தற்போதைய செய்திகள்

அமைச்சர் கே.பி.அன்பழகன் இல்ல திருமண வரவேற்பு விழா – முதலமைச்சர் பங்கேற்பு

தர்மபுரி

தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் இல்ல திருமண வரவேற்பு விழா கெரகோடஹள்ளியில் ஞாயிற்றுக்கிழமை நடக்கிறது. இந்த விழாவில் முதலமைச்சர் டாக்டர் எடப்பாடி. கே.பழனிசாமி பங்கேற்று மணமக்களை வாழ்த்துகிறார்.

தமிழக உயர்கல்வித்துறை அமைச்சரும், தருமபுரி மாவட்ட கழக செயலாளருமான கே.பி.அன்பழகன்-மல்லிகா ஆகியோரின் இளைய மகன் என்ஜினீயர் அ.சசிமோகன், சென்னையை சேர்ந்த கே.மனோகரன்- குமுதம் ஆகியோரின் மகள் என்ஜினீயர் எம்.பூர்ணிமா ஆகியோரின் திருமணம் கடந்த 30-ந் தேதி திருப்பதி திருமலையில் நடைபெற்றது .இதைத் தொடர்ந்து திருமண வரவேற்பு விழா இன்று (ஞாயிற்றுக்கிழமை) தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே உள்ள கெரகோடஹள்ளி தானப்ப கவுண்டர் மெட்ரிக் பள்ளி வளாகத்தில் பகல் 11 மணிக்கு நடக்கிறது.

இந்த விழாவிற்கு முதலமைச்சரும், கழக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி கே.பழனிசாமி தலைமை தாங்கி மணமக்களை வாழ்த்துகிறார். இந்த விழாவில் கட்சியின் தலைமை கழக நிர்வாகிகள், அமைச்சர்கள், எம்.பி.க்கள் எம்.எல்.ஏ.க்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் பங்கேற்கிறார்கள்.

திருமண வரவேற்பு விழா ஏற்பாடுகளை அமைச்சர் கே.பி.அன்பழகன் தலைமையில் மல்லிகா அன்பழகன், டாக்டர் அ.சந்திரமோகன்-டாக்டர் எஸ்.வைஷ்ணவி, ஒப்பந்ததாரர் பி.ரவிசங்கர்- வித்யா ரவிசங்கர் ஆகியோர் மேற்பார்வையில் கட்சியின் மாநில, மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் செய்து வருகிறார்கள்.

இந்த திருமண வரவேற்பு விழாவில் பங்கேற்க சேலத்தில் இருந்து தருமபுரி மாவட்டத்திற்கு வருகை தரும் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமிக்கு தருமபுரி மாவட்ட எல்லையான தொப்பூரில் கழகம் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது. தொப்பூரிலிருந்து விழா நடைபெறும் கெரகோடஹள்ளி வரை ஆங்காங்கே கொடிகள் தோரணங்கள் கட்டப்பட்டுள்ளன.