஸ்டர் அடித்து செய்த பணிகளை பட்டியலிட்டு பொது மக்களுக்கு விளக்க வேண்டும். தேர்தல் பணியில் ஒரு நபர் 5 பேர் வீதம் திண்ணைப் பிரச்சாரம் செய்தால் போதும் நாம் மிகப் பெரிய வெற்றியைப் பெறமுடியும்.

வருகின்ற நவம்பர் 18 வரை வாக்காளர் சேர்ப்பு உள்ளது. அதில் ஈடுபட்டு அனைவரையும் வாக்காளர் பட்டியலில் சேர்க்க வேண்டும். ஒவ்வொரு ஓட்டும் முக்கியம். புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். மற்றும் புரட்சித்தலைவி அம்மா போன்று இன்று முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தலைமையில் கழகம் மாபெரும் வெற்றி பெற அனைவரும் தியாக மனப்பான்மையுடன் களப்பணி ஆற்ற வேண்டும். இளைஞர், இளம்பெண்கள், பாசறை, தகவல் தொழில்நுட்பம் வழியில் என இளைஞர்கள் சிறப்பான பணி ஆற்றிட வேண்டும்.

திமுகவில் வாரிசு அரசியல் நடக்கிறது. கருணாநிதி, அவருக்கு பின், ஸ்டாலின் அவருக்கு பின் உதயநிதி என ஒரே குடும்பம்தான் வாழ நினைக்கிறது. ஆனால் கழகம் மட்டும் தான் தொண்டனே தலைவனாகும் இயக்கம். எனவே சிறப்பாக பணியாற்றி வெற்றியை புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மற்றும் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் நினைவிடத்தில் காணிக்கை ஆக்குவோம்.

இவ்வாறு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசினார்.