சிறப்பு செய்திகள்

தமிழகத்தில் தொழில் தொடங்க வாரீர் – அமெரிக்கவாழ் தமிழ் தொழில் முனைவோருக்கு துணை முதல்வர் அழைப்பு

சிகாகோ:-

தமிழகத்தில் தொழில் தொடங்க வாரீர் என்று அமெரிக்க வாழ் தமிழ் தொழில் முனைவோருக்கு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அழைப்பு விடுத்துள்ளார்.

துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் 12.11.2019 அன்று இந்திய- அமெரிக்க தொழில் கூட்டமைப்பின் சர்வதேச வட்ட மேஜை கருத்தரங்கத்தில் பங்கேற்று ஆற்றிய உரை வருமாறு:-

இந்தியாவிற்கும், அமெரிக்காவிற்கும் உள்ள நெருங்கிய உறவை கொண்டாடும் நேரம் இது. சிகாகோ நகரில் தொழில் தொடங்கி வெற்றி பெற்ற அமெரிக்க வாழ் இந்தியர்களை பாராட்டும் மிக முக்கியமான நிகழ்ச்சி இது. இங்குள்ள அமெரிக்கர் தொழில் முனைவோர் மற்றும் அமெரிக்க வாழ் இந்திய தொழில் முனைவோர் ஆகிய இரு தரப்பினரையும் தமிழகத்தில் முதலீடு செய்ய வாருங்கள் என்று அழைப்பு விடுக்கிறேன். தமிழ்நாடு இந்தியாவில் உள்ள மிகவும் முன்னேறிய மாநிலங்களில் ஒன்று.

இந்தியாவின் பொருளாதாரத்தில் இரண்டாவது பெரிய மாநிலம். முதலீடுகளுக்கு மிகவும் ஏற்ற மாநிலம். “எப்.டி.ஐ. பைனான்சியல் டைம்ஸ் குரூப்” இதழ் ஆய்வின்படி, 2018-வது ஆண்டில் “உற்பத்தி துறையில்” தமிழ்நாடு அதிக அளவில் அந்நிய முதலீடுகளை ஈர்த்துள்ளது. புதிய தொழில் தொடங்குவதற்கு தேவையான அனைத்து வசதிகளும் உள்ள மாநிலங்களில் தமிழ்நாடு, இந்தியாவில் இரண்டாவது இடத்தில் இருப்பதாகவும், முதலீடுகளுக்கு ஏற்ற மாநிலங்கள் பட்டியலில் முதலிடத்தில் இருப்பதாக “Frost and Sullivan” ஆய்வு தெரிவிக்கிறது.

“நிதி அயோக்” வெளியிட்டுள்ள “இந்தியவின் புதிய கண்டுபிடிப்புகள் குறியீடு-2019” அடிப்படையில் தமிழ்நாடு இரண்டாவது இடத்தில் உள்ளது. “சமையல் எப்படியென்று சாப்பிடும் போது தெரியும்” என்பது போல் தமிழ்நாட்டில் முதலீடுகளுக்கான சூழ்நிலை எப்படியிருக்கிறது என்பது இரண்டாவது உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் போடப்பட்ட 304 புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் தெரிய வந்தது. இந்த மாநாட்டின் மூலம் 43 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்புள்ள முதலீடுகளை தமிழ்நாடு ஈர்த்துள்ளது.

நாட்டின் “ஆட்டோமொபைல்” தலைநகரமாகத் திகழும் தமிழ்நாட்டில் ஒரு நிமிடத்திற்கு மூன்று கார்கள், 30 வினாடிக்கு 1 இரு சக்கர வாகனம், 90 வினாடிக்கு 1 டிரக் உற்பத்தி செய்யும் வலுவான, உயர்தர உட்கட்டமைப்பு வசதிகளை கொண்டிருக்கிறது. 1995-ம் ஆண்டு முதல் ஃபோர்டு மோட்டார் கம்பெனியை தமிழகத்தில் தொழில் தொடங்க அனுமதித்ததன் மூலம் மறைந்த தமிழக முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் தமிழகத்தில் ஆட்டோ மொபைல் தொழில் புரட்சிக்கு வித்திட்டவர்.

அவ்வப்போது ஏற்படும் சுற்றுப்புறச் சூழலுக்கு ஏற்றவாறு, மின்சாரப் பேருந்து உற்பத்தியை ஊக்குவிக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. சமீபத்தில் முதலமைச்சர் ஹுண்டாய் நிறுவனத்தின் “கொனா” என்ற இந்தியாவின் முதல் “மின்சாரப் பேருந்து” சேவையை சென்னையில் துவக்கி வைத்திருக்கிறார். சென்னையில் உள்ள உலகின் இரண்டாவது பெரிய ஹுண்டாய் தொழிற்சாலையில் இந்த மின்சாரப் பேருந்து உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.

