தற்போதைய செய்திகள்

2021 தேர்தலிலும் வெற்றி பெற்று கழகமே மீண்டும் ஆட்சி அமைக்கும் – அமைச்சர்கள் கே.சி.வீரமணி, நிலோபர் கபீல் பேச்சு

வேலூர்

கழகத்திற்கு நாளுக்கு நாள் மக்கள் செல்வாக்கு அதிகரித்து வருவதால் 2021 தேர்தலிலும் வெற்றி பெற்று கழகமே மீண்டும் ஆட்சி அமைக்கும் என்று அமைச்சர்கள் கே.சி.வீரமணி, நிலோபர் கபீல் ஆகியோர் கூறினர்.

வாணியம்பாடியில் உள்ள மாவட்ட கழக அலுவலகத்தில் உள்ளாட்சி தேர்தல் மற்றும் கழக வளர்ச்சி குறித்து ஆலோசனை கூட்டம் வேலூர் மேற்கு மாவட்ட கழக செயலாளரும், வணிகவரி மற்றும் பத்திரப் பதிவுத்துறை அமைச்சருமான
கே.சி.வீரமணி தலைமையில் நடைபெற்றது. வாணியம்பாடி நகர கழக செயலாளர் ஜி.சதாசிவம் வரவேற்று பேசினார்.

முன்னாள் அமைச்சர் ஆர்.வடிவேல், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கோவி.சம்பத்குமார், மாவட்ட கழக துணை செயலாளர்
எ.ஆர்.ராஜேந்திரன், மாவட்ட பிற அணி செயலாளர்கள் ஆர்.வெங்கடேசன், எ.டில்லிபாபு, புலவர் ரமேஷ், ஜனனி, பி.சதீஷ்குமார், ஜிலானி, கோவிந்தசாமி, டி.டி.சி.சங்கர், ஆர்.வி.குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இக்கூட்டத்தில் அமைச்சர்கள் கே.சி.வீரமணி, டாக்டர் நிலோபர் கபீல் ஆகியோர் கூட்டத்தில் கலந்து கொண்டு ஆலோசனை வழங்கி பேசினர். அமைச்சர் கே.சி.வீரமணி பேசியதாவது:-

தமிழ்நாட்டில் மக்கள் என்றுமே கருணாநிதி, மு.க.ஸ்டாலின் ஆகியோரின் பேச்சை நம்புவது கிடையாது. ஒவ்வொரு தேர்தல் நேரத்திலும் பொய் பிரச்சாரங்களை மேற்கொண்டு மக்களை ஏமாற்றி வெற்றி பெறுவதுதான் திமுகவினரின் வழக்கம். பொய் பிரச்சாரங்களை மேற்கொண்டு கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றது போல் விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டமன்ற இடைத்தேர்தலில் வெற்றி பெறலாம் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முயற்சி செய்தார்.

ஆனால் அவரது முயற்சி பலிக்கவில்லை. திமுகவினரின் ஏமாற்று வேலையை மக்கள் நன்கு உணர்ந்து விட்டனர். வருகின்ற எந்த தேர்தலாக இருந்தாலும் கழகம் தான் மகத்தான வெற்றி பெறும். மக்கள் நம் பக்கம் உள்ளனர். மக்கள் செல்வாக்கு நமக்கு உள்ளது.புரட்சித்தலைவி அம்மா அரசின் திட்டங்களை மக்களுக்கு எடுத்து சொன்னாலே போதும் நாம் உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெறுவது உறுதி.

அம்மா அவர்கள் தேர்தல் நேரத்தில் அறிவித்த அனைத்து திட்டங்களையும் ஒன்றுவிடாமல் முதலமைச்சர் எடப்பாடி
கே.பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் நிறைவேற்றி வருகின்றனர். அனைத்து திட்டங்களும் மக்களுக்கு வேகமாக சென்று சேர்ந்து கொண்டிருக்கிறது. கழக ஆட்சியில் தமிழகம் அமைதிப் பூங்காவாக திகழ்கிறது.

