தமிழகம்

உலகில் அன்பு பெருகி, அமைதி தவழ்ந்து சகோதரத்துவம் தழைத்திட வேண்டும் – முதலமைச்சர் மீலாதுன் நபி வாழ்த்து செய்தி

சென்னை

உலகில் அன்பு பெருகி அமைதி தவழ்ந்து சகோதரத்துவம் தழைத்திட வேண்டும் என்று முதலமைச்சர் வெளியிட்டுள்ள மீலாதுன் நபி வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி வெளியிட்டுள்ள “மீலாதுன் நபி” திருநாள் வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:-

இறைத்தூதர் நபிகள் நாயகம் அவர்கள் பிறந்த தினமான “மீலாதுன் நபி” திருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும் எனது உளமார்ந்த “மீலாதுன் நபி” நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

“உங்கள் உள்ளத்தில் எவருக்கும் தீமை நாடாமல் வாழ முடியும் என்றால், அவ்விதமே வாழுங்கள். இதுவே என் வழிமுறையாகும். எவர் என் வழிமுறையை நேசிக்கிறாரோ அவர் என்னையே நேசித்தவர் ஆவார்” என்ற இறைத்தூதர் நபிகள் நாயகம் அவர்களின் போதனைகளை மனதில் நிறுத்தி, மக்கள் நற்சிந்தனையுடன் அறவழியை பின்பற்றி வாழ்ந்திடல் வேண்டும்.

இஸ்லாமியப் பெருமக்களின் நலனைக் கருத்தில் கொண்டு, புனித ரமலான் மாதத்தில் நோன்பு கஞ்சி தயாரிக்க பள்ளிவாசல்களுக்கு அரிசி வழங்குதல், இஸ்லாமியப் பெருமக்கள் புனித ஹஜ் பயணம் மேற்கொள்வதற்காக ஆண்டுதோறும் 6 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்தல், நாகூர் தர்கா சந்தனக்கூடு திருவிழாவிற்கு தேவைப்படும் சந்தனக்கட்டைகளை ஆண்டுதோறும் வழங்குதல், மாவட்ட காஜிக்களுக்கு மாதந்தோறும் 20,000 ரூபாய் மதிப்பூதியம் வழங்கும் திட்டம், உலமாக்களுக்கு வழங்கப்பட்டு வரும் மாதாந்திர ஓய்வூதியத்தை 1500 ரூபாயாக உயர்த்தியது போன்ற பல்வேறு நலத்திட்டங்களை புரட்சித் தலைவி அம்மா அவர்களின் வழியில் செயல்படும் தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது.

“எல்லா நல்ல செயல்களும் தர்மமாகும்” என்றுரைத்த இறைத்தூதர் நபிகள் நாயகம் அவர்கள் பிறந்த இப்பொன்னாளில், உலகில் அன்பு பெருகி, அமைதி தவழ்ந்து, சகோதரத்துவம் தழைத்திட வேண்டும் என்று வாழ்த்தி, இஸ்லாமிய சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை எனது இனிய “மீலாதுன் நபி” நல்வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்கிறேன்.

இவ்வாறு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார்.