ஆட்டோ மொபைல் தொழிலில் பல சவால்கள் இருப்பதால், பல்வேறு தொழில் விரிவாக்க நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்து வருகிறது. இந்தியா விண்வெளி மற்றும் பாதுகாப்புத்துறை தொழிற்சாலைகள் போன்றவற்றில் மிக அதிகமான அளவில் “திறமையான உழைப்பாளர்கள்” தமிழ்நாட்டில் உள்ளார்கள். இந்தியாவின் “உள் நாட்டிலே தயாரிக்கப்பட்ட மிக அதிவிரைவு ரயில்”, சமீபத்தில் “சந்திர கிரகத்திற்கு ஜி.எஸ்.எல்.வி ராக்கெட்டை ஏவிய கிரையோஜெனிக் எஞ்சின்” ஆகிய அனைத்தும் தமிழ்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்டவை.

தமிழக தொழில்துறையில் உள்ள முன்னேறிய தொழில் நுட்பம் மற்றும் தொழில் சார்ந்த சுற்றுச்சூழல்கள், அமேசான், ஐபிஎம், பாக்ஸ்கான், டெல், ஃபோர்டு, கேட்டர் பிள்ளர், போயிங், பிஎம்டபுள்யூ, டாய்ம்லெர், ஹுண்டாய், பிஎஸ்ஏ-பெக்கியாட், நோக்கியா போன்ற புகழ் பெற்ற கம்பெனிகள் ஈர்க்கப்பட்டுள்ளன. 250 அமெரிக்க கம்பெனிகளும் இதில் அடங்கும்!
தொழில்நுட்பத் துறையில் மேலும் வளர்ச்சியடைவதற்கான சாத்தியக்கூறுகள் தமிழ்நாட்டில் உள்ளன. சென்னைக்கு 14.8 டி.பி.பி.எஸ் அலைவரிசையுடன் வரும் 3-சப்மேரின் கேபிள், மாநிலத்தில் உள்ள மிகை மின்சாரம், உயர்ந்த ரக மனித வளம் ஆகியவை “தகவல் பூங்கா” மற்றும் தகவல் தொழில் நுட்ப நிறுவனங்கள் அமைப்பதற்கு ஏற்ற இடமாக உள்ளது.

மாநிலம் முழுவதும் உள்ள பல்வேறு தொழிற் பூங்கா, தகவல் தொழில் நுட்ப பூங்கா மற்றும் மருத்துவ பூங்காக்களில் ஏறக்குறைய 8000-த்திற்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்கள் தொழில் தொடங்குவதற்கு வழங்க தயார் நிலையில் உள்ளன. செலுத்திய வரியை திரும்ப பெறுவது, தரமான மின் விநியோகம், உட்கட்டமைப்புகள் நிறைந்த ஆறு விமான நிலைய வசதி, நான்கு துறைமுகங்கள், திறமைக்கும், போட்டிக்கும் புகழ்பெற்ற மாநிலம் போன்ற பல்வேறு தொழில் சார்ந்த சுற்றுச்சூழல் மிகுந்த மாநிலமாக விளங்கும் தமிழகம் முதலீட்டாளர்கள் தொழில் தொடங்க விரும்பும் மாநிலமாக இருக்கிறது.

ரியல் எஸ்டேட் மற்றும் கட்டுமான தொழில்களில் முதலீடு செய்வதற்கு தமிழ்நாட்டில் அதிக வாய்ப்புகள் உள்ளன. கட்டுமான திட்டங்கள் அதிகம் இருப்பதால் அதில் கட்டுமான கம்பெனிகளும், அந்த தொழிலில் ஆர்வம் உள்ளவர்களும் பங்கேற்கலாம். “வரி திரும்பப் பெறுதல்” “மூலதன மான்யம்”, “திறன்மிகுந்த மனித வளம்”, “தரமான மின்சார விநியோகம்”, “ஆறு விமான நிலையம்”, “நான்கு துறைமுகங்கள்” போன்ற உட்கட்டமைப்பு வசதிகள், திறமை மற்றும் போட்டிக்கு புகழ்பெற்ற மாநிலம் போன்றவை தமிழ்நாட்டில் முதலீடுகளை செய்வதற்கு ஏற்ற ரம்மியமான சூழலாக உள்ளது.

சட்டம் ஒழுங்கை சிறப்பாக நிலைநாட்டியும், அரசு நலத் திட்டங்களை செம்மையாக செயல்படுத்தியும், ஒவ்வொரு காலகட்டத்திலும் புதிய கொள்கைகளை வகுத்தும் தமிழ்நாட்டை தொழில் வளர்ச்சிப் பாதையில் கம்பீரமாக பயணிக்க வைத்தது மறைந்த எங்களுடைய புரட்சித்தலைவி அம்மா அவர்கள் முதலமைச்சராக இருந்த போதுதான் என்பதை தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

அம்மாவின் வழியில் செயல்படும் எங்கள் அரசு, முதலீட்டாளர்களுக்கு ஏற்ற சூழலை மேம்படுத்தவும், தொழில் வளர்ச்சியை பெருக்கவும் துறை ரீதியாக கொள்கை முயற்சிகளை அயராது மேற்கொண்டு வருகிறது. 2018லிருந்து “புதிய தகவல் தொழில் நுட்ப கொள்கை”, “ஸ்டார்ட் அப் அன்ட் இன்னோவேசன் கொள்கை”, “உணவு பதப்படுத்தும் கொள்கை”, “டெக்ஸ்டைல் கொள்கை”, “எரிசக்தி கொள்கை” என, மிக அண்மையில் “மின்பேருந்து கொள்கை”யையும் வெளியிட்டுள்ளது எங்கள் அரசு.
எந்த சந்தேகமும் இன்றி, தமிழ்நாடு தற்போது தொழில் வளர்ச்சியின் புதிய பொற்காலத்தில் உள்ளது. தொழில் புரிவதற்கு அனைத்து உதவிகளையும் செய்ய எங்கள் மாநிலம் தயாராக இருக்கிறது.

