சிறப்பு செய்திகள்

ரூ.1 லட்சம் வரை சொத்து இருப்பவர்களுக்கும் ஓய்வூதியம் – முதலமைச்சர் அறிவிப்பு

சேலம்:-

முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி நேற்று சேலம் மாவட்டம், கொங்கணாபுரத்தில் முதலமைச்சரின் சிறப்பு குறை தீர்க்கும் திட்டத்தின் கீழ் நலத்திட்ட உதவிகள் வழங்கி, புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து ஆற்றிய உரை வருமாறு:-

நான் முதன்முதலாக சேலம் மாவட்டம், எடப்பாடி சட்டமன்ற தொகுதியில் நங்கவள்ளி, எடப்பாடி, கொங்கணாபுரம் ஆகிய மூன்று ஒன்றியப் பகுதிகளிலும் முதலமைச்சரின் சிறப்புக் குறை தீர்க்கும் திட்டத்தை தொடங்கி வைத்தேன். தமிழகம் முழுவதும் 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் முதலமைச்சரின் சிறப்புக் குறை தீர்க்கும் திட்டத்தின் மூலமாக மனுக்களைப் பெற்று அதற்கு உடனடி தீர்வு காண வேண்டுமென்று அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் பெறப்பட்ட மனுக்களுக்கு இரண்டு மாதத்தில் தீர்வு காணப்படும் என்ற அறிவிப்பை அப்பொழுது வெளியிட்டதன் அடிப்படையில், தற்பொழுது ஒன்றரை மாத காலத்திலே பெறப்பட்ட மனுக்களுக்கு தீர்வு கண்ட ஒரே அரசு இதயதெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்களின் அரசு.

இத்திட்டத்தின் மூலம், தமிழ்நாடு முழுவதும் 9 லட்சத்து 72 ஆயிரத்து 216 மனுக்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டன. அதிலே ஏற்றுக்கொள்ளப்பட்ட மனுக்கள் ஏறக்குறைய 52.58 விழுக்காடு, அதாவது, 5,11,186 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. பல்வேறு காரணங்களினால் தகுதியின்மையால் நிராகரிக்கப்பட்ட மனுக்கள் 45 விழுக்காடு, அதாவது, 4,37,492 மனுக்கள், நிலுவையில் உள்ள மனுக்கள் 2.42 விழுக்காடு, அதாவது 23,538 மனுக்கள். எங்களுடைய அரசினால் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் எந்தளவிற்கு துரிதமாக நடைபெற்று, முடிந்து கொண்டிருக்கின்றது என்பதை இந்த நிகழ்ச்சியின் வாயிலாக தெரிவித்துக் கொள்கிறேன்.

மனுக்களை பரிசீலித்து அதில் தகுதியானவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை அரசு வழங்கிக் கொண்டிருக்கிறது என்பதற்கு இதுவே ஒரு எடுத்துக்காட்டாகும். மேலும், நிராகரிக்கப்பட்ட மனுக்களை மீண்டும் ஆய்வுக் உட்படுத்தி, தகுதியானவர்களின் மனுக்கள் ஏதும் இருந்தால் அதற்கும் தீர்வு காணத் தேவையான வழிமுறைகளை கடைபிடிக்க வேண்டுமென்ற உத்தரவை நான் வழங்கியிருக்கின்றேன்.

தமிழ்நாடு முழுவதும் 5 லட்சம் நபர்களுக்கு முதியோர் உதவித் தொகை அரசால் வழங்கப்படுமென்று நான் அறிவித்ததன் அடிப்படையில், அதனை முதன்முதலாக சேலம் மாவட்டத்தில் தொடங்கியதோடு மட்டுமல்லாமல், அனைத்து மாவட்டங்களிலும் உள்ள முதியோர்களுக்கும் உதவித் தொகை கிடைக்கக்கூடிய சூழ்நிலையை உருவாக்கியிருக்கிறோம். இதிலும், சொத்து மதிப்பு ரூபாய் 50 ஆயிரத்திற்கு மேல் இருந்தால் அந்த மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்கள். ரூபாய் 50 ஆயிரம் என்பது முந்தைய காலத்தில் இருக்கலாம், இன்றைய சூழ்நிலையை அதனை மாற்றியமைக்க வேண்டுமென்று அறிவுறுத்தினேன்.

