சிறப்பு செய்திகள்

யார் வேண்டுமானாலும் கட்சி தொடங்கலாம் ஆனால் ஆட்சி அமைப்பது அஇஅதிமுக தான் – முதலமைச்சர் திட்டவட்டம்

விழுப்புரம்

யார் வேண்டுமானாலும் கட்சி தொடங்கலாம். ஆனால் ஆட்சி அமைப்பது அஇஅதிமுக தான் என்று முதலமைச்சர் திட்டவட்டமாக கூறினார். மேலும் தமிழக அரசியலில் வெற்றிடம் ஏதும் இல்லை என்றும் முதலமைச்சர் கூறினார்.

முதலமைச்சரும், கழக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி கே.பழனிசாமி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தலில் வெற்றிபெறச் செய்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டத்தில் ஆற்றிய உரை வருமாறு:-

விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி இடைத்தேர்தலின் வெற்றி எவ்வாறு இருக்கும் என்று தமிழ்நாடு மட்டுமல்ல இந்திய திருநாடே எதிர்பார்த்துக் கொண்டிருந்தது. நாடாளுமன்றத் தேர்தல் வேறு, சட்டமன்றத் தேர்தல் வேறு என்று பிரித்துக் காட்டிய தேர்தல் இந்த இரண்டு தொகுதிகளின் இடைத்தேர்தல்.

நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின் போது, ஸ்டாலின் பொய்யான வாக்குறுதிகளையும், பொய் மூட்டைகளையும் அவிழ்த்துவிட்டு, நிறைவேற்ற முடியாத திட்டங்களை எல்லாம் நிறைவேற்றுவோம் என்று மக்களை ஏமாற்றி வாக்குகளைப் பெற்றார். சாலையில் விளையாடி கொண்டிருக்கக்கூடிய குழந்தைக்கு மிட்டாயை கொடுத்து ஏமாற்றுவது போல நிறைவேற்ற முடியாத புதிய, புதிய கவர்ச்சியான அறிவிப்புகளை அறிவித்து மக்களை ஏமாற்றி பெற்ற வெற்றி என்று நான் குறிப்பிட்டேன்.

அதற்கு ஸ்டாலின் அண்மையில் ஒரு பேட்டியில், நாடாளுமன்றத் தேர்தலில் மிட்டாய் கொடுத்து திமுக வெற்றி பெற்றதாக முதலமைச்சர் தெரிவித்தார், ஆனால் விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி இடைத் தேர்தலில் முதலமைச்சர் அல்வா கொடுத்து வெற்றி பெற்றாரா என்று கேட்டார். அல்வா கொடுத்து வெற்றி பெறவில்லை, விக்கிரவாண்டி, நாங்குநேரி வாக்காள பெருமக்கள் மிகப்பெரிய அல்வாவை ஸ்டாலினுக்கு கொடுத்துவிட்டார்கள். அது தான் நடந்த உண்மை. திமுக-வின்
பொய் பிரச்சாரம் இந்த தேர்தலில் எடுபடவில்லை. உண்மையும், தர்மமும் நிலைநாட்டப்படுள்ளது. நீதி வென்றது. உண்மையை பேசினோம், வெற்றியை கொடுத்தீர்கள்.

இடைத்தேர்தலில் மிக அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்தீர்கள், மிகப் பெரிய வெற்றி. தமிழ்நாட்டில் இருக்கின்ற அரசியல் கட்சித் தலைவர்கள் மட்டுமல்ல, இந்தியாவில் இருக்கின்ற அரசியல் கட்சித் தலைவர்கள் அனைவரும் திரும்பிப் பார்க்கின்ற அளவிற்கு இந்த இரண்டு தொகுதிகளும் வெற்றியை தந்தன. ஆகவே, ஸ்டாலின் அவர்களே உங்களின் பொய் பிரச்சாரம் எப்பொழுதும் எடுபடாது. என்ன பேசுவதென்றே தெரியாமல் பேசி கொண்டிருக்கிறீர்கள், தவறுதலாக பல வார்த்தைகளை குறிப்பிடுகிறீர்கள், அது நா தவறியும் வரலாம், இல்லையென்று சொல்லவில்லை, ஆனால், நிலை தடுமாறி பேசுகின்ற நிலையை தான் எங்களுடைய துணை ஒருங்கிணைப்பாளர் இங்கே சுட்டிக் காட்டினார்.

அடுத்த தேர்தலில் நாங்கள் வெற்றி பெறுவோம் என்று இப்பொழுது பலர் புறப்பட்டு விட்டார்கள். இந்த தேர்தல் வெற்றியை பார்த்தும் அவர்களுக்கு இப்படி ஒரு எண்ணம் வருகிறதா என்கின்ற சந்தேகம் எங்களுக்கு வருகிறது. இது சாதாரண வெற்றியா? இந்த வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி மக்கள் அளித்திருக்கிறார்கள். இதனைப் பார்த்தும், சிலர் நான் கட்சியை தொடங்குவேன் என்கின்றனர், சிலர் நாங்கள் தான் ஆட்சிக்கு வருவோம் என்று கொக்கரித்து கொண்டிருக்கிறார்கள். யார்? என்பது மக்களுக்கே தெரியும். சில நாட்கள் இங்கேயும், சில நாட்கள் வெளியிலேயும் இருப்பார்கள், எங்கிருப்பார்கள் என்பது நாட்டு மக்களுக்குத் தெரியும்.

