தற்போதைய செய்திகள்

அமெரிக்காவின் சிகாகோ நகரில் துணை முதலமைச்சருக்கு மகாத்மா காந்தி பதக்கம்

சிகாகோ

அமெரிக்காவின் சிகாகோ நகரில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு மகாத்மா காந்தி பதக்கம் வழங்கப்பட்டது.

அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்றுள்ள தமிழ்நாடு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு நேற்று சிகாகோ, நெபர்வல்லில், மெட்ரோபாலிட்டன் ஏசியா பேமிலி சர்வீசஸ் மையத்தின் சார்பில் நடைபெற்ற தேசத்தந்தை அண்ணல் மகாத்மா காந்தியின் 150-வது பிறந்த நாள் விழாவில் மகாத்மா காந்தி மெடலியன் ஆஃப் எக்ஸெலன்ஸ்” பதக்கம் வழங்கி கவுரவிக்கப்பட்டது.

இந்த விழாவில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது:-

மகாத்மா காந்தியின் 150-வது பிறந்த நாளை முன்னிட்டு நடைபெற்ற “9-வது காங்கிரஸெனல் விருது கண்கவர் நிகழ்ச்சி” – யில் “உலகளாவிய சமூக ஆஸ்கர், 2019” விருது பெற்ற சந்தோஷ்குமாரை முதலில் நான் பாராட்டுகிறேன்.சிகாகோ பெருநகரத்தில் அவர் ஆற்றிய மிகச் சிறப்பான சமுதாயப் பணிகளுக்காக இப்போது சந்தோஷ்குமாருக்கு இன்னொரு விருது வழங்கப்பட்டிருக்கிறது. சந்தோஷ்குமார் சுவாமி விவேகானந்தரின் வழியைப் பின்பற்றி சிகாகோ வந்து இங்கே ஒரு சமுதாய அமைப்பை உருவாக்கியிருக்கிறார்.

கடந்த பல வருடங்களாக “மெட்ரோ பாலிட்டன் ஏசியன் ஃபேமிலி சர்வீஸஸ்” அமைப்பு இங்கே ஆற்றும் சமுதாயத் தொண்டுகள் என்னை மிகவும் கவர்ந்துள்ளது. அதற்காக அவர்களை பாராட்டி, மென்மேலும் இது போன்ற சமுதாயப் பணிகளில்,எதிர்கால முயற்சிகள் அனைத்திலும் வெற்றி பெற வேண்டும் என வாழ்த்துகிறேன்.எனக்கும் இந்த அமைப்பின் சார்பில் இங்கு “மகாத்மா காந்தி மெடலியன் ஆஃப் எக்ஸெலன்ஸ்” பதக்கம் வழங்கி கவுரவிக்கப்பட்டுள்ளேன் என்பதை பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

இது மகாத்மா காந்தியின் 150-வது பிறந்தநாள் விழா. கடந்த சில நாட்களாக நான் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் எல்லாம் அமெரிக்க வாழ் சமூகத்தின் தலைவர்கள் பலரும் எங்கள் தேச தந்தையின் பெயரை உச்சரிப்பதைக் கேட்கும் போது இந்தியன் என்ற முறையில் எனக்கு பெருமையாகவும், மன நிறைவாகவும் இருக்கிறது. மகாத்மா காந்தியின் தொலைநோக்கு பார்வைக்கு பொதுவாழ்வில் இருக்கும் ஒவ்வொருவரும் தங்களை மீண்டும் மீண்டும் அர்ப்பணித்து கொள்ள வேண்டும் என்பதை நினைவூட்டும் வகையில் இந்த விருது வழங்கப்பட்டிருப்பதாக எண்ணுகிறேன். இன்றைய தினம் பதக்கத்தை வழங்கி என்னை கவுரவித்துள்ளதற்கு நன்றி. இந்த பதக்கம் மேலும் ஒரு புதிய பொறுப்பை என் மீது சுமத்தியிருக்கிறது.

இவ்வாறு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேசினார்.

விழாவில் மெட்ரோபாலிட்டன் ஆசியன் ஃபேமிலி சர்வீஸின்” அறங்காவலர் சந்தோஷ் குமார், உலக தமிழ் இளைஞர் பேரவை தலைவர் டாக்டர் விஜய பிரபாகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.