தற்போதைய செய்திகள்

முறுக்கு மீசை வைத்தவர்கள் கட்டபொம்மன் ஆக முடியாது – அமைச்சர் டி.ஜெயக்குமார் பேட்டி

சென்னை

குதிரையேறியவர்கள் எல்லாம் தேசிங்கு ராஜனாக முடியாது, முறுக்கு மீசை வைத்தவர்களெல்லாம் கட்டபொம்மன் ஆகி விடமுடியாது என்று அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்தார்.

சென்னையில்  மீன்வளம் மற்றும் பணியாளர் நிர்வாக சீர்திருத்தத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

சாதி, மதம் மொழிக்கு அப்பாற்பட்டு, மனித குலத்திற்கும் அப்பாற்பட்டு தெய்வ புலவராக போற்றப்படுபவர் திருவள்ளுவர், முறுக்கு மீசை வைத்தவர் எல்லாம் கட்டபொம்மன் ஆகி விட முடியாது, குதிரையில் ஏறியவர்கள் எல்லாம் தேசிங்குராஜா ஆகி விட முடியாது.

திருவள்ளுவரின் தலையை எடுத்து விட்டு தங்களது தலையை வைத்து விட்டால் அவராக முடியாது. இது ஏற்றுக்கொள்ள
முடியாத செயல். இது போன்ற செயல்களை ஊக்குவிக்க கூடாது, அவை தடுக்கப்பட வேண்டும். அப்படிப்பட்ட சுவரொட்டி ஒட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

திருவள்ளுவர் பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்று அறிவித்தவர், அவரை குறிப்பிட்ட சாதியில் மதத்தில் திணிக்கக் கூடாது, திருவள்ளுவர் உலகம் முழுமைக்கும் பொதுவானவர், தமிழ்நாட்டில் பிறந்து 1330 குறள்களை இயற்றியவர். அவரது குறள் உலகின் பல மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. உலகமெங்கும் திருக்குறளை குழந்தைகளுக்கு ஆரம்ப காலக்கட்டத்தில் இருந்தே கற்றுக்கொடுத்தால் போர் என்பதே இருக்காது.

பெருந்தன்மை இருக்கும் விருந்தோம்பல் இருக்கும் மற்றவரை மதிக்கும் தன்மை இருக்கும். அரசனும் குடிமக்களும் எப்படியிருக்க வேண்டும் என்று நீதிமுறைகளை வகுத்தவர் திருவள்ளுவர். அவரையும் அரசியலாக்குவது உண்மையிலேயே வேதனைப்பட கூடியது வருத்தமளிக்க கூடியது என்று கருதுகிறோம். அதை திருவள்ளுவரும் மன்னிக்க மாட்டார் உலகமும் மன்னிக்காது.

திருவள்ளுவருக்கு சாதி,மதம் இனம் கிடையாது, அவர் எல்லோருக்கும் சொந்தமானவர் திருக்குறளை படித்தவர்கள் முழு மனிதராக உருமாறுவார்கள், படிக்காதவர்கள் அரை மனிதர்கள் .1330 குறள்களை படித்தவர்கள் ஈனச்செயல்களில் ஈடுபட மாட்டார்கள், அவருக்கு சாயம் பூச மாட்டார்கள், சிலையை உடைக்க மாட்டார்கள். உள்ளாட்சித்தேர்தலை பொறுத்தவரை எப்போது வந்தாலும் சந்திக்க தயாராக இருக்கிறோம்.

உள்ளாட்சித்தேர்தலில் முதன்முதலாக மகளிருக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு விதை போட்டார் அம்மா. அதை 2016-ம் ஆண்டு 50 சதவீதமாக உயர்த்தி தேர்தலை நடத்த ஏற்பாடுகள் செய்தார், கிட்டத்தட்ட 1 லட்சம் மகளிருக்கு உள்ளாட்சித் தேர்தலில் பிரதிநிதித்துவம் கிடைத்திருக்கும், ஆனால் உள்ளாட்சித்தேர்தல் வந்தால் கழகம் வெற்றி பெற்று விடும் என்பதால் திடீர் என்று திமுகவினர் நீதிமன்றத்திற்கு சென்று இழுத்தடித்தார்கள். இப்போது உச்சநீதிமன்றத்தின் உத்தரவின்படி தேர்தல் நடைபெறவிருக்கிறது, அதற்கான தேதியை தேர்தல் கமிஷன் அறிவிக்கும், நீங்களோ நானோ அதை பற்றி அறிவிக்க முடியாது,

மலேசிய மணல் விற்பனையில் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி மீது புகார் சொல்வது அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு நடக்கும் செயல். வெளிப்படையான டெண்டர் முறை இருக்கிறது. எல்லா தகவல்களையும் கேட்டு பெறுவதற்கும் மக்களுக்கு உரிமை இருக்கிறது. இந்தநிலையில் மனம்போன போக்கில் முதல்வர் மீது குற்றம் சாட்டக்கூடாது. அந்த குற்றச்சாட்டில்
எள்ளளவும் உண்மையில்லை.

கியார் புயல் காரணமாக குஜராத், மகாராஷ்டிரா,டையூ டாமன் , கேரளம் கர்நாடகம், ஆகிய இடங்களில் தமிழக மீனவர்கள் குறித்து கட்டுப்பாட்டறை மற்றும் மீனவர்கள் சிக்கியதையடுத்து அவர்களின் அமைப்புகளிடம் தகவல் அறிந்து மீட்பு நடவடிக்கையில் இறங்கினோம், 741 படகுகளில் சென்ற 7885 மீனவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டார்கள். 6 படகுகளில் சென்றவர்கள் திரும்பி வராமல் இருந்தார்கள்.

அவர்களின் அடையாளங்கள் குறித்து கடலோர காவல்படை மூலம் அறியப்பட்டிருக்கிறது. எந்த மீனவருக்கும் ஆபத்து இல்லை. பத்திரமாக இருக்கிறார்கள் என்ற தகவல் கிடைத்திருக்கிறது. எல்லா மீனவர்களும் 100 சதவீதம் பாதுகாப்பாக இருக்கிறார்கள். அவர்களுக்கு என்னென்ன உதவிகள் தேவையோ அதனை தமிழக அரசு நிறைவேற்றும்.

இவ்வாறு அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறினார்.