67, 68 ஆண்டு காலம் வேறு தொழிலில் இருந்துவிட்டு இப்பொழுது இதை தொழில் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள், இது அரசியல். இரவு, பகல் பாராமல் உழைப்பவர்களால் தான் மக்களின் நன்மதிப்பை பெற முடியும் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். திடீரென்று பிரவேசித்து, உடனே பதவிக்கு வந்துவிட முடியாது. அப்படிப்பட்ட மக்களும் தமிழ்நாட்டு மக்கள் அல்ல. எடை போட்டுப் பார்த்து சீர் தூக்கி வாக்களிக்கக்கூடிய மக்கள் தமிழ்நாட்டு மக்கள் என்பதை பல தேர்தல்களில் நிரூபித்துக் காட்டியுள்ளார்கள். யார் வேண்டுமானாலும் கட்சி ஆரம்பிக்கலாம். ஆனால் ஆட்சிக்கு வருவது அஇஅதிமுக ஒன்று தான் என்பதை ஆணித்தரமாக மக்கள் முடிவு செய்திருக்கிறார்கள்.

பொன்மனச் செம்மல் புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். முதலில் சட்டமன்ற உறுப்பினராக இருந்து நாட்டு மக்களுக்கு நன்மை செய்தார், பல ஆண்டு காலமாக மக்களுக்கு சேவை செய்தார். பலமுறை சட்டமன்ற உறுப்பினராக இருந்து மக்களின் அன்பைப் பெற்றார். தான் வாழ்நாளில் சாதிக்க நினைத்ததை திரைப்படங்களில் நடிக்கும் பொழுதே மக்களுக்கு எடுத்துச் சொன்னார். ஆனால், விஷமிகளாக இருக்கின்ற சில துரோகிகள் அவரின் உழைப்பை மட்டும் பெற்றுக் கொண்டு, அவர் பதவிக்கு வருவதை விரும்பவில்லை, அவருக்கு கொடுக்கின்ற அந்தஸ்தை கூட கொடுக்க மறுத்த காரணத்தினால் தான், மக்களுக்கு நன்மை செய்ய முடியாத நிலை இருந்த காரணத்தினால் தான், பேரறிஞர் அண்ணா கண்ட கனவை நனவாக்க வேண்டுமென்பதற்காக அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற அமைப்பை உருவாக்கினார்.

அவருக்கு இணையாக எந்தவொரு தலைவரும் திரைத்துறையிலிருந்து வர முடியாது என்பதை மக்கள் முடிவு செய்திருக்கிறார்கள். தன் உயிர் இருக்கும் வரை நாட்டு மக்களுக்காக உழைத்த ஒப்பற்ற தலைவர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்.. அதேபோல, இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் பொன்மனச்செம்மல் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் ஒரே அரசியல் வாரிசாக அடையாளம் காட்டப்பட்டவர். அம்மா அவர்கள் காலத்தில் ஏராளமான நலத் திட்டங்களை மக்களுக்கு வழங்கினார். கிராமத்திலிருந்து நகரம் வரை ஏழை, எளிய மக்கள் உயர்நிலையை அடைவதற்கு அடித்தளமாக விளங்கிய ஒரே தலைவி புரட்சித்தலைவி அம்மா அவர்கள்.

உங்களை போல் வீட்டிலிருந்து பேட்டி கொடுப்பவர் அல்ல. உழைப்பின் மூலமாக மக்களுக்கு அடையாளம் காட்டப்பட்ட தலைவர்கள் இருபெரும் தலைவர்களாவார்கள்.அண்ணா திராவிட முன்னேற்றக் கழக இயக்கம் உழைப்பால் உயர்ந்த இயக்கம். அரசியலில் எத்தனையோ கட்சித் தலைவர்கள் வருகிறார்கள், ஆனால் காணாமல் போய் விடுகிறார்கள். இந்த இயக்கதை உடைக்க வேண்டுமென்று எவ்வளவோ முயற்சி செய்தார்கள். நிர்வாகிகள், தொண்டர்கள் என அனைவரும் ஒன்று சேர்ந்து அந்த முயற்சியை வேரோடு சாய்த்துக் காட்டிய இயக்கமாக அஇஅதிமுக திகழ்கிறது.

அதேபோல், நம்முடைய கூட்டணி பலம் பொருந்திய கூட்டணி. யாரும் நெருங்க முடியாத கூட்டணியை நாங்கள் அமைத்திருக்கிறோம். கழக தொண்டர்களால் சூழப்பட்ட இயக்கம், தொண்டர்களுடைய உழைப்பால் உருவாக்கப்பட்ட இயக்கம், தொண்டர்களுடைய உழைப்பால் இந்த நாட்டு மக்களுக்கு எண்ணற்ற திட்டங்களை வாரி, வாரி வழங்கிக் கொண்டிருக்கக்கூடிய இயக்கம், அஇஅதிமுக இயக்கம், அரசு, அஇஅதிமுக அரசு.