அதனடிப்படையில் முதியோர் உதவித் தொகை பெறுபவர்களின் சொத்து மதிப்பு ரூபாய் 50 ஆயிரம் என்று இருந்த நிலையை மாற்றி ரூபாய் 1 இலட்சம் வரை இருக்கலாம் என நான் ஆணையிட்டிருக்கின்றேன். அதனை நம்முடைய அதிகாரிகள் உடனடியாக நடைமுறைப்படுத்துவார்கள்.

இதனடிப்படையில் நிராகரிக்கப்பட்ட மனுக்களும் பரிசீலிக்கப்படும்.கிராமங்களில் வாழ்கின்ற மக்கள் பட்டா மாறுதல் வேண்டியும், புதிய பட்டா வழங்கக்கோரியும் பெறப்பட்டுள்ள விண்ணப்பங்களுக்கு பட்டா மாறுதல் செய்து கொடுக்கப்படும், புதிய பட்டாக்கள் வழங்கப்படும். குடிசைகளில் வாழும் ஏழை, எளிய குடும்பத்தைச் சேர்ந்தவர்களின் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு ஒவ்வொரு ஆண்டும் படிப்படியாக வீடுகள் கட்டித் தரவேண்டுமென்று உத்தரவு வழங்கப்பட்டிருக்கிறது.

மேலும், ஏறக்குறைய 5 ஆண்டு காலத்தில் தமிழகத்தை குடிசைகள் இல்லாத மாநிலமாக எங்களின் அரசு உருவாக்கிக் காட்டும். இந்தியாவிலேயே தமிழகத்தை குடிசையில்லாத முதல் மாநிலமாக உருவாக்கி காட்டுவதற்கு தான் நாங்கள் பாடுபட்டுக் கொண்டிருக்கிறோம். இந்த நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு நல்கும் அதிகாரிகளை உண்மையிலேயே நான் பாராட்டக் கடமைப்பட்டிருக்கின்றேன்.

நான் கிராமத்தில் பிறந்து வளர்ந்தவன். உங்களோடு இருந்து பழகியவன். மக்களோடு மக்களாக இருந்து பணியாற்றிய காரணத்தினாலே மக்களுக்கு என்ன பிரச்சினை என்று உணர்ந்தவன். நம்முடைய தலைமைச் செயலாளரும் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்தவர், கிராமத்திலிருந்து வந்தவர், கிராம மக்களின் தேவைகளை உணர்ந்தவர், மக்களுக்கு என்ன பிரச்சினை என்று உணர்ந்த காரணத்தினாலே, அரசின் திட்டங்களை துரிதமாக நிறைவேற்றத் தேவையான நடவடிக்கைகளை எடுக்கக்கூடியவர். இதனால், மற்ற மாவட்டங்களை புறக்கணிப்பதாக நினைத்துவிடக் கூடாது. தமிழகம் முழுவதும், அனைத்து மாவட்ட மக்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்.

வேளாண்மைத் துறையின் செயலாளர் ககன்தீப்சிங்பேடி அரசின் திட்டங்களை அருமையாக, துரிதமாக செயல்படுத்தக் கூடிய சிறந்த செயலாளர்.வருவாய் நிர்வாக ஆணையர் இராதாகிருஷ்ணன் சேலம் மாவட்டத்தின் ஆட்சித் தலைவராகப் பணியாற்றியவர். இந்த மாவட்டத்தைப் பற்றி நன்கு தெரிந்தவர். தற்பொழுது வருவாய் நிர்வாக ஆணையர் பதவியில் இருக்கிறார். கொடுக்கப்பட்ட பணிகளை சிறப்பாக செயல்படுத்தக்கூடிய இதுபோன்ற அதிகாரிகள் இருப்பதால்தான் அரசின் திட்டங்களை விரைந்து செயல்படுத்த முடிகிறது. அரசாங்கம், அதிகாரிகள் இரண்டும் சரியான முறையில் செயல்பட்டால்தான் திட்டங்களை முழுமையாக நிறைவேற்ற முடியும்.

