கோவை

யானைகளை பார்க்க குவியும் குழந்தைகள் : விடுமுறை நாட்களில் அலைமோதும் கூட்டம்

மேட்டுப்பாளையம்

மேட்டுப்பாளையம் தேக்கம்பட்டியில் நடைபெற்று வரும் புத்துணர்வு முகாமில் யானைகளை காண குழந்தைகள் குவிந்தனர். விடுமுறை நாட்கள் என்பதால் கூட்டம் அலைமோதியது.

மேட்டுப்பாளையத்தில் உள்ள தேக்கம்பட்டியில் பவானி ஆற்று படுகையில் தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ஆண்டு தோறும் யானைகள் சிறப்பு நலவாழ்வு முகாம் நடத்தபட்டு வருகிறது. கோயில்களில் மக்கள் வெள்ளத்தின் நடுவே திருப்பணிகளை மட்டும் ஆண்டுதோறும் மேற்கொள்ளும் யானைகளுக்கு அவற்றின் மனஅழுத்தத்தையும் சோர்வையும் போக்கி யானைகளுக்கு புத்துணர்வு அளிக்கும் வகையில் இந்த முகாம் தொடங்கப்பட்டது.

4 ஆண்டுகளாக முதுமலை தெப்பக்காட்டில் நடத்தப்பட்ட இந்த முகாம் பின்னர் மேட்டுப்பாளையம் அருகே உள்ள தேக்கம்பட்டிக்கு மாற்றப்பட்டு தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. 12-வது ஆண்டாக நடத்தப்படும் இந்த யானைகள் சிறப்பு நலவாழ்வு முகாமில் பங்கேற்பதற்காக மதுரை, திருச்சி, ராமேஸ்வரம், காஞ்சிபுரம் உள்ளிட்ட தமிழகத்தில் அனைத்து பகுதிகளிலும் இருந்து கோயில்களில் வளர்க்கப்பட்டு வரும் யானைகள் இந்த முகாமிற்கு கொண்டு வரப்பட்டுள்ளன.

இந்த யானைகள் சிறப்பு நலவாழ்வு முகாமானது வனவிலங்குகளுக்கு மிக உகந்த மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவார பகுதியாகவும் மூன்று பக்கங்களும் மலைகளாலும் வற்றாத ஜீவநதியான பவானி ஆற்றங்கரை ஓரத்தில் இயற்கையான சூழலில் நடத்தப்படுவது தனி சிறப்பாக உள்ளது. இம்முகாமில் கோயில் மற்றும் திருமடங்களுக்கு சொந்தமான 28 யானைகள் பங்கேற்றுள்ளன,

இந்த முகாமில் பங்கேற்றுள்ள யானைகளுக்கு அவற்றின் உடல் எடை சரிபார்க்கப்பட்டு உடல் எடையை குறைக்க தினசரி காலை மாலை நடைபயிற்சி போன்றவை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் ஆற்றுப்படுகை இல்லாத கோயில் யானைகள் ஆற்று நீரில் குளித்து மகிழ்வதற்காக தனியாக சவர்பாத் ஏற்பாடு செய்யபட்டுள்ளதால் அதில் யானைகள் ஒய்யாரமாக படுத்து குளித்து மகிழ்கின்றன. கடலோர மாவட்டங்களில் வசிக்கும் யானைகள் ஆற்று நீரினை கண்டவுடன் உற்சாகமடைந்து சவரில் பாகன்கள் அழைத்தும் எழுந்து வராமல் ஆனந்த குளியல் போட்டு வருகின்றன. 48 நாட்கள் அதாவது ஒரு மண்டலம் இந்த யானைகள் பராமரிக்கப்பட்டு பின்னர் சொந்த ஊர் அனுப்பி வைக்கப்பட உள்ளது.

இந்த நிலையில் நேற்றுமுன்தினம் ஞாயிற்றுகிழமை விடுமுறை என்பதால் யானைகளை காண பொதுமக்கள் குழந்தைகள் காலை முதல் ஏராளமானோர் முகாம் நடைபெறும் இடத்திற்கு வந்து யானைகள் நடைபயிற்சி செய்வதை பார்த்து மகிழ்ந்தனர். மேலும் கோயில்களில் தனித்தனியாக இதுவரை பார்த்து ரசித்த யானைகளை தேக்கம்பட்டியில் ஒரே சமயத்தில் 28 யானைகளை காண முடிவது மனதிற்கு மகிழ்ச்சி அளிப்பதாக பார்வையாளர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். மேலும் அரையாண்டு தேர்வு விடுமுறை விடப்படுவதால் இன்று முதல் மேலும் மக்கள் கூட்டம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.