தற்போதைய செய்திகள்

சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தும் தொழிற்சாலைகள் மூடப்படும் – அமைச்சர் கே.சி.கருப்பணன் எச்சரிக்கை

ஈரோடு:-

சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தும் தொழிற்சாலைகள் மூடப்படும் என்று அமைச்சர் கே.சி.கருப்பணன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஈரோடு மாவட்டம் பவானி தொகுதிக்குட்பட்ட ஓடத்துறை, கவுந்தப்பாடி, பெரியபுலியூர், சின்னபுலியூர், ஆலத்தூர் பகுதிகளில் ரூ.4.50 கோடி மதிப்பில் வளர்ச்சிப் பணிகளை சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் கழகத்தினர் 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் கோபிசெட்டிபாளைத்தில் மனுக்களை பெற்றுக்கொள்ளலாம். வறுமைகோட்டிற்கு கீழே உள்ள 60 லட்சம் குடும்பங்கள் கணக்கெடுக்கப்பட்டு உள்ளது. அவர்களுக்கு அரசு அறிவித்த உதவித்தொகை விரைவில் வழங்கப்படும்.

சென்னையில் காற்று மாசு அதிகம் என்பது தவறான தகவல். கடல் காற்று குறைவாக இருந்ததால் காற்று மாசு 120 வரை இருக்க வேண்டிய நிலையில் 180 ஆக அதிகரித்துள்ளது. சமூக ஆர்வலர்கள் என்ற பெயரில் சில தனியார் அமைப்புகள் காற்று மாசு 300 வரை உள்ளதாக தவறான தகவலை கூறி வருகின்றனர். டெல்லி போன்று தமிழகத்தில் காற்று மாசு ஏற்பட வாய்ப்பு இல்லை. தமிழகத்தில் எந்த ஒரு தொழிற்சாலையிலும் கரும்புகை வெளியேறாத அளவிற்கு தடுப்பு சாதனம் பொறுத்தப்பட்டுள்ளது.

சுற்றுச்சூழல் மாசுபடும் அளவிற்கு கரும்புகையை வெளியேற்றும் தொழிற்சாலைகள் மூடப்படும். பிளாஸ்டிக் பொருட்கள் தமிழகத்தில் முற்றிலும் ஒழிக்கப்பட்டுள்ளது. பஞ்சமி நிலங்களை மீட்க முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி நடவடிக்கை எடுப்பார்.

இவ்வாறு அமைச்சர் கே.சி.கருப்பணன் கூறினார்.

இந்நிகழ்ச்சியில் பவானி ஒன்றிய கழக செயலாளர் எஸ்.எம்.தங்கவேலு, மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் கே.ஆர்.ஜான், மாசு கட்டுப்பாட்டு வாரிய உறுப்பினர் தட்சிணாமூர்த்தி, ஒன்றிய பேரவை செயலாளர் கே.கே.விஸ்வநாதன், கவுந்தப்பாடி சிவக்குமார், உஷா மாரியப்பன், அஷ்ரப் அலி, விஜயலட்சுமி, ஆலத்தூர் ஊராட்சி செயலாளர் ஜெயப்பிரகாஷ், பெரியபுலியூர் எஸ்.என்.ராசு, சின்னப்புலியூர் ஜெகதீஸ், ஓடத்துறை முத்துகிருஷ்ணன், அய்யம்பாளையம் சரவணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.