நம்முடைய அனைத்து அதிகாரிகளுக்கும் சிறப்பான முறையில் பணியாற்றுவதால் தான் இன்றைக்கு இந்திய அளவிலேயே அதிக தேசிய விருதுகளைப் பெறும் முதல் மாநிலமாக தமிழகம் திகழ்ந்து கொண்டிருக்கிறது என்பதை பெருமையோடு சொல்லிக்கொள்ள கடமைப்பட்டிருக்கின்றேன். நான் விவசாய குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவன். விவசாயத்திற்கு நீர் முக்கியம். தமிழகத்தில் இரண்டு, மூன்று ஆண்டுகாலமாக பருவமழை பொய்த்துவிட்டதால், விவசாயத்திற்கு மற்றும் குடிப்பதற்கு தேவையான நீர் கிடைப்பதில்லை. இந்த நிலை எதிர்காலத்தில் தமிழகத்தில் இருக்கக்கூடாது என்பதற்காகவும், பருவகாலங்களில் பொழிகின்ற மழைநீர் ஒரு சொட்டுகூட வீணாகாமல் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையிலும் நீர் மேலாண்மை அமைப்பை உருவாக்கியிருக்கிறோம்.

ஏரிகள், குளங்கள் போன்றவற்றை தூர்வாருவதற்காக குடிமராமத்துத் திட்டத்தைத் தொடங்கி, அதை ஒரு மக்கள் இயக்கமாக எங்களுடைய அரசு உருவாக்கி, வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கிறது. நம்முடைய பகுதியில் மேட்டூர் அணை நிரம்புகிறபொழுது, உபரியாக வெளியாகின்ற அந்த நீரை பயன்படுத்தி, சேலம் மாவட்டத்தில் முதற்கட்டமாக மேட்டூர், ஓமலூர் மற்றும் எடப்பாடி சட்டமன்றத் தொகுதிகளைச் சேர்ந்த தாரமங்கலம், மேச்சேரி, நங்கவள்ளி, எடப்பாடி, கொங்கணாபுரம், சங்ககிரி, மகுடஞ்சாவடி ஆகிய ஒன்றியங்களில் பரீட்சார்த்த முறையில் ரூபாய் 615 கோடி செலவில் 100 ஏரிகள் நிரப்பப்படும் என்ற அறிவித்திருந்தேன்.

இத்திட்டத்திற்கு வருகின்ற ஏப்ரல் மாதம் அடிக்கல் நாட்டி பணிகள் தொடங்கப்படும். இத்திட்டம் ஓர் ஆண்டு காலத்தில் நிறைவேற்றப்படும். கடலில் கலக்கின்ற உபரி நீரை நாம் பயன்படுத்தவேண்டும் என்ற நோக்கில், நீர் மேலாண்மைத் திட்டத்தின் மூலமாக 100 ஏரிகளை நிரப்புகின்ற பணியை நாம் ஆரம்பித்திருக்கின்றோம். படிப்படியாக, தமிழகம் முழுவதும் இந்தத் திட்டம் விரிவுபடுத்தப்படும் என்பதை தெரிவிக்க விரும்புகின்றேன்.

கோதாவரி-காவேரி இணைப்பு திட்டத்தை நிறைவேற்றுகின்றபொழுது மேட்டூரிலிருந்து கரூர், மாயனூர் கதவணை வரை ஆற்றின் இரு கரைப் பகுதிகளிலும் 50 கிலோ மீட்டர் நீளத்திற்கு நீரேற்று மூலமாக அனைத்து ஏரிகளும் நிரப்பப்படும். இதுவே எங்களுடைய லட்சியம், இதை நிறைவேற்றியே தீருவோம். மத்திய நீர்வளத் துறை அமைச்சராக இருந்த நிதின் கட்கரி நாடாளுமன்றத் தேர்தலின்பொழுது சேலத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, மீண்டும் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவுடன் கோதாவரி-காவேரி இணைப்புத் திட்டம் நிறைவேற்றப்படும் என்று தெரிவித்தார். ஆகவே, இன்றைக்கு மத்திய நீர்வளத் துறை அமைச்சர் இந்தத் திட்டத்தை கவனத்திலே எடுத்துக் கொண்டிருக்கிறார்.

விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி நடந்து கொண்டிருக்கிறது. அந்தத் திட்டம் புரட்சித்தலைவி அம்மாவினுடைய கனவுத் திட்டம். அம்மா அவர்கள் மறைந்தாலும் அம்மாவின் அரசு அதை தொடர்ந்து செயல்படுத்தும். அந்த வகையில், கரூரிலிருந்து குண்டாறு வரை அந்த திட்டத்தை இணைக்கவிருக்கிறோம். காவேரி-குண்டாறு இணைப்பு திட்டத்தை எங்களின் அரசு நிறைவேற்றியே தீரும். அடுத்த ஜூலை மாதத்திற்குள் அதற்கு அடிக்கல் நாட்டப்படும் என்ற செய்தியை இந்த நேரத்தில் தெரிவிக்க விரும்புகின்றேன்.

இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் இருக்கின்ற காலத்திலே இதனைத் தெரிவித்தார்கள். எங்களுடைய அரசு, அம்மாவின் கனவுத் திட்டமாக காவேரி-குண்டாறு திட்டத்தை நிறைவேற்ற வேண்டுமென்பதற்காக மத்திய அரசுக்கு அறிக்கையை அனுப்பியிருக்கிறோம். இத்திட்டம் மத்திய அரசின் பரிசீலனையில் இருந்து கொண்டிருக்கிறது. அனுமதி கிடைத்தவுடன் மத்திய, மாநில அரசுகள் இணைந்து காவிரியிலிருந்து குண்டாறு வரையிலான இணைப்புத் திட்டத்தை நிறைவேற்றுவோம். இத்திட்டம் பல்வேறு கட்டங்களாக நிறைவேற்றப்படும்.

கரூர், மாயனூர் கதவணையிலிருந்து குண்டாறு வரை இணைக்கின்றபொழுது, உபரிநீர் கால்வாய் வழியாக செல்வதால் புதுக்கோட்டை, சிவகங்கை மாவட்டங்கள் செழிக்கும். வைகை அணை நிரப்பப்பட்டு இராமநாதபுரம், திண்டுக்கல், தேனி மற்றும் விருதுநகர் ஆகிய மாவட்டங்கள் செழிக்கும். சேலம் மாவட்டம் மட்டுமன்றி தென் மாவட்டங்கள் முழுவதும் செழிக்க எங்களின் அரசு நடவடிக்கை எடுத்து, இத்திட்டத்தினை நிறைவேற்றியே தீரும்.

எண்ணற்ற திட்டங்களை நாங்கள் நிறைவேற்றிக் கொண்டிருக்கும்பொழுது, எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் மட்டும் இந்த ஆட்சியில் எதுவும் நடைபெறவில்லை, இந்த ஆட்சி நடக்கின்றதா? இல்லையா? என்று கேள்வி கேட்கிறார். இவ்வளவு திட்டங்களையும் நாங்கள் நிறைவேற்றி கொண்டிருக்கின்றோம்.

எங்கள் திட்டங்களெல்லாம் எதிர்காலத்திலும் விவசாயிகள் பயனடைகின்ற திட்டங்களாக இருக்கின்றது. எதிர்காலத் தமிழகம் ஒளிமயமானதாக இருக்க வேண்டும், வேளாண் பெருமக்களுக்குத் தேவையான நீர், குடிநீருக்குத் தேவையான நீர் முழுவதுமாக வழங்க வேண்டும், தமிழகத்தில் தண்ணீர் பஞ்சமில்லை என்ற சூழ்நிலையை உருவாக்குவது தான் எங்களுடைய இலட்சியம் என்பதை இந்த நேரத்திலே சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

முதலமைச்சரின் சிறப்புக் குறை தீர்க்கும் திட்டத்தின் வாயிலாக சேலம் மாவட்டத்தில் 56,267 மனுக்கள் பெறப்பட்டதில் 26,712 மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டு, 27,010 மனுக்கள் பல்வேறு நிலைகளில் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. தள்ளுபடி செய்யப்பட்டுள்ள மனுக்களையும் மறு ஆய்வு செய்து, தகுதியானவர்களுக்கு தேவையான உதவிகள் செய்ய வேண்டுமென்று ஆணை பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. மீதமுள்ள 2545 மனுக்கள் அரசின் பரிசீலனையில் இருந்து கொண்டிருக்கிறது, அதற்கும் தீர்வு காணப்படும் என்ற செய்தியை தெரிவித்துக் கொள்கிறேன். ஏற்பு செய்யப்பட்ட மனுக்களில் 26,712 மனுக்கள் எந்ததெந்த வகையில் பெறப்பட்டது, அதற்கு எந்த வகையில் தீர்வு காணப்பட்டது என்ற விவரங்களை இந்த நேரத்தில் சுட்டிக்காட்ட விழைகின்றேன்.