நம்முடைய கூட்டணியில் இடம் பெற்றிருக்கக்கூடிய பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனத் தலைவர் டாக்டர் ராமதாஸ் இரவு, பகல் பாராமல் நாட்டு மக்களுக்கு பல்வேறு திட்டங்கள் வருவதற்கு முன்னோடியாக விளங்கிக் கொண்டிருக்கிறார். தே.மு.தி.க. தலைவர் கேப்டன் விஜயகாந்த் நாட்டு மக்களுக்கு நன்மை செய்ய வேண்டுமென்பதற்காக தன் உடல்நிலையைக்கூட பொருட்படுத்தாமல் தினந்தோறும் அறிவிப்புகளை கொடுத்துக் கொண்டிருக்கிறார். தமிழகம் வளர வேண்டும், தமிழகத்தில் இருக்கின்ற மக்களுக்கு நன்மை கிடைக்க வேண்டுமென்று அரசுக்கு துணையாக, பக்கபலமாக அவர்கள் இருந்து கொண்டிருக்கிறார்கள்.

பாரம்பரியம் மிக்க குடும்பத்தை சேர்ந்த தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் மற்றும் சமத்துவ மக்கள் கட்சியும் நம்முடைய கூட்டணியில் அங்கம் வகித்திருக்கிறார்கள். இவர்கள் அனைவரும் ஒன்றாக இணைந்து ஒருமித்த கருத்தோடு செயல்பட்டதன் விளைவால் தான் மிகப்பெரிய வெற்றியை வாக்காளர்கள் தந்திருக்கிறார்கள்.ஸ்டாலின் விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி சட்டமன்றத் தொகுதிகளில் கிட்டத்தட்ட 12 நாட்கள் முகாமிட்டு பல்வேறு கூட்டங்களில் “இந்த விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி சட்டமன்ற இடைத்தேர்தல்களின் வெற்றி அடுத்து வருகின்ற உள்ளாட்சி மற்றும் 2021 சட்டமன்றத் தேர்தலுக்கு ஒரு முன்னோடி” என்று தெரிவித்தார். இரண்டு தேர்தல்களிலும் திமுக வெற்றி பெறும், திமுக கூட்டணி வெற்றி பெறும், எனவே, அடுத்து வருகின்ற தேர்தல்களிலும் திமுக தான் வெற்றி பெறுமென்ற ஒரு நிலைப்பாட்டை எடுத்து வைத்தார்.

உங்களுக்கு அந்த வாய்ப்பு இல்லை. ஏனென்றால், நாடாளுமன்றத் தேர்தலில் மக்களை ஏமாற்றி விட்டீர்கள், ஆகவே, அந்த வாய்ப்பு உங்களுக்கு மறுக்கப்படுகிறது என்று அதற்கு இந்த இரண்டு தொகுதி வாக்காளப் பெருமக்களும் சம்மட்டி அடி கொடுத்தார்கள். நீங்கள் கூறியதை நிரூபிக்கின்ற வகையில் கழக கூட்டணி தான் வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தல் மற்றும் 2021-ம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலிலும் வெற்றி பெறும். அவர் சொன்னதைப் போல் இந்த வெற்றியின் மூலம் நம்முடைய இயக்கத்திற்கும், நமது கூட்டணி கட்சிக்கும் ஒரு அங்கீகாரம் கிடைத்திருக்கிறது.

வேலூர் நாடாளுமன்றத் தேர்தலில் லட்சக்கணக்கான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் என்று கூறினார். காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சி, இன்னும் பல கட்சிகள் ஒன்றாகச் சேர்ந்து திமுகவினர் போட்டியிட்டார்கள். அதிகார போதையில், அகம்பாவத்தோடு பேசினார் ஸ்டாலின். குடியாத்தம் சட்டமன்றத் தொகுதியில் நடைபெற்ற இடைத் தேர்தலில் திமுக வேட்பாளர் 28 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அதன் பின், 70 நாட்களுக்குப் பிறகு நடைபெற்ற வேலூர் நாடாளுமன்றத் தேர்தலில் கழக வேட்பாளர் 12 ஆயிரம் வாக்குகள் அதிகமாக பெற்றார்.

இனி எந்தத் தேர்தல் வந்தாலும் கழக கூட்டணி தான் வெற்றி பெறும் என்று மக்கள் முடிவு செய்து விட்டார்கள் என்று அப்பொழுதே தெரிந்து விட்டது. இது சாதாரண வெற்றியல்ல. அஇஅதிமுக, பா.ம.க., தே.மு.திக. த.மா.கா. மற்றும் நமது கூட்டணியில் அங்கம் வகிக்கின்ற கட்சிகளின் நிர்வாகிகள், தொண்டர்களின் முகமலர்ச்சியை பார்க்கின்றபொழுது இது மிகப்பெரிய வெற்றி. இந்த வெற்றி உங்களால் கிடைத்த வெற்றி. விக்கிரவாண்டி தொகுதியில் 45 ஆயிரம் ஓட்டு வித்தியாசத்திலும், நாங்குநேரியில் 34 ஆயிரம் வாக்கு வித்தியாசத்திலும் வெற்றியை தேடித் தந்திருக்கிறீர்கள்.

