தற்போதைய செய்திகள்

ஆலங்குடி கொத்தகோட்டையில் கால்நடை கிளை நிலையம் – சட்டப்பேரவையில் அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் தகவல்…

சென்னை:-

ஆலங்குடி கொத்தகோட்டையில் கால்நடை கிளை நிலையம் அமைக்கப்படும் என்று பேரவையில் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

தமிழக சட்டப்பேரவையில்  கேள்வி நேரத்தின்போது சங்ககிரி உறுப்பினர் ராஜா பேசுகையில், சங்ககிரியில் மகளிர் கல்லூரி அமைக்க அரசு ஆவன செய்யுமா? என்று கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதில் அளித்த உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், சங்ககிரியில் கல்லூரி துவக்கும் கருத்துரு அரசின் பரிசீலனையில் இல்லை. சேலம் மாவட்டத்தில் போதுமான அளவு அரசு கல்லூரிகள், அரசு உதவிப்பெறும் கல்லூரி, உறுப்பு கல்லூரி, மகளிர் கல்லூரிகள் உள்ளன.

அங்கு கூடுதலாக பாடப்பிரிவுகள் துவக்கப்பட்டுள்ளது. ஒப்பளிக்கப்பட்ட இடங்களில் போதுமான இடங்கள் நிரம்பவில்லை. எனவே மாணவர் எண்ணிக்கை கூடும்போது தேவையின் அடிப்படையில் புதிய மகளிர் கல்லூரி துவக்க அரசு பரிசீலனை செய்யும் என்றார்.

இதைத்தொடர்ந்து ஆலங்குடி தொகுதி உறுப்பினர் மெய்யநாதன், ஆலங்குடி தொகுதி கொத்தகோட்டை ஊராட்சியில் கால்நடை மருத்துவமனை அமைக்க அரசு முன் வருமா? என்று கேள்வி எழுப்பினார். அதற்கு அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் பதிலளிக்கையில், கொத்தகோட்டை ஊராட்சியில் கால்நடை அலகுகளின் எண்ணிக்கை 3 ஆயிரத்துக்கும் அதிகமாக உள்ளது. எனவே மேற்படி கிராமத்தில் கால்நடை கிளை நிலையம் துவக்க சாத்திய கூறுகள் உள்ளது.

கால்நடை மருத்துவமனை நேரிடையாக அமைக்க இயலாது. அங்கு கால்நடை கிளை நிலையம் அமைக்கப்பட்டால் எதிர்காலத்தில் அலகுகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் பட்சத்தில் அதனை கால்நடை மருந்தகமாக தர உயர்த்த அரசு கொள்கை முடிவுக்கு உட்பட்டு பரிசீலிக்கும் என்றார்.