தமிழகம்

உலக கோப்பை டென்னிஸ் போட்டியில் வெண்கலம் வென்ற வீரர்களுக்கு தலா ரூ.10 லட்சம் – முதலமைச்சர் வழங்கினார்

சென்னை

முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி 5.11.2019 அன்று தலைமைச் செயலகத்தில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை சார்பில் 4-வது உலகக் கோப்பை வளையப்பந்து (டென்னிகாய்ட்) வாகையர் போட்டியில் குழுப் போட்டிகளில் ஆடவர் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற 3 வீரர்கள், மகளிர் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற 2 வீராங்கனைகள் ஆகியோருக்கு தலா 10 லட்சம் ரூபாய்க்கான காசோலைகளையும், 2018-ம் ஆண்டிற்கான சதுரங்க விளையாட்டில் சர்வதேச மாஸ்டர் பட்டம் வென்ற டி.குகேசுக்கு 3 லட்சம் ரூபாய்க்கான காசோலையும், சென்னையில் தேசிய அளவிலான வளைகோல்பந்து வாகையர் விளையாட்டுப் போட்டிகளை நடத்திய ஹாக்கி யூனிட் ஆஃப் தமிழ்நாடு அமைப்பின் நிர்வாகிகளுக்கு 10 லட்சம் ரூபாய்க்கான காசோலையும் வழங்கினார்.

அகில இந்திய அளவிலும், பன்னாட்டு அளவிலும் நடைபெறும் பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் தமிழகத்தைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பங்கு கொண்டு வெற்றி வாகை சூடும் வகையில் அவர்களுக்கு உரிய பயிற்சி அளித்தல், உயரிய ஊக்கத் தொகை வழங்குதல், சர்வதேச அளவில் பங்கு பெறும் விளையாட்டு வீரர்களுக்கு நிதியுதவி அளித்தல், மாணவர்கள் தங்கி விளையாட்டில் பயிற்சி பெற விளையாட்டு விடுதிகள் ஏற்படுத்துதல், கிராமப்புற விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும் வகையில் கிராம விளையாட்டுப் போட்டிகள் நடத்துதல், மாவட்ட விளையாட்டு மைதானங்களை மேம்படுத்துதல், பாரம்பரிய விளையாட்டுகளை ஊக்குவித்தல் போன்ற பல்வேறு முனைப்பான நடவடிக்கைகளை புரட்சித்தலைவி அம்மா அவர்களின் வழியில் செயல்படும் தமிழ்நாடு அரசு எடுத்து வருகிறது.

அந்த வகையில், கடந்த 31.7.2018 முதல் 9.8.2018 வரை பெலாரஸ் நாட்டின், மின்ஸ்க் நகரில் நடைபெற்ற 4-வது உலகக் கோப்பை வளையப்பந்து (டென்னிகாய்ட்) வாகையர் போட்டிகளில் இந்தியாவின் சார்பாக கலந்து கொண்டு குழு                      போட்டிகளில் ஆடவர் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த இ.அறிவழகன், ஜி.திருஞானம், எஸ்.அபிஷேக் மற்றும் மகளிர் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற எ.ரம்யா மற்றும் கே.கீர்த்தனா ஆகியோருக்கு தலா 10 லட்சம் ரூபாய் வீதம், மொத்தம் 50 லட்சம் ரூபாய்க்கான காசோலைகளையும்,

2018-ம் ஆண்டிற்கான சதுரங்க விளையாட்டின் சர்வதேச மாஸ்டர் பட்டம் பெற்றுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த டி.குகேசுக்கு 3 லட்சம் ரூபாய்க்கான காசோலையும், கடந்த 7.1.2019 முதல் 20.1.2019 வரை சென்னையில் தேசிய அளவிலான வளைகோல்பந்து வாகையர் விளையாட்டுப் போட்டிகளை நடத்திய ஹாக்கி யூனிட் ஆஃப் தமிழ்நாடு நிர்வாகிகளுக்கு 10 லட்சம் ரூபாய்க்கான காசோலையும் என மொத்தம் 63 லட்சம் ரூபாய்க்கான காசோலைகளை முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி 5 விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள், சர்வதேச சதுரங்க மாஸ்டர் பட்டம் வென்ற செல்வன் டி. குகேஷ் மற்றும் ஹாக்கி யூனிட் ஆஃப் தமிழ்நாடு அமைப்பின் நிர்வாகிகள் ஆகியோருக்கு வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் பள்ளிக் கல்வி, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், தலைமைச் செயலாளர் க.சண்முகம், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை முதன்மைச் செயலாளர் தீரஜ்குமார், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் முதன்மைச் செயலாளரும், உறுப்பினர் செயலருமான ரமேஷ் சந்த் மீனா மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.