சிறப்பு செய்திகள்

ஆழியாறு அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு

கோவை

ஆழியாறு அணையிலிருந்து நேற்று பாசனத்திற்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டது.விவசாயிகள் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கோவை மாவட்டம், ஆனைமலை வட்டம், ஆழியாறு அணையிலிருந்து விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று தண்ணீர் திறந்துவிட முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி உத்தரவிட்டிருந்தார். அதன்படி நேற்று கழக அமைப்பு செயலாளரும், கோவை புறநகர் மாவட்டக் கழக செயலாளரும், நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சருமான எஸ்.பி.வேலுமணி ஆழியாறு அணையிலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விட்டார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

தமிழக அரசு விவசாயிகளின் கோரிக்கையினை ஏற்று விவசாயிகளுக்கென அதிகளவில் நிதி ஒதுக்கீடு செய்து பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி குடிமராமத்து திட்டத்தினை கோயம்புத்தூர் மாவட்டம் முழுவதும் சிறப்பாக செயல்படுத்தியதன் விளைவாக, நகரப்பகுதிகள், ஊரக பகுதிகள் என அனைத்து பகுதிகளிலும் உள்ள ஏரிகள், குளங்கள், குட்டைகள் என அனைத்தும் நீர் நிரம்பி உள்ளது.

இதனால் விவசாயிகள் அதிகளவில் பயன்பெறும் வகையில் உள்ளது. அதனடிப்படையில், கோயம்புத்தூர் மாவட்டம் பரம்பிக்குளம் ஆழியாறு திட்டம், ஆழியாறு படுகை ‘ஆ” மண்டலத்தின் பொள்ளாச்சி கால்வாய் ‘ஆ” மண்டலம், வேட்டைக்காரன்புதூர் கால்வாய் ‘அ” மண்டலம், சேத்துமடை கால்வாய் ‘ஆ” மண்டலம் மற்றும் ஆழியாறு ஊட்டுக்கால்வாய் ‘ஆ” மண்டலம் ஆகியவற்றின் பாசனப் பகுதிகளுக்கு ஆழியாறு அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிடக் கோரி பரம்பிக் குளம் ஆழியாறு திட்ட ஆழியாறு படுகை புதிய ஆயக்கட்டு பாசன விவசாயிகள் சங்கத்தினர் உள்ளிட்ட வேளாண் பெருங்குடி மக்களின் கோரியினை ஏற்று முதலமைச்சர் ஆழியாறு அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிட 02.011.2019 அன்று உத்தரவிட்டிருந்தார்.

அதனைத்தொடாந்து, 04.11.2019 முதல் பொள்ளாச்சி வட்டத்தில் உள்ள பொள்ளாச்சி கால்வாய் ‘ஆ” மண்டலத்தில் 5621 ஏக்கர் பாசனப் பகுதிகளுக்கும், ஆனைமலை வட்டத்தில் உள்ள பொள்ளாச்சிக் கால்வாய் ‘ஆ” மண்டலத்தில் 6321 ஏக்கர் பாசனப் பகுதிகளுக்கும், வேட்டைக்காரன்புதூர் கால்வாய் ‘அ” மண்டலத்தில் 5558 ஏக்கர் பாசனப் பகுதிகளுக்கும், சேத்துமடைக் கால்வாய் ‘ஆ” மண்டலத்தில் 2529 ஏக்கர் பாசனப் பகுதிகளுக்கும், ஆழியார் ஊட்டுக் கால்வாய் ‘ஆ” மண்டலத்தில் 2303 ஏக்கர்
பாசனப் பகுதிகளுக்கும் என மொத்தம் 22332 ஏக்கர் பாசனப் பரப்புள்ள பூமிகளுக்கு 135 நாட்களில் உரிய இடைவெளி விட்டு 70 நாட்களுக்கு மொத்தம் 2250 மில்லியன் கனஅடிக்கு மிகாமல் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது.

மேலும், ஆழியாறு அணையிலிருந்து எலவக்கரை குளத்திற்கு, மொத்தம் 250 ஏக்கர் பாசனப் பரப்புள்ள பூமிகளுக்கு 11 நாட்களுக்கு 57 மில்லியன் கன அடிக்கு மிகாமல் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதன் மூலம், பொள்ளாச்சி மற்றும் ஆனைமலை வட்டங்களில் உள்ள விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும். மேலும், விவசாயப் பெருமக்கள் நீரை
சிக்கமான பயன்படுத்தி, நீர் மேலாண்மையை மேற்கொண்டு அதிக அளவில் மகசூல் பெறவேண்டும்.

இவ்வாறு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறினார்.