சமூகப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் சேலம் மாவட்டத்தில் மட்டும் 12,989 நபர்களுக்கு முதியோர் உதவித் தொகை ஒரே நேரத்தில் வழங்குகிற ஒரே அரசு அம்மாவினுடைய அரசு. நாங்கள் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுகின்ற விதமாக முதல்கட்டமாக, இந்தப் பணியை தொடங்கியிருக்கிறோம். மேலும், இது விரிவுபடுத்தப்படும். ஆதி திராவிடர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் வசிக்கும் பகுதிகளுக்கும், ஏழை, எளிய மக்கள் வசிக்கும் பகுதிகளுக்கும் அதிகாரிகள் நேரடியாகச் சென்று மனுக்களைப் பெற வேண்டும். முதியோர்களிடத்திலிருந்து நேரடியாக மனுக்கள் பெறப்பட்டு தகுதியான முதியோர் அனைவருக்கும் முதியோர் உதவித்தொகை வழங்கப்படும்.

பட்டா மாறுதல் சார்ந்த 7,734 மனுக்களுக்கும், நகர உட்கட்டமைப்பு சார்ந்த 2,841 மனுக்களுக்கும் பொது விநியோக திட்டத்தைச் சார்ந்த 91 மனுக்களுக்கும், சமூகநலத் துறை சார்ந்த 106 மனுக்களுக்கும், அடிப்படை வசதிகள், பொது சுகாதாரம், போக்குவரத்து துறை சார்ந்த 192 மனுக்களுக்கும், வேளாண்மை, கால்நடை, மீன்வளத் துறை சார்ந்த 181 மனுக்களுக்கும், ஆதிதிராவிடர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலம் சார்ந்த 81 மனுக்களுக்கும், கல்வித் துறை சார்ந்த 131 மனுக்களுக்கும், முன்னாள் ராணுவ வீரர்களின் நலன் சார்ந்த 2 மனுக்களுக்கும், சட்டம் ஒழுங்கு சார்ந்த
284 மனுக்களுக்கும், இதர கோரிக்கைகள் குறித்த 2080 மனுக்களுக்கும், என மொத்தம் 26,712 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது என்பதை பெருமையோடு சொல்லிக் கொள்ள கடமைப்பட்டு இருக்கிறேன்.

நிராகரிக்கப்பட்டுள்ள 29,555 மனுக்களும் மீண்டும் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு, தகுதியான மனுக்களுக்குத் தீர்வு காணப்படும் என்ற செய்தியை இந்த நேரத்திலே குறிப்பிட விரும்புகிறேன். ஆகவே இது மக்களின் அரசு. நீங்கள் வைக்கின்ற கோரிக்கைகளையும் அனைத்தையும் நிறைவேற்றி கொண்டு இருக்கின்ற அரசு. எடப்பாடி சட்டமன்றத் தொகுதியில் தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன.

அம்மா அவர்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, எட்டிக்கோட்டையில் பி.எட். கல்லூரி கொடுத்தார்கள். நங்கவள்ளியில் பாலிடெக்னிக் கல்லூரி அமைக்கப்படும். நடுநிலைப் பள்ளிகளை உயர்நிலைப் பள்ளிகளாகவும், உயர்நிலைப் பள்ளிகளை மேல்நிலைப் பள்ளிகளாகவும், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களை மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களாகவும் அமைத்துக் கொடுத்திருக்கிறோம்.

மக்கள் வைத்த கோரிக்கையின் அடிப்படையிலே, சேலம் மாவட்டத்தில் இருக்கின்ற கிராமச் சாலைகளெல்லாம் சீர் செய்யப்பட்டு வருகிறது. உயர்மட்டப் பாலம், ரயில்வே மேம்பாலம், ஆற்றுப் பாலம் ஆகியவைகளையும் அமைத்துக் கொடுத்திருக்கிறோம். ஓடையின் குறுக்கே பல்வேறு இடங்களில் பாலங்கள் கட்டப்பட்டு வருகிறது என்பதனையும் தெரிவிக்க விரும்புகின்றேன்.

