சிறப்பு செய்திகள்

திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயிலுக்கு ரூ.1.67 கோடி தஸ்திக் தொகை – முதலமைச்சர் வழங்கினார்

சென்னை

முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி  தலைமைச் செயலகத்தில், வருவாய்த் துறை சார்பில் திருவனந்தபுரம்,
ஸ்ரீ பத்மநாபசுவாமி திருக்கோவிலுக்கு 2001 முதல் 2019 வரை நிலுவையாக உள்ள தஸ்திக் தொகையான 1 கோடியே 67 லட்சத்து 20 ஆயிரத்து 225 ரூபாய்க்கான காசோலைகளை ஸ்ரீ பத்மநாபசுவாமி திருக்கோவில் செயல் அலுவலரிடம் வழங்கினார்.

இது குறித்து அரசின் செய்திக்குறிப்பு வருமாறு:-

திருவனந்தபுரம், ஸ்ரீ பத்மநாபசுவாமி திருக்கோவிலுக்கு 2001 முதல் 2019-ம் ஆண்டு வரை நிலுவையில் உள்ள தஸ்திக் தொகை வழங்குவது தொடர்பாக, நில நிர்வாக ஆணையர் தலைமையில் இந்துசமய அறநிலையத்துறை உயர் அலுவலர்கள், கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியரின் கூடுதல் நேர்முக உதவியாளர் (நிலம்), திருவனந்தபுரம் ஸ்ரீ பத்மநாபசுவாமி திருக்கோயில் நிர்வாக அலுவலர் ஆகியோர் கலந்து கொண்ட கூட்டத்தில், ரூ.1,67,20,225 நிலுவைத் தொகை வழங்கப்பட வேண்டும் என கணக்கிடப்பட்டு, நிலுவைத் தொகை வழங்குவதற்கான அரசாணை 18.10.2019 அன்று வெளியிடப்பட்டது.

அதன்படி, திருவனந்தபுரம், ஸ்ரீ பத்மநாபசுவாமி திருக்கோவிலுக்கு தஸ்திக் நிலுவைத் தொகையாக ரூ.1,67,20,225-க்கான காசோலைகளை அத்திருக்கோவிலின் செயல் அலுவலரிடம் முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி  வழங்கினார்.

இந்த நிகழ்வின்போது, வருவாய், பேரிடர் மேலாண்மை மற்றும் தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், தலைமைச் செயலாளர் க.சண்முகம், நில நிர்வாக இணை ஆணையர் கே.கற்பகம் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.

இவ்வாறு அரசு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.