தற்போதைய செய்திகள்

மதுரை மேலூரில் புதிய தொழிற்பேட்டை – சட்டப்பேரவையில் அமைச்சர் பா.பென்ஜமின் அறிவிப்பு…

சென்னை

மதுரை மேலூரில் 38 ஏக்கரில் புதிய தொழிற்பேட்டை அமைக்கப்படும் என்று சட்டப்பேரவையில் அமைச்சர் பா.பென்ஜமின் அறிவித்தார்.

சட்டப்பேரவையில்  குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை மீதான மானியக் கோரிக்கை மீதான விவாதத்திற்கு பதிலளித்த அமைச்சர் பா.பென்ஜமின் கீழ்கண்ட அறிவிப்புகளை வெளியிட்டார்.

திருச்சி மாவட்டம் லால்குடி வட்டம் வெங்கடாசலபுரம் அரிசன செங்கல் தொழிலாளர்கள் தொழிற்கூட்டுறவு சங்கமானது, 25.03.1960-ல் பதிவு செய்யப்பட்டு 319 உறுப்பினர்களைக் கொண்டு அரசின் பங்கு மூலதனம் ரூ.2.14 லட்சம் உட்பட ஆதி திராவிட மக்களுக்கு தொடர்ச்சியாக வேலைவாய்ப்பினை வழங்கி செயல்பட்டு வருகிறது.

சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத வகையில் மாற்றுத் தொழிலான சாம்பல் செங்கல் தயாரிக்கும் தொழிலின் மூலம் உறுப்பினர்களுக்கு தொடர்ச்சியாக வேலைவாய்ப்பினை வழங்கிட ஏதுவாக புரட்சித் தலைவி அம்மா அவர்களின் ஆசியுடன், முதலமைச்சர் அவர்களின் ஆணைப்படி, இச்சங்கத்திற்கு பேவர் பிளாக் இயந்திரம் மற்றும் சாம்பல் செங்கல் தாயரிக்கும் இயந்திரம் ஆகியவை ரூ.73 லட்சம் அரசு நிதியுதவியுடன் கொள்முதல் செய்து நிறுவப்படும்.

மதுரை ஆட்டோமொபைல் கூட்டுறவு தொழிற்பேட்டை 22.03.1991-ல் பதிவு செய்யப்பட்டு 639 உறுப்பினர்களுடன், உறுப்பினர்கள் பங்குத் தொகை ரூ. 5 லட்சம் ஆக மொத்தம் ரூ. 21.82 லட்சம் பங்கு மூலதனத்துடன் செயல்பட்டு வருகிறது. இத்தொழில்பேட்டைக்கு 23.90 ஏக்கர் நிலம் சொந்தமாக உள்ளது. அதில் தற்போது 177 உறுப்பினர்களுக்கு மனைகளில் பிரித்து வழங்கப்பட்டு அவற்றுள் 150 மனைகளில் வெவ்வேறு குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. அந்நிறுவனங்கள் சிரமமின்றி செயல்பட ஊக்குவிக்கும் விதமாக மதுரை ஆட்டோமொபைல் கூட்டுறவு தொழிற்பேட்டையில் தார்ச்சாலை, கழிவுநீர் வசதி மற்றும் சாலையில் மின்சார விளக்கு அமைத்தல் ஆகிய உட்கட்டமைப்பு வசதிகள் ரூ.50 லட்சம் அரசு நிதியுதவியுடன் செய்து தரப்படும்.

