தற்போதைய செய்திகள்

765 என்ற நவீன துணை மின்நிலையம் விருதுநகர் மாவட்டத்தில் அமைப்பு – சட்டப்பேரவையில் அமைச்சர் பி.தங்கமணி தகவல்…

சென்னை:-

இந்தியாவில் முதன்முறையாக தமிழகத்தில் 765 என்ற நவீன துணை மின்நிலையம் விருதுநகர் மாவட்டத்தில் அமைக்கப்பட இருப்பதாக சட்டப்பேரவையில் அமைச்சர் பி.தங்கமணி தெரிவித்தார்.

இது பற்றிய விவாதம் வருமாறு:-

உறுப்பினர் சு.ரவி: அரக்கோணம் தொகுதி, அரக்கோணம் ஊராட்சி ஒன்றியம், கிருஷ்ணாபுரம் குடியிருப்புப் பகுதியில் 100 KVA திறன் கொண்ட புதிய மின் மாற்றி அமைக்க அரசு முன்வருமா?

அமைச்சர் பி.தங்கமணி: உறுப்பினர் கிருஷ்ணாபுரம் ஊராட்சி, கிருஷ்ணாபுரத்தில் ஒரு புதிய 100 KVA திறன் கொண்ட மின் மாற்றி ஒன்று வேண்டுமென்று கேட்டிருக்கின்றார். ஏற்கெனவே, அங்கு 100 KVA திறன் கொண்ட ஒரு மின் மாற்றி இருக்கின்றது. போதிய மின் பளு இல்லாத காரணத்தினால், அந்த 100 KVA மின் மாற்றியே போதும் என்பதை உறுப்பினருக்கு தெரிவித்துக்கொள்கிறேன்.

உறுப்பினர் சு.ரவி: கிருஷ்ணாபுரம் கிராமத்தில் லோ வோல்டேஜ் இருப்பதாக மக்கள் எல்லோரும் என்னிடத்தில் கோரிக்கை வைத்து கொண்டிருக்கின்றார்கள். அந்த கிருஷ்ணாபுரம் கிராமத்திற்கு என்று தனியாக 100 KVA திறன் கொண்ட ஒரு மின் மாற்றியை அமைத்து தர வேண்டுமென்று கோரிக்கை வைக்கிறேன்.

அமைச்சர் பி. தங்கமணி: உறுப்பினர் கோரிய அந்த கிருஷ்ணாபுரம் கிராமத்தில் மட்டும் நான்கு 100 KVA மின் மாற்றிகளும் மற்றும் ஒரு 63 KVA மின் மாற்றியும் உள்ளன. இதில் இரண்டு 100 KVA மின் மாற்றிகளில் 53 KVA அளவிற்கு மட்டும்தான் மின் பளுகள் உள்ளன. மீதி இரண்டு மின் மாற்றிகள் 60 KVA அளவிற்கு மின் பளு உள்ளது.

அதேபோல் உறுப்பினர் சொன்னதுபோல், விவசாயத்திற்கு அதிகமாக மின் இணைப்புகள் உள்ளதாக சொல்லியிருக்கின்றார். வீட்டினுடைய மின் இணைப்பு 229 மட்டும் உள்ளன. மேலும், 3 மேல்நிலைத் தொட்டிகள் இருக்கின்றன. 56 விவசாய மின் இணைப்பு மட்டும் இருக்கின்ற காரணத்தினால், மின்சாரம் சீரான அளவில் இருக்கின்றன. உறுப்பினர் வோல்டேஜ் குறைவாக இருப்பதாக சொன்னார். காலையில் அதனை நான் ஆய்வு செய்தேன். ஆய்வு செய்கின்றபோது, 210 வோல்டேஜ் இருக்கின்றது. எனவே அங்கும் தேவை இருப்பினும், மின் பளு அதிகமாகும்போது அம்மாவின் அரசு பரிசீலிக்கும்.

உறுப்பினர் சு.ரவி: அமைச்சருக்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். வலதுபுறம் கிருஷ்ணாபுரம், பெருங்களத்தூர், மூதூர், வேலூர், கோணகம் போன்ற கிராமங்களில் நெசவாளர்களும், விவசாய பெருமக்களும் அதிகமாக வாழ்கின்றார்கள். அந்தப் பகுதிகளில் சீரான மின்சாரம் கிடைத்திட வலதுபுறத்தில் ஒரு 33 KV துணை மின் நிலையம் அமைக்க நமது மின் துறையால் நிலம் வாங்கப்பட்டுள்ளது. அந்த இடத்தில் விரைவாக ஒரு துணை மின் நிலையம் அமைத்து தர அமைச்சர் முன் வருவாரா?