ஆகவே, தமிழ்நாட்டின் வளர்ச்சிப் பாதையில் நீங்கள் அனைவரும் இணைய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். ஆரோக்கியமான அனைவரையும் உள்ளடக்கிய தொழில் வளர்ச்சியில், அனைவருக்கும் அனைத்தையும் அளிக்கும் “தமிழக வளர்ச்சி மாதிரி”யின் அடிப்படையில் அனைவரும் பயனடைய முடியும்.

உலகத்தின் அனைத்துப் பகுதிகளில் இருந்தும் முதலீடுகளையும், தொழில்களையும் நாங்கள் வரவேற்கிறோம். இது ஒரு மனம் திறந்த அழைப்பு! இங்கு வாழும் தமிழர்களுக்கு – தாங்கள் பிறந்த தமிழ்நாட்டின் மீது ஒரு தனிப்பாசம் இருக்கும். இந்தியாவில் உள்ள மற்ற மாநிலத்திலிருந்து வந்து இங்கு இருப்பவர்களும், அமெரிக்காவில் தொழில் புரிவது எப்படி பலனளிக்கும் விதத்தில் இருக்கிறதோ அதே மாதிரி தமிழகத்திலும் தொழில் புரிவது பலனளிக்கும் என்பதை உணர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இந்த அருமையான தருணத்தை பயன்படுத்தி உங்கள் ஒவ்வொருவரையும் தமிழகத்தில் தொழில் தொடங்க வரவேற்கிறேன்.

நீங்கள் அனைவரும் தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சியில் துணை நிற்க தயாராக இருக்கிறீர்கள் என்று எனக்குத் தெரியும். உட்கட்டமைப்பு தொழிலிலோ அல்லது சமுதாயத்தில் உள்ளவர்களுக்கு குறைவான விலையில் வீடுகளை கட்டிக் கொடுக்கும் திட்டங்களிலோ ஈடுபட விரும்புகிறீர்கள் என்பதும் எனக்குத் தெரிகிறது. ஆனால் எதில் முதலீடு செய்வது, எப்படி முதலீடு செய்வது, முதலீடு செய்ததை எப்படி கவனித்துக் கொள்வது போன்ற உள்ளூர் தகவல்களை அறிந்து கொள்வதற்கு உங்களுக்கு நேரம் இல்லாமல் இருக்கலாம்.

இதை சமாளித்து, உட்கட்டமைப்பிற்கு நீண்ட கால நிதியை உருவாக்குவதற்கு இந்திய பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியத்தில் பதிவு செய்து இரு “மாற்று முதலீட்டு நிதி” திட்டங்களை தமிழ்நாடு அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. அதற்கு தமிழ்நாடு உள்கட்டமைப்பு நிதி மற்றும் தமிழ்நாடு உறைவிட நிதி என்று பெயர். இந்த முதலீடு தொடர்பான முடிவுகளை எடுப்பதற்கு அரசின் நேரடி நிர்வாகத்தின் கீழ் “உயர்மட்ட முதலீடு குழு” இருக்கிறது.

நிறுவனங்களில் இருந்தும், அதிக முதலீடு செய்யும் தனி நபர்களிடமிருந்தும் இந்த நிதியை அரசு பெறலாம். ஆகவே இங்கே அமர்ந்திருக்கும் நீங்கள் தமிழ்நாட்டில் உள்ள “உள்கட்டமைப்பு நிதியிலும்” “உறைவிட நிதியிலும்” முதலீடுகள் செய்ய வேண்டும் என்று உங்களை எல்லாம் கேட்டுக் கொள்கிறேன். தயவு செய்து, தமிழ்நாட்டில் நேரடியாகவோ அல்லது உட்கட்டமைப்பு, உறைவிட நிதியிலோ முதலீடு செய்யுங்கள். நாம் இணைந்து வளருவோம், செழித்தோங்குவோம்.

இவ்வாறு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேசினார்.

இக்கருத்தரங்கில் தமிழக அரசின் நிதித்துறை முதன்மை செயலாளர் ச.கிருஷ்ணன், டாக்டர் விஜய் பிரபாகர், இந்திய -அமெரிக்க தொழில் கூட்டமைப்பின் நிர்வாகிகள் அமெரிக்க வாழ் தமிழ் தொழில் முனைவோர் கலந்து கொண்டனர்.