கோவை மாவட்ட ஆயுத சேம படை காவலர் குடும்ப நல தொழிற்கூட்டுறவு சங்கமானது. 04.01.1961 ல் பதிவு செய்யப்பட்டு, 115 உறுப்பினர்களுடன் ரூ. 16960 பங்கு தொகை மூலதனத்துடன், 21.02.1961 முதல் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.இச்சங்கமானது ஆயுத சேமபடை காவலர்களின் குடும்பத்தில் உள்ள நபர்களின் பொருளாதார நிலையினை மேம்படுத்தி அவர்களுக்கு நிரந்தர வேலையினை வழங்கி வருகிறது.இச்சங்க உறுப்பினர்களின் பாதுகாப்பினை உறுதி செய்ய ஏதுவாக இச்சங்கத்தின் பழுதடைந்த தொழிற்கூடங்கள் ரூ. 7.88 லட்சம் அரசு நிதியுதவியுடன் புதுப்பிக்கப்படும்.

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலத்தில் திருவரங்குளம் கயிறு தொழிலாளர் தொழிற்கூட்டுறவு சங்கம் 10.12.1981-ல் 75 உறுப்பினர்களுடன் அரசு மூலதனத்தனமாக ரூ.1,75,310 மற்றும் உறுப்பினர் பங்கு மூலதனமாக ரூ.1,420 உடன் செயல்பட்டு வருகிறது. தற்சமயம் சங்கம் மகளிரை கொண்டு கயிறு உற்பத்தி தொழில் செய்வதின் மூலம் அவர்களுக்கு வேலைவாய்ப்பினை நல்கி வருகிறது. இச்சங்க உறுப்பினர்களுக்கு தொடர் வேலைவாய்ப்பினை வழங்கும் பொருட்டு இரண்டு தானியங்கி கயிறு திரிக்கும் இயந்திரம் மற்றும் இதர கயிறு இயந்திரங்களும் ரூ.10 லட்சம் அரசு நிதியுதவியுடன் கொள்முதல் செய்து நிறுவப்படும்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் வல்லவாரி ஆதி திராவிடர் கயிறு தொழிலாளர் கூட்டுறவு சங்கம் 09.05.1990 ல் பதிவு செய்யப்பட்டு 81 உறுப்பினர்களுடன் உறுப்பினர் பங்குத்தொகை ரூ. 8,750 மற்றும் அரசு பங்குத்தொகை ரூ. 2,75,000 உடன் ெசயல்பட்டு வருகிறது. இச்சங்கம் தேங்காய் நார் மூலம் கயிறு உற்பத்தி செய்து விற்பனை செய்வதன் மூலம் ஆண்டு முழுவதும் உறுப்பினர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கி வருகிறது.இச்சங்க உறுப்பினர்களுக்கு தொடர் வேலைவாய்ப்பினை அளிக்கும் பொருட்டு இரண்டு தானியங்கி கயிறு திரிக்கும் மற்றும் இதர இயந்திரங்களும் ரூ. 10 லட்சம் அரசு நிதியுதவியுடன் கொள்முதல் செய்து நிறுவப்படும்.

திருப்பூர் மாவட்டத்தில் அலங்கியம் ஆதிதிராவிடர் சேம்பர் செங்கல் தயாரிப்போர் தொழில் கூட்டுறவு சங்கம் 20.08.1991 ல் பதிவு செய்யப்பட்டு 139 உறுப்பினர்களுடன் அரசு பங்கு மூலதனமாக ரூ. 3,50,000 உறுப்பினர் பங்குத்தொகை ரூ. 3,66,950 உடன் செயல்பட்டு வருகிறது. ஆதிதிராவிடர் உறுப்பினர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கி, அவர்களால் உற்பத்தி செய்யப்படும் செங்கல்லை சங்கம் விற்பனை செய்து வருகிறது.