அமைச்சர் பி.தங்கமணி: உறுப்பினர் கூறியதைப் பார்க்கின்றபோது, இடம் மின்வாரியத்தினரால் கையகப்படுத்தப்பட்டு இருக்கிறது என்று சொல்லியிருக்கின்றார். முதலமைச்சர் இந்த ஆண்டு 56 துணை மின்நிலையம் அமைப்பதாக விதி 110-ன்கீழ் அறிவிப்பு வெளியிட்டிருக்கிறார். அங்கே இடம் இருக்கின்ற காரணத்தால், முன்னுரிமை அடிப்படையில் உறுப்பினர் சொன்ன அந்தப் பகுதிக்கும் துணை மின் நிலையம் அமைக்கப்படும்.

உறுப்பினர் தங்கம் தென்னரசு: திருச்சூர் தொகுதி, காரியாப்பட்டி பகுதியில் கடுமையாக குறைவான மின்னழுத்தம் இருக்கக்கூடிய காரணத்தால் விவசாயப் பெருமக்கள் பெரிதும் பாதிக்கக்கூடிய சூழ்நிலை இருந்தது. இப்பொழுது, மின்சார வாரியத்திலிருந்து அதை தீர்க்கக்கூடிய வகையிலே 110 கே.வி. துணை மின் நிலையம் அமைப்பதற்காக இடம் உடுக்கன்குளம் கிராமத்தில் வாங்கப்பட்டு, உரிய முன்மொழிவுகள் இப்பொழுது அரசுக்கு அனுப்பப்பட்டிருக்கிறது.

எனவே, அமைச்சர், முதலமைச்சர் அறிவித்ததைப்போல விதி 110-லே இப்பொழுது நிறைய துணை மின் நிலையங்கள் அறிவித்திருக்கிறார். எனவே, இந்த உடுக்கன்குளம் கிராமத்திலும் அந்த 110 கே.வி. துணை மின் நிலையம் அமைப்பதற்கு முதலமைச்சர் ஆவன செய்வாரா? அதேபோல அருகில் இருக்கக்கூடிய வீரசோழன், சேதுபுரம், ரெட்டியார்பட்டி போன்ற கிராமங்களிலும் தேவை இருக்கின்றது. அங்கேயும் வருங்காலங்களிலே அரசு பரிசீலனை செய்யுமா?.

அமைச்சர் பி.தங்கமணி: உறுப்பினர் கூறிய பகுதியில் அரசு நிலங்கள் இருக்கின்றது என்றும், வகை மாற்றத்திற்காக வந்திருக்கின்றது என்றும் சொல்லியிருக்கின்றார். வேறு துறையினுடைய இடமாக இருந்தால் மின் வாரியத்திற்கு மாற்ற வேண்டும். அந்தக் கோப்புகள் எங்கே இருக்கின்றது என்று ஆய்வு செய்து, அந்த நிலத்தை உடனடியாகக் கையகப்படுத்தி துணை மின் நிலையம் அமைப்பதற்குண்டான நடவடிக்கையை மேற்கொள்கின்றோம்.

பொதுவாகவே, மாநிலத்தில் மின்பளு அதிகமாக இருக்கின்ற காரணத்தினாலேதான், எங்கெங்கு தேவை இருக்கின்றதோ, அங்கெல்லாம் துணை மின் நிலையம் அமைக்க வேண்டும் என்பதற்காக, கிட்டத்தட்ட இந்த 8 ஆண்டு காலத்தில் 507 துணை மின் நிலையங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. இதுகாறும் 1682 துணை மின் நிலையங்கள் இருக்கின்றன. அதிலும் குறிப்பாக

இந்த இரண்டு ஆண்டுகளில் சொல்ல வேண்டுமென்றால், 507 துணை மின் நிலையங்களிலே கிட்டத்தட்ட 179 துணை மின் நிலையங்கள், இதுகாறும் இல்லாத அளவிற்கு அம்மா அவர்களுடைய அரசு, முதலமைச்சர் அமைத்துக் கொடுத்திருக்கின்றார். எங்கேயெல்லாம் துணை மின் நிலையங்கள் இருக்கின்றதோ அங்கெல்லாம் மின் பளு குறைவாக இருக்கின்றது. துணை மின் நிலையம் அமைப்பதற்கு இடம் கிடைக்காத காரணத்தினால் பல பகுதிகளில் இதுபோன்ற பிரச்சினைகள் இருக்கின்றன.

