தற்போதைய செய்திகள்

சுரங்கத்துறை அலுவலர்களுக்கு கையடக்க கணினி – சட்டப்பேரவையில் அமைச்சர் சி.வி.சண்முகம் அறிவிப்பு…

சென்னை:-

சுரங்கத்துறை அலுவலர்களுக்கு கையடக்க கணினி வழங்கப்படும் என்று சட்டப்பேரவையில் அமைச்சர் சி.வி.சண்முகம் அறிவித்தார்

தமிழக சட்டப்பேரவையில் சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் துறைகளின் மானியக் கோரிக்கைகள் குறித்த அறிவிப்புகளை அமைச்சர் சி.வி.சண்முகம் நேற்று அறிவித்தார்.

கனிம நிர்வாகத்தினைக் கணினி மூலம் நிர்வகித்து மேம்படுத்திடவும் களஆய்வு மேற்கொள்ளவும் மற்றும் சட்ட விரோத குவாரிகளை கட்டுக்குள் கொண்டுவரவும் 32 மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத்துறை அலுவலர்கள், புவித்தொழில்நுட்ப மையத்தில் பணிபுரியும் 2 அலுவலர்கள், 3 பறக்கும் படை அலுவலர்கள் மற்றும் தலைமையகத்திலுள்ள கனிம ஆய்வுப்பிரிவிலுள்ள 2 அலுவலர்கள் ஆக மொத்தம் 39 அலுவலர்களுக்கு ரூபாய் 26 லட்சம் மதிப்பீட்டில் 39 கையடக்கக் கணினிகள் வழங்கிட இந்நிதியாண்டில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

விதிமுறைகளுக்கு புறம்பாக எடுக்கப்படும் கனிமங்களின் கனபரிமாணத்தை துல்லியமான முறையில் அளவீடு செய்ய ஆளில்லா சிறிய ரக விமானம் மூலம் சுரங்கங்கள் மற்றும் குவாரிகள் கண்காணிக்கப்படும். இதன்மூலம் சட்டவிரோத குவாரிகள் கட்டுப்படுத்தப்பட்டு அரசிற்கு ஏற்படும் வருவாய் இழப்பு தடுக்கப்படும். அண்ணா பல்கலைக்கழக சென்னை தொழில்நுட்ப நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு ரூபாய் 50 லட்சம் மதிப்பீட்டில் இந்நிதியாண்டில் இத்திட்டம் செயல்படுத்தப்படும்.

பெருங்கனிமச் சுரங்கங்கள் அமைந்துள்ள குத்தகை பரப்பின் எல்லைகளிலிருந்து 500 மீட்டர் சுற்றளவிற்குள் நடைபெறும் சட்டவிரோத சுரங்கப்பணிகளை செயற்கைக்கோள் மூலம் அகமதாபாத்திலுள்ள பாஸ்கராச்சாரியா புவி மற்றும் விண்வெளி ஆய்வு நிறுவனம் கண்காணித்து வருவதுடன் நடைபெறும் விதிமீறல் குறித்து பெறப்படும் சமிக்ஞைகள் கள ஆய்வின் மூலம் உறுதி செய்யப்படுகிறது. இத்திட்டம் சிறுகனிம குவாரிகளுக்கும் இந்நிதியாண்டில் அறிமுகப்படுத்தப்படும்.

கனிமவளம் மிகுந்த தமிழ்நாட்டில் 503 பெருங்கனிம குத்தகைகளும் மற்றும் 3,306 சிறுகனிம குத்தகைகளும் நடைமுறையில் உள்ளன. இதில் பெருங்கனிம சுரங்கங்கள் மற்றும் சிறுகனிம குவாரிகளில் பணிபுரிந்து வரும் சுமார் 34,500 தொழிலாளர்களின் பாதுகாப்பு நலனை கருத்தில் கொண்டு மேற்படி தொழிலாளர்களை தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு செய்து சம்பந்தப்பட்ட வாரிய காப்பீடு திட்டம் மற்றும் மத்திய அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமாயோஜனா என்ற காப்பீட்டு திடடத்தின் கீழ் கொண்டுவர இந்நிதியாண்டில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

கனிம நிர்வாக நலன் கருதி நான்கு மண்டல இணை இயக்குநர் அலுவலர்கள், சேலம், விழுப்புரம், திருச்சிராப்பள்ளி மற்றும் மதுரை ஆகிய மாவட்டங்களில் உருவாக்கப்பட்டுள்ளன, இந்நிதியாண்டில் சேலம் மற்றும் விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் புதிய மண்டல இணை இயக்குநர் அலுவலகங்கள் ரூபாய் 2 கோடி திட்ட மதிப்பீட்டில் கட்டப்படும்.

கனிம வளமிக்க இடங்களை கண்டறிந்து, கனிமங்கள் மற்றும் சுரங்கங்கள் (மேம்படுத்துதல் மற்றும் முறைப்படுத்துதல்) திருத்த சட்டம், 2015-ன் படி, ஆய்வு மேற்கொண்டு தற்போதுள்ள விதிகளின்படி பொது ஏலத்திற்கு கொண்டு வந்து அரசுக்கு கனிம வருவாய் அதிகரிக்கச் செய்ய வேண்டியது அவசியமாகிறது. மேற்படி பணியினை திறம்பட மேற்கொள்ள ஒரு கூடுதல் இயக்குநர் பணியிடம் ஒரு இணை இயக்குநர் பதவியை ஒருநிலை உயர்த்துவதன் மூலமாக உருவாக்கப்படும்.

இவ்வாறு அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்தார்.