சிறப்பு செய்திகள்

தமிழக உள்ளாட்சித்துறைக்கு 12 மத்திய அரசு விருதுகள் – முதலமைச்சரிடம், அமைச்சர் எஸ்.பி.வேலுமணி காண்பித்து வாழ்த்து பெற்றார்

சென்னை

முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமியிடம் நேற்று தலைமைச் செயலகத்தில், நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்பு திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி 23.10.2019 அன்று புதுடெல்லியில் மத்திய அரசின் ஊராட்சி அமைச்சகத்தின் சார்பில் நடைபெற்ற விருதுகள் வழங்கும் விழாவில், மூன்றடுக்கு ஊராட்சி அமைப்புகளின் சிறந்த முயற்சிகள் மற்றும் நடவடிக்கைகளை ஊக்குவிக்கும் வகையில், ஊராட்சிகளில் தகவல் மற்றும் தகவல் தொழில் நுட்ப முறைகளை திறம்பட செயல்படுத்தியதற்காக, தேசிய அளவில் தமிழ்நாடு முதல் மாநிலமாக தேர்வு செய்யப்பட்டு அதற்காக வழங்கப்பட்ட e-Panchayat Puraskar விருது,

ஊராட்சிகளுக்கு கூடுதல் அதிகாரங்கள், கூடுதல் நிதி மற்றும் பணியாளர்களை அளித்து ஊராட்சிகளின் திறனை மேம்படுத்திய வகையில், மாவட்ட அளவில் சேலம் மாவட்டத்திற்கும், ஒன்றிய அளவில் ஈரோடு மாவட்டம் – பெருந்துறை மற்றும் நாமக்கல் மாவட்டம் – பள்ளிப்பாளையம் ஊராட்சி ஒன்றியங்களுக்கும், ஊராட்சிகள் அளவில், சேலம் மாவட்டம் – கோனூர் கிராம ஊராட்சி, கோவை மாவட்டம் – மத்வராயபுரம் கிராம ஊராட்சி, நாமக்கல் மாவட்டம் – அரசபாளையம் கிராம ஊராட்சி, ஈரோடு மாவட்டம் – வெள்ளாளபாளையம் கிராம ஊராட்சி, மதுரை மாவட்டம் – கோவில்பாப்பாக்குடி கிராம ஊராட்சி, திருவண்ணாமலை மாவட்டம் – எஸ்.யு. வனம் கிராம ஊராட்சி ஆகிய 6 கிராம ஊராட்சிகளுக்கு வழங்கப்பட்ட தீன் தயாள் உபாத்யாய ஊராட்சிகளை வலிமைப்படுத்தும் விருதுகள்,

திருப்பூர் மாவட்டம், ராவணப்புரம் கிராம ஊராட்சிக்கு வலுவான கிராம சபையின் மூலம் சிறப்பான சாதனைகள் புரிந்தமைக்காக வழங்கப்பட்ட நானாஜி தேஷ்முக் ராஷ்டிரிய கவுரவ கிராம சபை தேசிய விருது, தஞ்சாவூர் மாவட்டம், பட்டீஸ்வரம் கிராம ஊராட்சிக்கு வழங்கப்பட்ட குழந்தைகள் நேய கிராம ஊராட்சிக்கான தேசிய விருது, என தமிழ்நாட்டிற்கு வழங்கப்பட்ட 12 தேசிய விருதுகளை காண்பித்து வாழ்த்து பெற்றார். உடன், தலைமைச் செயலாளர் க.சண்முகம், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை இயக்குநர் டாக்டர் கே.எஸ். பழனிசாமி, ஆகியோர் உள்ளனர்.