வாக்காளர்களிடம் நாங்கள் வெற்றி பெற்றால் என்ன செய்வோம் என்று உண்மையை சொன்னோம். அதனால் இந்த வெற்றி.
அதுமட்டுமல்ல, திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ளவர்கள் அஇஅதிமுக வெற்றிடம், வெற்றிடம் என்று கொக்கரித்துக் கொண்டிருந்தவர்களுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்த தேர்தல் இந்த சட்டமன்ற இடைத் தேர்தல். எங்கே வெற்றிடம் இருக்கிறது. நம்முடைய வேட்பாளர்கள் இவ்வளவு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்கள்.

வெற்றிடம் என்ற நிலை இனி தமிழகத்தில் இல்லை என்ற நிலையை இந்த தேர்தலிலே மக்கள் நிரூபித்து காட்டியிருக் கிறார்கள், நற்சான்றிதழை கொடுத்திருக்கிறார்கள். திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் ஸ்டாலின் இந்த இடைத்தேர்தல் எங்களுக்கு நற்சான்றிதழ் கொடுக்கின்ற தேர்தலாக இருக்குமென்று சொன்னார். அவருக்கு நற்சான்றிதழ் கொடுக்கவில்லை, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சிக்கு நற்சான்றிதழ் கொடுத்த தேர்தல் இந்த இடைத்தேர்தல். இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா மறைவிற்குப் பிறகு எவ்வளவோ சோதனைகளை சந்தித்தோம்.

திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் ஸ்டாலின் எப்பொழுது பார்த்தாலும் போராட்டத்தை தூண்டிவிடுவார், எப்படியாவது இந்த ஆட்சிக்கு நெருக்கடி கொடுத்து, அதன் மூலமாக மக்களிடம் வெறுப்புணர்ச்சி ஏற்படுத்த வேண்டும், அதன் மூலமாக இந்த ஆட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்த வேண்டும், இதுதான் அவரது குறிக்கோளாக இருந்தது, ஆக்கப்பூர்வமான கருத்தை எப்பொழுதும் எடுத்துரைக்கவில்லை. இன்றைக்கு அவருடைய எண்ணமெல்லாம் நிராசையாகி விட்டது. ஸ்டாலின் ஆட்சியை கவிழ்க்கலாம் என்று நினைத்தார், அதுவும் நடைபெறவில்லை, கட்சியை உடைக்கலாமென்று நினைத்தார், அதுவும் நடைபெறவில்லை, இடைத்தேர்தலில் வெற்றி பெறலாம் என நினைத்தார், அதுவும் நிராசையாகி விட்டது.

அவரது எண்ணங்களையெல்லாம் மக்கள் தவிடுபொடியாக்கி விட்டார்கள். ஸ்டாலின் முதலமைச்சராக வேண்டுமென்று நினைக்கிறார், நாங்களா வேண்டாம் என்றோம். உங்களுக்கு அந்த கொடுப்பனை இல்லை, நல்ல எண்ணம் இருந்தால்தான் முதலமைச்சராக ஆகமுடியும். அவரது அப்பா இருக்கும் வரைக்கும் திமுக கட்சிக்கு தலைவராக ஆக முடியவில்லை. கருணாநிதியே ஸ்டாலினை நம்பவில்லை. ஏனென்றால், கருணாநிதி இரண்டாண்டுகள் உடல்நிலை சரியில்லாமல் பேசமுடியாத நிலையில் இருந்தபோதுகூட தனது மகனுக்கு கட்சித் தலைவர் பதவி கொடுக்கவில்லை, செயல் தலைவர் பதவி தான் கொடுத்தார். உங்களுடைய தந்தையே உங்களை நம்பாதபொழுது, இந்த நாட்டு மக்கள் எப்படி உங்களிடம் தமிழ்நாட்டை ஒப்படைப்பார்கள் என்று எண்ணிப் பார்க்க வேண்டும்.

ஆகவே, ஸ்டாலினால் ஒன்றும் முடியவில்லை. எப்பொழுதும், ஊழல், ஊழல் என்பார், ஆனால் இந்த இடைத்தேர்தல் வெற்றிக்குப் பிறகு அதை நிறுத்தி கொண்டு விட்டார். எவ்வளவு திட்டங்களை நாங்கள் நிறைவேற்றியிருக்கிறோம், எவ்வளவு விருதுகளை பெற்றிருக்கிறோம். உள்ளாட்சித் துறையில் சிறப்பான திட்டங்கள் நிறைவேற்றியதன் காரணமாக 11 தேசிய விருதுகளை பெற்றிருக்கிறோம். மின்சாரத் துறையில், அதிக மின்சாரம் உற்பத்தி செய்து விருதைப் பெற்ற அரசு அம்மாவினுடைய அரசு. உயர்கல்வித் துறையில், இந்தியாவிலேயே உயர்கல்வி படிக்கக்கூடிய மாணவர்களின் எண்ணிக்கை தமிழகத்தில் 49 சதவீதம் அடைந்து, விருதுகளை பெற்றிருக்கிறோம்.