வருகின்ற உள்ளாட்சித் தேர்தலில் கழகத் தொண்டர்கள் வேகமாக செயல்பட்டு அல்லும் பகலும் அயராது பாடுபட்டு
கழக வேட்பாளர்களின் வெற்றிக்கு பாடுபட வேண்டும். வருகின்ற 2021-ம் ஆண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தலிலும் அம்மாவின் ஆட்சி மீண்டும் அமைவது உறுதி.

இவ்வாறு அமைச்சர் கே.சி.வீரமணி பேசினார்.

அமைச்சர் டாக்டர் நிலோபர் கபீல் பேசியதாவது:-

முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கட்சியையும், ஆட்சியையும் சிறப்பாக வழி நடத்தி வருகின்றனர். புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரால் உருவாக்கப்பட்டு புரட்சித்தலைவி அம்மா அவர்கள் கட்டிக்காத்த இந்த பேரியக்கத்தை எந்த கொம்பனாலும் அசைத்துப் பார்க்க முடியாது. அம்மா அவர்கள் சொன்னது போல் 100 ஆண்டுகள் ஆனாலும் தமிழகத்தில் கழகம் என்ற பேரியக்கம்தான் மக்கள் பணி செய்யும். மக்களின் நலனில் அக்கறை கொண்ட அரசாக கழக அரசு விளங்குகிறது. அம்மாவின் அரசு மக்களின் தேவைகளை அறிந்து திட்டங்களை தீட்டி சிறப்பாக செயல்படுத்தி வருகிறது.

அம்மாவின் ஆட்சியில் காவேரி – மேட்டூர் கூட்டுக் குடிநீர் திட்டம் மூலம் வாணியம்பாடி நகர மக்களின் குடிநீர் பிரச்சனை நிரந்தரமாக தீர்த்து வைக்கப்பட்டுள்ளது. ரூ.50 லட்சம் செலவில் கால்வாய் சீரமைக்கும் பணிகளும், சாலை பணிகளும் நடைபெற்று வருகிறது. வாணியம்பாடியில் தொழிலாளர் நல வாரிய அலுவலகம், புதிய அரசு தொழிற் பயிற்சி மையம் ஆகியவை கொண்டுவரப்பட்டுள்ளது. ஆலங்காயம் பேரூராட்சியில் ஆரம்பசுகாதார மருத்துவமனை மேம்படுத்த ரூபாய் 1.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள் கட்டமைப்பு பணிகள் வேகமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

உதயேந்திரம் பேரூராட்சியில் ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு சாலை, கால்வாய் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஆண்டியப்பனூர் பகுதியை சுற்றுலாத் தலமாக்க கழக அரசு ரூபாய் 6 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மக்களின் நலனில் அக்கறை கொண்ட அரசாக அம்மாவின் அரசு செயல்பட்டு வருகிறது. ஆகவே வருகின்ற உள்ளாட்சி தேர்தலில் தலைமை அறிவிக்கின்ற கழக வேட்பாளர்களுக்கு வாக்களித்து மகத்தான வெற்றி பெற செய்ய வேண்டும். கழக வேட்பாளர்களின் வெற்றிக்கு கழக நிர்வாகிகள், தொண்டர்கள் அனைவரும் அல்லும் பகலும் அயராது பாடுபட வேண்டும்.

இவ்வாறு அமைச்சர் டாக்டர் நிலோபர் கபீல் பேசினார்.

இக்கூட்டத்தில் வாணியம்பாடி நகர 25 வது வார்டில் திமுக கட்சியை சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர் அக்கட்சியிலிருந்து விலகி அமைச்சர்கள் கே.சி.வீரமணி, டாக்டர் நிலோபர் கபீல் ஆகியோர் முன்னிலையில் கழகத்தில் தங்களை இணைத்து கொண்டனர்.