சிறப்பு செய்திகள்

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு சிகாகோ நகரில் உற்சாக வரவேற்பு.

சிகாகோ

10 நாள் அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்றுள்ள தமிழக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு சிகாகோ விமான நிலையத்தில் இந்திய தூதரக அதிகாரிகள் மற்றும் பல்வேறு தமிழ் அமைப்பை சேர்ந்தவர்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர். விமான நிலையத்தில் மட்டுமின்றி அவர் தங்கியிருக்கும் ஓட்டலிலும் ஏராளமானோர் சால்வைகள் அணிவித்தும், பூங்கொத்து கொடுத்தும் அன்புடன் வரவேற்றனர்.

நேற்று  அதிகாலை சென்னையில் இருந்து விமானம் மூலம் அமெரிக்கா புறப்பட்டு சென்ற துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சிகாகோ நகருக்கு சென்றடைந்தார். விமான நிலையத்தில் அவரை இந்திய தூதரக அதிகாரி சுதாகர் தலேலா மற்றும் தூதரக ஊழியர்கள், பல்வேறு தமிழ் அமைப்புகளை சேர்ந்தவர்கள் சால்வை அணிவித்தும், பூங்கொத்து கொடுத்தும் அன்புடன் வரவேற்றனர்.

அமெரிக்காவின் சிகாகோ, ஹூஸ்டன், வாஷிங்டன் மற்றும் நியூயார்க் உள்ளிட்ட நகரங்களுக்கு சென்று தமிழ்நாட்டின் புதிய திட்டங்களுக்கு நிதி பெறுவது குறித்து உலக வங்கியின் தெற்காசிய பிரிவின் உயர் அலுவலர்களுடன் விவாதிக்க இருக்கிறார். தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை திரட்டுவது குறித்து இண்டர்நேஷனல் பைனான்ஸ் கார்ப்பரேசன் மற்றும் முக்கிய நிதி நிறுவனங்களின் உயர் அதிகாரிகளையும் துணை முதலமைச்சர் சந்தித்து பேசுகிறார்.

சிகாகோ நகரில் உள்ள வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை சார்ந்த திட்டப் பணிகளை பார்வையிடும் துணை முதலமைச்சர் முக்கிய தொழில் முனைவோர்களுடன் தமிழ்நாட்டில் முதலீடு செய்ய அழைப்பு விடுக்க இருக்கிறார். சிகாகோ தமிழ் சங்கம் சார்பில் நடத்தப்படும் குழந்தைகள் தின நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று மாலை கலந்து கொண்டார். இங்குள்ள குளோபல் கம்யூனிட்டி ஆஸ்காஷ் 2000 மற்றும் இந்தியன் அமெரிக்கன் பிசினஸ் ஒப்பந்தம் மற்றும் அமெரிக்கன் தமிழ் தொழில் முனைவோர் சார்பாக நடத்தப்பட்ட வட்டமேஜை கருத்தரங்கு உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளில் ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொண்டார்.

இன்று அமெரிக்கன் மகிழ்ச்சி எத்தனிக் கொலிசன் இங்க் சார்பாக நடத்தப்படும் குளோபல் கம்யூனிட்டி ஆஸ்காஷ் 2000 விழாவில் இண்டர்நேஷனல் ரைசிங் ஸ்டார் ஆப்தி இயர் ஆசியா அவார்டு என்ற விருது துணை முதலமைச்சருக்கு வழங்கப்பட இருக்கிறது.