தற்போதைய செய்திகள்

இடைத்தேர்தல் போல உள்ளாட்சி தேர்தலிலும் தி.மு.க.வுக்கு மரண அடி கொடுக்க வேண்டும் – அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் சூளுரை

திருவண்ணாமலை

இடைத்தேர்தல் போல உள்ளாட்சி தேர்தலிலும் தி.மு.க.வுக்கு மரண அடி கொடுக்க வேண்டும் என்று அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் சூளுரைத்தார்.

உள்ளாட்சி தேர்தல் பணிகள் குறித்து திருவண்ணாமலை தெற்கு மாவட்ட, ஒன்றிய, நகர, வட்ட கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மாவட்ட கழக அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் தெற்கு மாவட்டத்தை சேர்ந்த தண்டராம்பட்டு, செங்கம், கலசப்பாக்கம், திருவண்ணாமலை சட்டமன்ற தொகுதிகளை சேர்ந்த மாவட்ட, நகர, ஒன்றிய, பேரூர் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்துக்கு தெற்கு மாவட்ட கழக செயலாளரும், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சருமான சேவூர் ராமச்சந்திரன் தலைமை வகித்து பேசியதாவது:-

உள்ளாட்சி தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட இருக்கிறது. ஒருங்கிணைப்பாளர்கள் அறிவிப்பின்படி உள்ளாட்சித் தேர்தலில் கழகம் சார்பில் போட்டியிட விரும்பும் உடன்பிறப்புகளுக்கு வரும் 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் விருப்ப மனுக்கள் வழங்கப்பட இருக்கிறது. உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படும் நிர்வாகிகள் ஒற்றுமையோடு செயல்பட்டு திருவண்ணாமலை மாவட்டத்தை 100 சதவீத வெற்றியை பெற வேண்டும். நடந்து முடிந்த விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் பாடம் புகட்டியது போல வரும் உள்ளாட்சித் தேர்தலிலும் திமுகவிற்கு மரண அடி கொடுக்க வேண்டும்.

இவ்வாறு அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் பேசினார்.