மழைக்காலங்களில் செங்கல் உற்பத்தி பாதிக்காத வகையில் உறுப்பினர்களுக்கு தொடர்ந்து வேலைவாய்ப்பினை வழங்க ஏதுவாக ரூ. 22 லட்சம் அரசு நிதியுதவியுடன் இச்சங்கத்தின் செங்கல் சூளை மற்றும் கிடங்குகளில் மேற்கூரை கால்வனைசிங் தகடுகளால் மூடி மேம்படுத்தப்படும்.திருப்பூர் மாவட்டத்தில் முத்தூர் ஆதிதிராவிடர் சாக்குப்பை தைப்போர் தொழிற்கூட்டுறவு சங்கம் 31.07.1985 ல் பதிவு செய்யப்பட்டு 145 ஆதிதிராவிடர் உறுப்பினர்களுடன் பங்கு மூலதனமாக ரூ. 51,330 உடன் செயல்பட்டு வருகிறது. இச்சங்கம் பழுதடைந்த காலி சாக்குப் பைகளை கொள்முதல் அதனை பழுது நீக்கம் செய்யும் வேலைவாய்ப்பினை உறுப்பினர்களுக்கு வழங்கி வருகிறது.

தற்போது சங்கமானது தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் காலியான பழுதடைந்த சாக்குப்பைகளை கொள்முதல் செய்து பின்னர் பழுது நீக்கம் செய்து அதனை அரசு நிறுவனங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு விற்பனை மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு விற்பனை செய்து வருகிறது. இச்சங்க உறுப்பினர்களுக்கு தொடர்ந்து வேலைவாய்ப்பு வழங்கி உற்பத்தியை அதிகரிக்கும் விதமாக ரூ. 18.35 லட்சம் அரசு நிதியுதவியுடன் அங்கு பட்டறை அமைத்து சணல் தைக்கும் தையல் இயந்திரம் கொள்முதல் செய்து நிறுவப்படும்.

கரூர் ஆடைகள் உட்பொருட்கள் உற்பத்தி மற்றும் விற்பனை தொழிற்கூட்டுறவு சங்கம் 29.01.1986 இல் பதிவு செய்யப்பட்டு 138 உறுப்பினர்களுடன் உறுப்பினர்களின் பங்குத் தொகை ரூ. 24,875 உடன் செயல்பட்டு வருகிறது.இச்சங்க உறுப்பினர்களால் தயாரிக்கப்படும் மேஜைவிரிப்பு, போர்வை, தலையணை உறை , துண்டு வகைகளை கொள்முதல் செய்தும் தேவைப்படும் நேர்வில் தையல் தொழிலை மேற்கொண்டும், தேசிய துணியக நிறுவனம் கோவை மற்றும் இதர அரசு சார்ந்த நிறுவங்களுக்கு விற்பனை செய்து வருகிறது.சங்க உறுப்பினர்களுக்கு தொடர் வேலைவாய்ப்பினை வழங்கும் பொருட்டு ரூ. 1.26 லட்சம் அரசு நிதியுதவியுடன் புதிய தையல் இயந்திரங்கள் கொள்முதல் செய்து இச்சங்கத்திற்கு வழங்கப்படும்.

நடப்பு நிதி ஆண்டு 2019-20-ல் மதுரை மாவட்டம் மேலூர் வட்டம் அம்மலக்காரன்பட்டி கிராமத்தில் சுமார் 38 ஏக்கர் பரப்பளவில் புதிய தொழிற்பேட்டை, சிட்கோ நிறுவனத்தின் மூலம் ரூ. 18.80 கோடி திட்ட மதிப்பில் உருவாக்கப்படும். இத்திட்ட மதிப்பில், குறு, சிறு நிறுவனங்கள் குழும மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் மைய அரசின் பங்கு 60 விழுக்காடாகவும் மற்றும் சிட்கோ நிறுவனத்தின் பங்கு 40 விழுக்காடாகவும் இருக்கும். இத்தொழிற்பேட்டையை உருவாக்குவதன் மூலம் அங்கு தொழில் முனைவோர்கள் தொழில் துவங்க வசதி செய்யப்படுவதன் வாயிலாக இப்பகுதி இளைஞர்களுக்கு அதிகப்படியான வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்.

இவ்வாறு அமைச்சர் பா.பென்ஜமின் அறிவித்தார்.