தற்போதைய செய்திகள்

உள்ளாட்சி தேர்தலில் கழகத்தின் வெற்றியை எந்த சக்தியாலும் தடுத்து நிறுத்த முடியாது – அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் உறுதி

திண்டுக்கல்

உள்ளாட்சித் தேர்தலில் கழகத்தின் வெற்றியை எந்த சக்தியாலும் தடுத்து நிறுத்த முடியாது என்று அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் கூறினார்.

திண்டுக்கல் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் கழகம் சார்பில் போட்டியிடும் முள்ளிப்பாடி ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் ஜெயசீலன், மாவட்ட கவுன்சிலர் வேட்பாளர் முருகன், பெரியகோட்டை ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் வேட்பாளர் மேகலா ஆகியோரை ஆதரித்து வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன், மாவட்ட கழக செயலாளர் வி.மருதராஜ் ஆகியோர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.

திண்டுக்கல் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட காப்பிளிய பட்டி, கோடாங்கிபட்டி, குளிப்பட்டி, கருதனம்பட்டி, குழந்தைபட்டி, ம.மூ.கோவிலூர் பிரிவு, பாறையூர், முள்ளிப்பாடி, ஆத்துமரத்துப்பட்டி, அணைப்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் பொதுமக்களை நேரில் சந்தித்து இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தனர்.

பிரச்சாரத்தின்போது அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் பேசியதாவது:-

ஏற்கனவே உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்று முடிந்திருக்க வேண்டும். ஆனால், எதிர்க்கட்சிகளுக்கு உள்ளாட்சித் தேர்தலில் நடத்த விருப்பம் இல்லை. அதனால் வழக்கு மேல் வழக்கு போட்டதால் தேர்தல் நின்று போனது. முதல்வரும், துணை முதல்வரும் உச்சநீதிமன்றம் சென்றதால் தற்போது தேர்தல் நடக்க இருக்கிறது.தமிழகத்தில் முதல்வரும், துணை முதல்வரும் நல்லாட்சி புரிந்து வருகின்றனர்.

கழக ஆட்சியில் விலைவாசி உயர்வு இல்லை, ஜாதி பிரச்சனை இல்லை, சட்டம்-ஒழுங்கு சீராக உள்ளது, தமிழகம் அமைதிப் பூங்காவாக திகழ்கிறது. பிறந்த குழந்தை முதல் அனைவருக்கும் ஏராளமான நலத்திட்டங்களை அம்மாவின் வழியில் முதல்வரும், துணை முதல்வரும் வாரி வழங்கி சிறப்பான ஆட்சியை நடத்தி வருகின்றனர். எதிர்க்கட்சிகள் மூக்கில் விரலை வைக்கும் அளவிற்கு நல்லாட்சி புரிந்து வருகின்றனர்.

திண்டுக்கல் சட்டமன்ற தொகுதியை பொறுத்தவரை கடந்த காலங்களில் சட்டமன்ற உறுப்பினர்களாக இருந்தவர்கள் நிறைவேற்ற முடியாத பணிகளை நிறைவேற்ற உங்களால் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட என்னை அம்மா வனத்துறை அமைச்சர் ஆக்கினார். அதன் பயனாக அனைத்து பகுதிகளுக்கும் சாலை வசதி, குடிநீர் வசதி, மின் விளக்கு வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

குக்கிராமங்களுக்கும் கூட அனைத்து அடிப்படை வசதிகளும் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. திண்டுக்கல் தொகுதி மக்களின் நீண்டகால கோரிக்கையான மருத்துவக் கல்லூரி விரைவில் வரவுள்ளது. கடந்த கால சட்டமன்ற உறுப்பினர்களால் செய்ய முடியாத பணிகள் அனைத்தும் தற்போது நிறைவேற்றப்பட்டு வருகிறது. தற்போது நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் கழக வேட்பாளர்களுக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களிப்பதன் மூலம் நூற்றுக்கு நூறு சதவீதம் அனைத்து பணிகளையும் விரைவில் செய்து முடிப்போம்.

குடிமராமத்து நாயகன் முதல்வருக்கும், ஜல்லிக்கட்டு நாயகன் துணை முதல்வருக்கும் தமிழக மக்கள் பேராதரவு அளித்து வருகின்றனர். எனவே நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் கழகம் அமோக வெற்றி பெறுவதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது இது உறுதி, உறுதி, உறுதி.

இவ்வாறு அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் பேசினார்.

பிரச்சாரத்தின்போது நகர கூட்டுறவு வங்கி தலைவர் வீர மார்பன், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் திவான் பாட்சா, தொழிற்சங்க செயலாளர் ஜெயராமன், பகுதி செயலாளர்கள் மோகன், சுப்பிரமணி, சேசு நிர்வாகிகள் முத்துச்சாமி, இளங்கோ, பாசறை பாலா, சின்ராஜ் உள்பட பலர் உடன் சென்றனர்.