வருவாய்த் துறையில் முதியோர், விதவைகள், கணவரால் கைவிடப்பட்டோர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் ஆகியோருக்கு உதவித்தொகைகளும், வீட்டுமனைப் பட்டா, நகர நிலை பட்டா ஆகியவைகளும் இன்றைக்கு வழங்கப்பட்டுள்ளது. இதுவரையில், எடப்பாடி சட்டமன்றத் தொகுதியில் பெறப்பட்ட மனுக்களில் 1,600 பயனாளிகளுக்கு முதியோர் உதவித்தொகை இந்த நிகழ்ச்சியின் வாயிலாக வழங்கப்பட்டுள்ளது.

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் மூலமாக முதலமைச்சர் சூரிய மின்சக்தியுடன் கூடிய பசுமை வீடு திட்டத்தின் கீழ் 110 பயனாளிகள் பயனடைந்துள்ளனர். பிரதம மந்திரி குடியிருப்புத் திட்டத்தின் மூலம் 400 பயனாளிகளுக்கு ஏறக்குறைய ரூபாய் 7 கோடி அளவிற்கு வீடு கட்டுவதற்கு மானியமும் வழங்கப்படுகிறது.மகளிர் உதவித் திட்டம் 224 ஊராட்சி அளவிலான கூட்டமைப்புக்கு நிதியுதவியும், 444 உறுப்பினர்கள் கொண்ட 37 மகளிர் சுயநிதிக் குழுக்களுக்கு வங்கிக் கடனுதவியும், 1,363 உழைக்கும் மகளிருக்கு அம்மா இருசக்கர வாகனமும் இன்றைக்கு வழங்கப்பட்டிருக்கின்றது. 2,034 மகளிருக்கு சுமார் 7 கோடியே 90 லட்சத்து 37 ஆயிரம் கடனுதவியும் மற்றும் மானிய உதவியும் வழங்கியிருக்கிறோம்.

வேளாண்மைத் பொறியியல் துறையில் வேளாண்மை இயந்திரமயமாக்கல் உப இயக்கத் திட்டத்தின் கீழ் 2 விவசாயிகளுக்கு டிராக்டர், மானாவரி விவசாயத்தின் கீழ், ஒரு விவசாயிக்கு மதிப்புக்கூட்டு இயந்திர மானியம் என மொத்தம் 18 லட்சத்து 4 ஆயிரத்து 300 மதிப்பிலான வேளாண் கருவிகள் வழங்கப்பட்டுள்ளன. விலையில்லா கறவை பசுக்கள் வழங்கும் திட்டத்தின் கீழ் 100 பயனாளிகளுக்கு ரூபாய் 39 லட்சத்து 9 ஆயிரத்து 500 செலவில் 100 கறவை பசுக்கள் வழங்கப்பட்டுள்ளன. வனத்துறையில், தமிழ்நாடு காடுவளர்ப்பு திட்டத்தின் கீழ், சிறுதொழில் தொடங்குவதற்கு 52 பயனாளிகளுக்கு 8 லட்சத்து 85 ஆயிரம் ரூபாய் மானியத்துடன் கூடிய கடன் வழங்கப்பட்டுள்ளது.

பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத் துறையின் வாயிலாக 20 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளும், உயர்கல்வித் துறையின் மூலமாக வனவாசி மற்றும் சேலம் அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் பயிலும் 644 மாணவ மாணவிகளுக்கு ரூபாய் 79 லட்சத்து 3 ஆயிரத்து 800 மதிப்பிலான விலையில்லா மடிகணினி வழங்கப்பட்டுள்ளது.
வேளாண்மைத் துறையில் 25 விவசாயிகளுக்கும், தோட்டக்கலை துறையின் சார்பில் 25 விவசாயிகளுக்கும் ரூபாய் 14 லட்சத்து 43 ஆயிரத்து 400 மதிப்பிலான பல்வேறு மானிய உதவித் தொகைகள் வழங்கப்படுகின்றன.