வைத்திலிங்கம் வேளாண்மைத் துறை அமைச்சராக இருந்ததிலிருந்து துரைக்கண்ணு வரை தொடர்ந்து உணவு தானிய உற்பத்தியில் தன்னிறைவு பெற்று, இந்தியாவிலேயே முதலிடத்தை பெற்றுள்ளது, மேலும் ஐந்தாண்டுகள் தொடர்ச்சியாக க்ருஷி கர்மான் விருதைப் பெற்றிருக்கிறோம். போக்குவரத்துத்துறை, சமூக நலத்துறை, சுகாதாரத் துறைகளில் விருதுகளை பெற்றிருக்கிறோம்.

இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் 2011-ல் முதலமைச்சராகப் பொறுப்பேற்றது முதல் தற்போது வரை கடந்த 8 ஆண்டுகளில் கல்வித்துறையில் பல்வேறு உள்கட்டமைப்பு வசதிகளை உருவாக்கி மாணவ, மாணவிகளுக்கு சிறந்த கல்வியை அம்மாவின் அரசு வழங்கி கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகளுக்கு 43,584 புதிய ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். புதிதாக 248 ஆரம்ப பள்ளிகள் துவக்கப்பட்டுள்ளன. 117 துவக்கப்பள்ளிகள் நடுநிலைப்பள்ளிகளாகவும், 1079 நடுநிலைப்பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாகவும், 604 உயர்நிலைப்பள்ளிகள் மேல்நிலைப்பள்ளிகளாகவும் தரம் உயர்த்தப்பட்டுள்ளன.

ஏழை, எளிய மாணவ, மாணவிகள் விஞ்ஞானபூர்வமான அறிவினை பெற்றிட வேண்டும் என்பதற்காக அம்மா அவர்களின் அரசு கடந்த 8 ஆண்டுகளில் 54 லட்சம் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மடிகணினிகளை வழங்கி உள்ளது. 2019-20-ம் கல்வியாண்டில் மட்டும் பள்ளி செல்லும் குழந்தைகளுக்காக ரூ.2578.86 கோடி மதிப்பில் நலத்திட்டங்கள் வழங்கப்பட்டுள்ளன. கல்வியில் பல்வேறு புதிய திட்டங்களை செயல்படுத்தி புரட்சி செய்துவரும் அம்மாவின் அரசு கல்வித் துறைக்காக, மத்திய அரசின் 10 பரிசுகளை பெற்றுள்ளது. உயர்கல்வியை பொறுத்தவரையில் கடந்த 8 ஆண்டுகளில் அம்மாவின் அரசு புதிதாக 65 கல்லூரிகளை தொடங்கி உள்ளது. இன்று இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் உயர்கல்வி படிக்கும் மாணவ, மாணவிகளின் எண்ணிக்கை 49 சதவீதமாக உள்ளது.

கடந்த 8 ஆண்டுகளில், விழுப்புரம், தருமபுரி, ராமநாதபுரம், புதுப்பாக்கம், பட்டறைப்பெரும்புதூர், சேலம், நாமக்கல் மற்றும் தேனி ஆகிய 8 இடங்களில் புதியதாக அரசு சட்டக் கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளன. சமூக நலத்துறையின் மூலம் தாலிக்குத் தங்கம் வழங்கும் திட்டத்தின் கீழ் 4 கிராம் தங்கத்தை 8 கிராமாக உயர்த்தி வழங்கிய அரசு அம்மாவின் அரசு. அதன்படி, 2011-ம் ஆண்டு முதல் 2019-ம் ஆண்டு வரை 11,45,910 பயனாளிகளுக்கு ரூ.1499.86 கோடி மதிப்பிலான 5260.72 கிலோ கிராம் தங்கமும், நிதி உதவியாக ரூ.3955.95 கோடியும் வழங்கிய அரசு அம்மாவின் அரசு.

ரூபாய் 2057.09 கோடி மதிப்பில் மாற்று திறனாளிகளுக்கு மோட்டார் பொருத்திய 3 சக்கர வண்டி, 3 சக்கர சைக்கிள், தையல் இயந்திரம், சலவை பெட்டி, விதவைகள் மாதாந்திர ஓய்வூதியம் போன்ற நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. மேலும், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் துறை மூலம் 951.96 கோடி ரூபாய் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.

வேளாண்மை மற்றும் தோட்டக்கலைத்துறையின் மூலமாக சொட்டு நீர் பாசனம் அமைக்க, 1 ஏக்கர் நிலம் உள்ள விவசாயிகளுக்கு 100 சதவீத மானியமும், அதற்குமேல் நிலம் உள்ள விவசாயிகளுக்கு 75 சதவீத மானியமும் அம்மாவின் அரசால் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 8 ஆண்டுகளில் 3.37 லட்சம் எக்டரில் சொட்டு நீர் பாசனம் அமைக்க ரூ.1,865.55 கோடி மானியமாக வழஙகப்பட்டு, இதன் மூலம் 3,49,400 விவசாயிகள் பயனடைந்துள்ளனர்.

