தமிழகம்

எடப்பாடி வெள்ளரி வெள்ளி ஏரி 42 ஆண்டுகளுக்கு பிறகு நிரம்பியது – முதலமைச்சர் மலர்தூவி வரவேற்பு

சேலம்

42 ஆண்டுகளுக்கு பிறகு எடப்பாடி வெள்ளரி வெள்ளி ஏரி நிரம்பியது. இதனை முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி பார்வையிட்டு மலர் தூவி வரவேற்றார்.

சேலம் மாவட்டம், எடப்பாடி ஊராட்சி ஒன்றியம், வெள்ளரிவெள்ளி ஊராட்சியில் உள்ள வெள்ளரிவெள்ளி ஏரி சுமார் 52 ஏக்கர் பரப்பளவு கொண்டுள்ளது. இப்பகுதியில் போதிய மழை இல்லாத காரணத்தால் முதலமைச்சரின் சீரிய முயற்சியின் மூலம் மேட்டூர் அணையிலிருந்து கிழக்கு கரை கால்வாய் வழியே வந்து வயலில் பாய்ந்து உபரி நீராக வெளியேறும் தண்ணீரை புதுப்பட்டி என்ற இடத்தில் ரூ.75 லட்சம் மதிப்பீட்டில் கிணறு தோண்டி நீரேற்று நிலையம் அமைத்து, அதிலிருந்து இரண்டு ராட்சத மின் மோட்டார்கள் மூலம் 3.6 கி.மீ தொலைவிற்கு பைப் லைன் மூலம் வெள்ளரிவெள்ளி ஏரிக்கு தண்ணீர் கொண்டு வரப்பட்டது.

மேலும், தாய் திட்டத்தின் மூலம் ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் இந்த ஏரியை தூர்வாரி கரைகள் பலப்படுத்தப்பட்டு, மதகுகள் சீரமைக்கப்பட்டது. இந்த ஆண்டு பருவ மழை போதிய அளவு பெய்ததாலும், நீரேற்று நிலையத்திலிருந்து வந்த உபரி நீரானது வெள்ளரிவெள்ளி ஏரிக்கு வந்தடைந்ததாலும், ஏரி அதன் முழு கொள்ளளவை எட்டி உபரி நீர் வெள்ளரிவெள்ளி ஏரியிலிருந்து வெளியேறி சப்பாணிப்பட்டி வழியாக அரசிராமணி குள்ளம்பட்டி ஏரிக்கு சென்று அங்கிருந்து சரபங்கா ஆற்றினை சென்றடைகிறது. இதன் மூலம் சுற்று வட்டாரத்தில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது. விவசாய நிலங்களில் உள்ள கிணறுகள் மற்றும் ஆழ்துளைக் கிணறுகளில் விவசாயத்திற்கு போதிய நீர் இருப்பதால் இப்பகுதி விவசாயிகள் மிக்க மகிழ்ச்சி அடைந்தார்கள்.

42 ஆண்டுகளுக்கு பிறகு வெள்ளரிவெள்ளி ஏரி முழு கொள்ளளவை எட்டியுள்ளதை முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி நேற்று பார்வையிட்டு வழிந்தோடும் தண்ணீருக்கு மலர் தூவினார். அப்போது அப்பகுதியைச் சார்ந்த சுமார் 500-க்கும் மேற்பட்ட விவசாய பெருமக்கள், பொதுமக்கள் வருகைதந்து முதலமைச்சரை மகிழ்ச்சியுடன் வரவேற்றனர்.