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் துறையின் சார்பில் 4 பயனாளிகளுக்கு 37 ஆயிரத்து 400 மதிப்பிலான விலையில்லா 4 தையல் இயந்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன. கூட்டுறவுத் துறையின் மூலமாக 467 பயனாளிகளுக்கு பயிர்க்கடன் உதவி,
150 பயனாளிகளுக்கு மத்தியக் காலக் கடனுதவி, 119 மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு கடனுதவி என மொத்தம் 736 பயனாளிகளுக்கு ரூபாய் 6 கோடியே 26 லட்சத்து 3 ஆயிரம் கடனுதவியும் வழங்கப்பட்டுள்ளது.

மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறையின் மூலம் டாக்டர் முத்துலட்சுமிரெட்டி மகப்பேறு நிதியுதவித் திட்டத்தின் கீழ், 9 கர்ப்பிணி தாய்மார்களுக்கு நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. சமூக நலத்துறையின் சார்பாக, 42 பயனாளிகளுக்கு 1 லட்சத்து 89 ஆயிரம் மதிப்பிலான 42 விலையில்லா தையல் இயந்திரம் வழங்கப்பட்டுள்ளது. இன்றையதினம் இந்த நிகழ்ச்சியின் வாயிலாக மொத்தம் 5,723 பயனாளிகளுக்கு ரூபாய் 25 கோடியே 89 லட்சத்து 42 ஆயிரத்து 200 மதிப்பிலான பல்வேறு நலத் திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன.

தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் இருப்பாளி கூட்டுக் குடிநீர் திட்டத்திலிருந்து எடப்பாடி மற்றும் கொங்கணாபுரம் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களைச் சேர்ந்த 450 குடியிருப்புகளுக்கு மறுசீரமைப்பு மற்றும் மேம்படுத்துதல் திட்டத்தின் கீழ் ரூபாய் 47 கோடியே 53 லட்சம் மதிப்பீட்டில் புதிய குடிநீர் திட்டப் பணிக்கு இன்றைக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.

தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் சார்பில் வீட்டுமனை மேம்பாட்டு திட்டத்தின் கீழ், எடப்பாடி – குமாரபாளையம் சாலை அருகில் ரூபாய் 30 கோடியே 36 இலட்சம் மதிப்பீட்டில் உயர் வருவாய் பிரிவில் 167 மனைகளும், மத்திய வருவாய் பிரிவில் 283 மனைகளும், நலிவடைந்த வருவாய் பிரிவில் 254 மனைகளும் என மொத்தம் 704 வீட்டுமனைகள் மேம்படுத்தும் பணிக்கு இன்றைக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் சார்பில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ், ரூபாய் 9 கோடியே 37 இலட்சத்து 71 ஆயிரம் மதிப்பிலான 109 புதிய திட்டப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

சேலம் மாநகராட்சியின் சீர்மிகு நகர திட்டத்தின் கீழ், ரூபாய் 3 கோடியே 90 லட்சம் மதிப்பீட்டில் அண்ணா பூங்கா மறுசீரமைக்கும் பணிக்கும், ரூபாய் 6 கோடி மதிப்பீட்டில் 20 அங்கன்வாடி மையங்களை மறுசீரமைக்கும் பணிகளுக்கும், வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறையின் சார்பில் மேச்சேரி, ஓலப்பட்டி கிராமத்தில் ரூபாய் 8 கோடியே 80 இலட்சம் மதிப்பீட்டில் வேளாண் வணிக மையம் கட்டும் பணிக்கும், நெடுஞ்சாலைத் துறையின் நபார்டு கிராம சாலைகள் சார்பில் நபார்டு திட்டத்தின் கீழ் சேலம் மாவட்டம்,

தலைவாசல் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஆறகளூர்-பெரியேரி சாலையில் வசிஷ்ட நதியின் குறுக்கே ரூபாய் 5 கோடியே 99 லட்சம் மதிப்பீட்டில் புதிய உயர்மட்ட பாலம் கட்டும் பணிக்கும், மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறையின் சார்பில் தேசிய சுகாதார இயக்கத்தின் கீழ், மேட்டூர் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் ரூபாய் 40 லட்சம் மதிப்பீட்டில் விபத்து மற்றும் அவசர தீவிர சிகிச்சை பிரிவு கட்டடம் கட்டும் பணிக்கும் என இவ்விழாவில் மொத்தம் ரூபாய் 112 கோடியே 35 லட்சத்து 71 ஆயிரம் மதிப்பீட்டில் 116 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டுள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கின்றேன்.

தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் சார்பில் ஏற்கனவே செயல்படுத்தப்பட்டு வருகின்ற எடப்பாடி, கொங்கணாபுரம் மற்றும் மகுடஞ்சாவடி ஆகிய ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட 327 குடியிருப்புகளுக்கான கூட்டுக் குடிநீர் திட்டத்தில் புதிதாக கண்டறியப்பட்டுள்ள எடப்பாடி ஒன்றியத்தில் 23 குடியிருப்புகளுக்கும், கொங்கணாபுரம் ஒன்றியத்தில் 28 குடியிருப்புகளுக்கும் என மொத்தம் 51 குடியிருப்புகளுக்கு குடிநீர் வழங்கும் திட்டப் பணிகள் ரூபாய் 9 கோடியே 50 இலட்சம் மதிப்பீட்டில் முடிக்கப்பட்டு இன்றைய தினம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

நெடுஞ்சாலைத் துறையின் நபார்டு மற்றும் கிராம சாலைகள் சார்பில் நபார்டு திட்டத்தின் கீழ் மகுடஞ்சாவடி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மகுடஞ்சாவடி– குமாரபாளையம் சாலை எடப்பாடியில் பிரிந்து செல்லும் கவுண்டனேரி சாலையில் பொன்னியாறு ஓடையின் குறுக்கே ரூபாய் 1 கோடியே 3 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள உயர்மட்ட பாலமும், தாரமங்கலம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கோட்டைமேடு–எருமக்காரன் வளவு சாலையில் சின்னாங்காடு ஓடையின் குறுக்கே ரூபாய் 1 கோடியே 58 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள உயர்மட்ட பாலமும், வேளாண்மை பொறியியல் துறையின் சார்பில் நபார்டு திட்டத்தின் கீழ் காடையாம்பட்டியில் ரூபாய் 30 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள அரசு தென்னை நாற்றுப் பண்ணை பாதுகாப்பு கூடக் கட்டடமும் இன்றைய தினம் திறக்கப்பட்டிருக்கின்றன.

கூட்டுறவுத் துறையின் சார்பில் 24 அம்மா சிறு கூட்டுறவு சிறப்பு அங்காடிகள் இன்றைய தினம் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு நான் துவக்கி வைத்துள்ளேன். ஆக மொத்தம் இன்றைய தினம் நடைபெற்ற இவ்விழாவில்
ரூபாய் 18 கோடியே 88 லட்சத்து 45 ஆயிரத்து 800 மதிப்பீட்டில் முடிவுற்ற 43 திட்டப் பணிகள் திறந்து வைக்கப்பட்டுள்ளது என்ற மகிழ்ச்சியான செய்தியை குறிப்பிட விரும்புகிறேன்.

இன்றைய தினம் நடைபெற்ற விழாவில், 5723 பயனாளிகளுக்கு சுமார் 25 கோடியே 90 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. 116 திட்டப் பணிகளுக்கு ஏறக்குறைய ரூபாய் 112 கோடியே 34 லட்சம் மதிப்பீட்டில் அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. முடிவுற்ற 43 திட்டப் பணிகள் ஏறக்குறைய ரூபாய் 18 கோடி 88 லட்சம் மதிப்பீட்டில் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன என்ற மகிழ்ச்சியான செய்தியை இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த அரசு உங்களுடைய அரசு, மக்களுடைய அரசு, மக்கள் நலன் பேணிக் காக்கின்ற ஒரே அரசு அம்மாவினுடைய அரசு என்பதை இந்த நேரத்திலே சுட்டிக்காட்டி, ஏழை, எளிய மக்களின் பொருளாதாரம் மேம்பாடு அடைய வேண்டுமென்பதற்காக தொடர்ந்து பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. அதற்கு பொதுமக்கள் நல்லாதரவை வழங்க வேண்டு மென்றுச் சொல்லி, மிகச் சிறப்பாக, எழுச்சியாக இந்த நிகழ்ச்சியை இங்கே ஏற்பாடு செய்த மாவட்ட நிர்வாகத்திற்கு நன்றியை தெரிவித்து, இதேபோல், சேலம் மாவட்டத்தில் இருக்கின்ற அனைத்து சட்டமன்றத் தொகுதிகளிலும் இதேபோன்ற நிகழ்ச்சி நடைபெறும்.

இவ்வாறு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி பேசினார்.