உணவு தானிய உற்பத்தியில் சாதனை படைத்த அரசு அம்மாவின் அரசு. அரசின் பல்வேறு ஒருங்கிணைந்த முயற்சிகளினால் கடந்த எட்டு ஆண்டுகளில் இதுவரை 6 முறை தமிழ்நாட்டில் உணவு தானிய உற்பத்தி 100 லட்சம் மெட்ரிக் டன்களை கடந்து சாதனை படைத்துள்ளது. இதற்காக மத்திய அரசு, கிருஷி கர்மான் விருதினை 5 முறை தமிழகத்திற்கு வழங்கி சிறப்பித்துள்ளது.

விவசாயிகள் பயிரிட்ட மக்காச்சோளப் பயிரில் அமெரிக்கன் படைப்புழுவினால் ஏற்பட்ட பாதிப்பிற்கு நிவாரணமாக அம்மாவின் அரசினால் 2 லட்சத்து 93 ஆயிரத்து 424 விவசாயிகளுக்கு ரூ.186 கோடியே 25 லட்சம் உதவித் தொகை வழங்கப்பட்டுள்ளது. மேலும், மக்காச்சோளப் பயிர்களுக்கு சுமார் ரூ.48 கோடி செலவில் மருந்து தெளிப்பு பணியினை 87,000 ஹெக்டேர் நிலங்களில் 2 முறை மேற்கொள்ள அரசு நடவடிக்கை எடுத்த அரசு அம்மாவின் அரசு.

விவசாயிகளுக்காக எந்த திட்டத்தை அறிவித்தால் அவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்பதை நன்கு அறிந்து, அதற்கான திட்டங்களை அம்மாவின் அரசு செயல்படுத்தி வருகிறது. “உழவன்” என்ற கைபேசி செயலி தற்போது நடைமுறையில் உள்ளது. இந்த செயலி மூலம் உழவர்கள் அவர்களுக்கு அன்றாடம் தேவையான உழவுத்தொழில் சம்மந்தமான அனைத்து விவரங்களையும் தெரிந்து கொள்ளலாம்.

குறிப்பாக அரசு மூலம் என்னென்ன மானியத்திட்டங்கள் உள்ளது என்பதையும், விளைவித்த பொருட்களின் சந்தை நிலவரம் பற்றியும், விவசாயத்துக்கு தேவையான இடுபொருட்கள் பெறுவதற்கு பதிவு செய்வது குறித்தும், பயிர் காப்பீடு செய்வதற்கான வழிவகை, பயிருக்கு தேவையான உரங்கள், விதைகள் இருப்பு குறித்தும், வேளாண் இயந்திரங்கள் வாடகைக்கு எடுத்து பயன்படுத்துவது, வானிலை முன்னறிவிப்பு பற்றியும் என இது போன்ற 15 சேவைகளை அறிந்துகொள்ளலாம். இச்செயலியை சுமார் 5 லட்சத்து 10 ஆயிரம் விவசாயிகள் பயன்படுத்துகிறார்கள்.

மேலும், “என் பண்ணை வழிகாட்டி” என்ற சேவை மூலம் விவசாயிகளுக்கு விதைப்பு முதல் அறுவடை வரையிலான பல்வேறு சந்தேகங்களுக்கு உடனுக்குடன் தீர்வு அளிப்பதோடு, செயற்கை நுண்ணறிவு மென்பொருள் வாயிலாக பூச்சி மற்றும் நோய் பாதிப்புகளைக் உடனுக்குடன் கண்டறிந்து தீர்வும் வழங்கப்பட்டு வருகிறது. ஏழை, எளிய மக்களுக்கும் உயரிய மருத்துவ சேவை வழங்கிடும் வகையில் அம்மாவின் அரசு தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. கடந்த 8 ஆண்டுகளில் 254 புதிய ஆரம்ப சுகாதார நிலையங்கள் துவங்கப்பட்டும், 165 ஆரம்ப சுகாதார நிலையங்கள் மேம்படுத்தப்பட்டும் உள்ளன. அம்மாவின் அரசால் கடந்த 7 ஆண்டுகளில் 6 மருத்துவ கல்லூரிகள் தொடங்கப்பட்டன. இந்தாண்டு மட்டும் திருப்பூர், நீலகிரி, ராமநாதபுரம், திண்டுக்கல், நாமக்கல் மற்றும் விருதுநகர் ஆகிய 6 மாவட்டங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகள் அம்மாவின் அரசால் தொடங்கப்பட உள்ளன என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதி உதவித் திட்டத்தின் கீழ் 60.48 லட்சம் கர்ப்பிணி தாய்மார்களுக்கு ரூ.5,236.88 கோடி நிதியுதவியாக வழங்கப்பட்டுள்ளது. பிறக்கின்ற குழந்தைக்கும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் ஒரே அரசு அம்மாவின் அரசு. கிராமப்புறங்களில் வாழும் எழை எளிய மக்களின் வாழ்வு ஏற்றம் பெற வேண்டும் என்ற உயரிய எண்ணத்தில் அம்மாவின் அரசால் விலையில்லா ஆடுகள் வழங்கும் திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதுவரை 10,22,152 பயனாளிகளுக்கு 40,88,608 வெள்ளாடுகள், செம்மறியாடுகள் ரூபாய் 1321.94 கோடி மதிப்பில் வழங்கப்பட்டுள்ளன. இதன் மூலம் 77,68,460 ஆட்டுக் குட்டிகள் கிடைக்கப் பெற்றுள்ளது.