அதேபோல, இப்பொழுது உறுப்பினர் அவர்கள் சொன்னதைப் போல தமிழகம் தான் இந்தியாவிலேயே முதன்முதலாக 765 என்ற துணை மின் நிலையம் விருதுநகர் மாவட்டத்திலே அமைக்கவிருக்கின்றது. அதற்கு இடம் தேர்வு செய்யப்பட்டு டெண்டர் எல்லாம் விடப்பட்டிருக்கின்றது. ஆக, இதுபோன்ற துணை மின் நிலையங்கள் அதிகமாக அமைக்கின்றபொழுது, விவசாயத்திற்குத்தான் இந்த․ பிரச்சினை. ஏனென்று சொன்னால், விவசாயத்திற்கு டெல்டா மாவட்டத்தில் 12 மணி நேரமும், மற்ற பகுதிகளுக்கு 9 முணி நேரமும் மின்சாரம் கொடுக்கின்றோம்.

அப்பொழுது நாம் அந்த 3 Phase-ஐ 2 Phase ஆக செய்கின்றபொழுது விவசாயிகள் ஸ்டாட்டரை மேலே தள்ளி அந்த மின் மோட்டாரை மீண்டும் இயக்குகின்றபோதுதான் அதுபோன்ற மின்பளு குறைகின்றன. அதுபோன்ற ஒரு சூழ்நிலை வரக்கூடாது என்பதற்காகத்தான் நாங்கள் முடிந்தவரை agriculture-க்காக தனியே மின்மாற்றி வைக்க வேண்டுமென்று விடுத்தோம். அதனால் அதிக நிதி செலவாகும் என்ற காரணத்தினால், நிதிநிலைகளின் காரணமாக நாங்கள் படிப்படியாக அதை செய்து கொண்டிருக்கின்றோம். இருந்தாலும், விவசாயத்தோடு இருக்கின்ற தொழிற்சாலைகள் இருக்கின்ற பகுதிகள் இதில் மிகவும் பாதிக்கப்படுகின்றது.

விவசாயத்தோடு எங்கெங்கெல்லாம் தொழிற்சாலைகள் இருக்கின்றதோ, அங்கே தொழிற்சாலைகளுக்கு வேண்டும் என்று சொன்னால், நாங்கள் 3 Phase-ஐ 2 Phase ஆக மாற்றும்போது அந்தத் தொழிற்சாலைகள் பாதிக்கப்படுகின்றன. அதுபோன்ற தொழிற்சாலைகளுக்கெல்லாம் முன்னுரிமைகள் கொடுக்க வேண்டுமென்பதற்கு முதலில் நாங்கள் ஒரு ஆய்வு செய்து கொண்டிருக்கின்றோம். விவசாயத்திற்குக் கொடுக்கின்றபொழுது தொழிற்துறை பாதிக்கப்படுகின்ற காரணத்தால் அதை கொடுக்கவேண்டுமென்று ஆய்வு செய்து கொண்டிருக்கின்றோம்.

அப்படி ஆய்வு செய்து எங்கெல்லாம் தொழிற்சாலைகள் இருக்கிறதோ அதற்கும் கொடுக்க வேண்டுமென்றும் என்பதுதான் புரட்சித்தலைவி அம்மா அவர்களுடைய எண்ணம். ஆக, இந்த அடிப்படையிலே துணை மின் நிலையமாக இருந்தாலும் சரி, மின் மாற்றிகளாக இருந்தாலும் சரி இந்த இரண்டு ஆண்டு காலத்தில் வேண்டிய அளவிற்கு நாங்கள் செய்து கொண்டிருக்கின்றோம். உறுப்பினர் அவர்களுடைய கோரிக்கையையும் உடனே பரிசீலித்து, உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு விவாதம் நடைபெற்றது.