சிறப்பு செய்திகள்

உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கு பராமரிப்பு ஆணைகள் – முதலமைச்சர் வழங்கினார்…

சென்னை:-

முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி  தலைமைச் செயலகத்தில், வேளாண்மைத் துறை சார்பில் பழங்கள், காய்கறிகள் மற்றும் அழுகும் பொருட்களுக்கான விநியோகத் தொடர் மேலாண்மை திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள முதன்மை பதப்படுத்தும் நிலையங்களில், முதற்கட்டமாக 25 முதன்மை பதப்படுத்தும் நிலையங்களை சந்தை ஒருங்கிணைப்பு பங்குதாரர் என்ற முறையில் 13 உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கு தினசரி செயல்பாடு மற்றும் பராமரிப்பிற்காக ஒப்படைக்கும் ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக 7 உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கு ஆணைகளை வழங்கினார்.

இதுகுறித்து அரசின் செய்திகுறிப்பு வருமாறு:-

விவசாய பெருமக்களுக்கு நன்மை செய்திடும் வகையில், பழங்கள், காய்கறிகள் மற்றும் இதர அழுகும் விளை பொருட்களுக்கான விநியோகத் தொடரினை வலுப்படுத்த தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துதல், அறுவடைக்குப் பின் ஏற்படும் இழப்பினைக் குறைத்தல், சேமிப்புக் கால அளவினை நீட்டித்தல், விநியோகத் தொடர் வர்த்தகத்தில் உள்ள வியாபாரிகளுடன் இணைப்பை ஏற்படுத்துதல், பெரிய சந்தை மையங்கள், பதப்படுத்துவோர், நுகர்வோர் ஆகியோருடன் சந்தை ஒருங்கிணைப்பிற்கு உதவுதல், விவசாயிகளுக்கு உரிய விலை கிடைக்கச் செய்தல், இதர முதலீட்டாளர்களை விநியோகத் தொடரில் பங்குபெறச் செய்தல் ஆகியவற்றை முக்கிய நோக்கங்களாக கொண்டு நாட்டிலேயே முதல்முறையாக தமிழ்நாட்டில் விநியோகத் தொடர் மேலாண்மை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

பழங்கள், காய்கறிகள் மற்றும் பிற அழுகும் பொருட்கள் விநியோகத் தொடர்பினை ஒருங்கிணைத்து வலுப்படுத்த விநியோகத் தொடர் மேலாண்மைத் திட்டம் தமிழ்நாட்டில் கிருஷ்ணகிரி, தருமபுரி, கோயம்புத்தூர், நீலகிரி, திருச்சிராப்பள்ளி, திண்டுக்கல், தேனி, இராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி ஆகிய 10 மாவட்டங்களில் 482 கோடியே 36 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் செயலாக்கத்தில் உள்ளது.

அறுவடைக்குப் பின் ஏற்படும் இழப்பினைக் குறைக்கும் பொருட்டும், விவசாயிகளுக்கு நியாயமான விலை கிடைப்பதை உறுதி செய்யவும், விளைபொருட்களை சுத்தம் செய்து, வகைப்படுத்தி தரம்பிரிக்கும் வசதிகளுடனும் 64 முதன்மை பதப்படுத்தும் நிலையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையங்களில் சிப்பம் கட்டும் அறை, விளைபொருட்களுக்கேற்ற முதன்மைப் பதப்படுத்தும் இயந்திரங்கள், குளிர்பதனக் கிடங்கு, சேமிப்புக் கிடங்குகள் போன்ற உட்கட்டமைப்புகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. மேலும், பழங்கள் மற்றும் காய்கறிகள் ஏற்றுமதியினை ஊக்குவிக்கும் வகையில், அப்பீடா தரம் பெற்ற சிப்பம் கட்டும் கூடம், வெந்நீர் / நீராவி சுத்திகரிப்பு வசதி கதிரியக்கக் கூடம் போன்ற வசதிகள், ஒரு சில முதன்மைப் பதப்படுத்தும் நிலையங்களில் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

சந்தை ஒருங்கிணைப்பு பங்குதாரராக ஒப்பந்தப்புள்ளி வாயிலாக தேர்ந்தெடுக்கப்பட்ட உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களால் சலுகை அடிப்படையில் முதன்மை பதப்படுத்தும் நிலையங்கள் செயல்படும். அதன்படி, விநியோகத் தொடர் மேலாண்மை திட்டத்தின் கீழ், முதற்கட்டமாக 25 முதன்மை பதப்படுத்தும் நிலையங்களை சந்தை ஒருங்கிணைப்பு பங்குதாரர் என்ற முறையில் 13 உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கு தினசரி செயல்பாடு மற்றும் பராமரிப்பிற்காக ஒப்படைக்கும் ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி நேற்று 7 உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கு ஆணைகளை வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில், வேளாண்மைத் துறை அமைச்சர் இரா.துரைக்கண்ணு, தலைமைச் செயலாளர் க.சண்முகம், வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற்றும் வேளாண்மைத் துறை முதன்மைச் செயலாளர் ககன்தீப் சிங் பேடி, வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறை ஆணையர் எஸ்.ஜே.சிரு, தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை இயக்குநர் டாக்டர் ந. சுப்பையன், மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.