அம்மாவின் அரசு மேற்கொண்டு வரும் பல்வேறு தொடர் நடவடிக்கையால் தற்போது புதிய தொழில் தொடங்க உகந்த மாநிலமாக தமிழ்நாடு திகழ்ந்து வருகிறது. 2019-ல் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் 304 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் 3 லட்சத்து 431 கோடி ரூபாய் அளவிற்கு முதலீடுகள் ஈர்க்கப்பட்டு 10.50 லட்சம் படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு உருவாக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

விழுப்புரம் – சேலம் மாவட்டத்திற்கு இடையே தலைவாசலில் 900 ஏக்கர் நிலப்பரப்பில் ரூ.396 கோடி மதிப்பில் உலகத்தரம் வாய்ந்த கால்நடைப்பூங்கா அமைக்கப்படவுள்ளது. இப்பூங்காவில் கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் அமைக்கப்படுவதோடு, உயர்ரக கறவை மாடுகள் உற்பத்தி செய்து விவசாயிகளுக்கு வழங்கப்பட உள்ளது.

விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் வாக்கு சேகரிக்க வந்தபொழுது பொது மக்கள் தெரிவித்த கோரிக்கைகள் அம்மாவின் அரசால் நிறைவேற்றித் தரப்படும். இந்தத் தொகுதி மக்களின் நீண்டநாள் கோரிக்கையான தீயணைப்பு நிலையம் அமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று விரைவில் விக்கிரவாண்டியில் தீயணைப்பு நிலையம் அமைக்கப்படும். கெடார், மாம்பழப்பட்டு கிராமங்களிலுள்ள அரசு மகளிர் உயர்நிலைப்பள்ளிகள் மேல்நிலைப்பள்ளிகளாக வரும் ஆண்டில் தரம் உயர்த்தப்படும்.

அன்னியூர் பகுதியில் புதிய துணை மின்நிலையம் அமைக்கப்படும். விழுப்புரம் – திருக்கோவிலூர் சாலை சந்திப்பில் அமைக்கப்பட்டுள்ள உயர் மட்ட பாலத்திற்கு இரு மருங்கிலும் இணைப்புச்சாலை அமைக்க 5.35 கோடி ரூபாய் மதிப்பீட்டில் விரைவில் இணைப்புச்சாலை அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்படும்.விக்கிரவாண்டி அண்ணாசிலை அருகில் உள்ள பைபாஸ் சாலையில் விபத்துக்களை தவிர்க்க விரைவில் மேம்பாலம் அமைக்கப்படும்.

விழுப்புரம் – மாம்பழப்பட்டு – திருக்கோவிலூர் சாலையில் பிரிந்து, கொன்னங்குப்பம், பள்ளியந்தூர், காங்கயனூர் வழியாக மல்லிகைப்பட்டு சாலையில் இணையும் சாலையில் ரூபாய் 7 கோடி செலவில் புதிய உயர்மட்டப் பாலம் கட்ட திட்ட அறிக்கை உத்தரவிட்டுள்ளேன், இதன்மூலம் 1 லட்சம் மக்கள் பயன்பெறுவர்.

மைலாமூர் – சாணிமேடு சாலையில் காணை கிராமம் குறுக்கே செல்லும் பம்மை ஆற்றின் குறுக்கே ரூபாய் 2 கோடி செலவில் புதிய மேம்பாலம் அமைக்க திட்ட அறிக்கை தயாரிக்க உத்தரவிட்டுள்ளேன்.தும்பூர், காணை மற்றும் கெடார் ஆகிய 3 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் 30 படுக்கை வசதி கொண்ட மருத்துவமனையாக தரம் உயர்த்த கோரிக்கை வைக்கப்பட்டன. இந்த மூன்று ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், முதற்கட்டமாக 10 படுக்கை வசதி கொண்ட உள்நோயாளிகள் பிரிவு விரைவில் துவக்கப்படும். கெடார் கிராம விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று ரூபாய் 1 கோடியே 50 லட்சம் செலவில் நபார்டு வங்கி உதவியுடன், 1000 மெட்ரிக் டன் கொள்ளவில் தானிய சேமிப்பு கிடங்கு விரைவில் அமைக்கப்படும்.

வி.சாத்தனூர், ஆசூர், கொட்டியாம்பூண்டி, மேலகொந்தை, மற்றும் பொன்னங்குப்பம் பகுதிகளில் வசிக்கும் விவசாயிகளின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்யப்படும்.விக்கிரவாண்டி பேரூராட்சியின் குடிநீர் பற்றாக்குறையை போக்க 85 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய திறந்தவெளி கிணறு அமைக்க ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது. விரைவில் பணிகள் துவங்கப்படும்.டாக்டர் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் கூனிமேடு அருகில் 60 மில்லியன் லிட்டர் திறன் கொண்ட கடல்நீரை குடிநீராக்கும் நிலையம் ஒன்றை அமைக்கப்படும் என்று அறிவித்திருந்தேன். தற்போது இதற்கான 611 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டுள்ளது. விரைவில் நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் துவங்கப்படும்.

இதன் மூலம் இப்பகுதியில் உள்ள விக்கிரவாண்டி பேரூராட்சி, விக்கரவாண்டி ஒன்றியம், காணை ஒன்றியம் உட்பட 265 குடியிருப்புகளில் வசிக்கும் மக்களின் குடிநீர் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காணப்படும்.ஊரக வளர்ச்சித்துறை மூலம் அனைத்து கிராமங்களிலும் குடிநீர், தெருவிளக்கு, சாலை வசதிகள் போன்ற அடிப்படை வசதிகளை மேம்படுத்த அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளேன். மேலும் நல்லாபாளையத்தில் இருந்து, அடுக்கம் கிராமத்திற்கு பாலத்துடன் கூடிய 1.75 கி.மீ. புதிய சாலை அமைக்க 2 கோடியே 10 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. அன்னியூர்-திருக்குளம் கிராமங்களை இணைக்கும் வகையில் இணைப்புச்சாலை அமைக்க சுமார் 50 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

விழுப்புரம் மாவட்ட மக்களின், குறிப்பாக விக்கரவாண்டி பகுதி விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையான நந்தன் கால்வாய் திட்டத்திற்காக வரைவு செயல் திட்ட அறிக்கை பொதுப்பணித்துறையின் மூலம் தயாரிக்கப்பட்டு வருகிறது.
நந்தன் கால்வாய் திட்டமானது திருவண்ணாமலை மாவட்டம், சம்பந்தனூர் கிராமத்தில் துரிஞ்சலாற்றின் குறுக்கே உள்ள கீரனூர் அணைக்கட்டில் இருந்து இடது புறமாக கால்வாய் வெட்டி துரிஞ்சலாற்றில் கிடைக்கும் உபரி நீரினை பாசனத்திற்கு எடுத்துச்செல்லும் திட்டமாகும்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் 12.400 கி.மீ. நீளமும், விழுப்புரம் மாவட்டத்தில் 25.480 கி.மீ. நீளம் என மொத்தம் 37.880 கி.மீ. நீளம் சென்று முடிவில் விக்கிரவாண்டி வட்டத்தில் உள்ள பனமலைபேட்டை ஏரியை சென்றடைகிறது. இதன் மூலம் திருவண்ணாமலை பகுதியில் 14 ஏரிகளும், விழுப்புரம் மாவட்டத்தில் 22 ஏரிகளும் பயன்பெறும். மொத்தம் 6,598 ஏக்கர் நிலங்கள் நேர்முகமாக பயன்பெறும். விழுப்புரம் மாவட்டத்தில் 27 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சேதமடைந்த குறுக்கு கட்டுமானங்களை சரிசெய்யவும், தூர்வாரவும், அடித்தளம் மற்றும் பக்கவாட்டில் சிமெண்ட் கான்கிரீட் கொண்டு லைனிங் செய்யவும் மதிப்பீடு தயார் செய்யப்பட்டுள்ளது.

பனமலை ஏரி மற்றும் வாய்க்கால் தூர் வார குடிமராமத்துத் திட்டத்தின் கீழ் 2020-2021-ம் நிதியாண்டில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு குடிமராமத்துப் பணிகள் மேற்கொள்ளப்படும். ராதாபுரம் கிராமத்தில் சங்கராபரணி ஆற்றிலும் மற்றும் திருவாமாத்தூர் – தென்னமாதேவி கிராமத்தில் செல்லும் பம்பை ஆற்றிலும் மழை நீரை சேமிக்க தடுப்பணைகள் அமைக்க உத்தரவிட்டுள்ளேன்.

திருவாமாத்தூர் கிராமத்தில் உள்ள அருள்மிகு அபிராமி சமேத அபிராமேஸ்வரர் ஆலயத்தில் புனரமைப்பு செய்வதற்காக திட்ட மதிப்பீடுகள் தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. விரைவில் குடமுழுக்கு நடைபெறும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

எங்கள் அரசின் மீது நம்பிக்கை வைத்து வாக்களித்துள்ளீர்கள். அந்த நம்பிக்கைக்குப் பாத்திரமாக உங்களது பெரும்பான்மையான கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. மேலும், இந்தத் தொகுதியில் மிகப் பெரிய வெற்றியைத் தேடித்தந்த விக்கிரவாண்டித் தொகுதி மக்களுக்கும், வாக்காளர்களுக்கும், இரவு, பகல் பாராமல் சிறப்பாக பாடுபட்ட இந்த மண்ணின் மைந்தர், மாவட்ட அமைச்சர், திரு.சி.வி.சண்முகம் மற்றும் அமைச்சர் பெருமக்கள், கூட்டணி கட்சித் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் அனைவருக்கும் எனது பாராட்டுகளையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி பேசினார்.