சிறப்பு செய்திகள்

மக்கள் நலத்திட்டங்களை தடுக்கும் தி.மு.க வுக்கு பாடம் புகட்டுவீர் – அமைச்சர் எஸ்.பி. வேலுமணி பிரச்சாரம்

கோவை

மக்கள் நலத்திட்டங்களை தடுக்கும் தி.மு.க வுக்கு பாடம் புகட்டுவீர் என்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வாக்கு கேட்டு பிரச்சாரம் செய்தார்.

கோவை மாவட்டம் மதுக்கரை ஒன்றியத்திற்குட்பட்ட மாவுதம்பதி, பாலத்துறை, நாச்சிபாளையம், மயிலேரிபாளையம், மலுமிச்சம்பட்டி, சீரபாளையம் உள்ளிட்ட இடங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் மாவட்ட கவுன்சிலராக போட்டியிடும் சுரேந்திரன் மற்றும் ஒன்றியக் குழு உறுப்பினர்களாக போட்டியிடும் உதயகுமாரி, ஜெ.தனலட்சுமி, பிரேமாவதி, அர்ஜுனன், என்.சண்முகம், ராமசாமி ஆகியோரையும், ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் ஊராட்சி வார்டு உறுப்பினர்களையும்

ஆதரித்து கழக அமைப்புச் செயலாளரும், கோவை புறநகர் மாவட்டக் கழக செயலாளரும், நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

பிரச்சாரத்தின் போது அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசியதாவது:-

பேரறிஞர் அண்ணா அவர்களால் ஏழைகளுக்காக ஆரம்பிக்கப்பட்ட கட்சிதான் திமுக. ஆனால் இன்று அது ஒரு குடும்பத்திற்கு மட்டும் சொத்தாகி விட்டது. திமுகவில் கருணாநிதியின் குடும்பம் மட்டுமே தலைமைப் பதவிக்கு வரமுடியும்.
ஆனால் அதிமுகவில் சாதாரண உறுப்பினரும் தலைமைப் பதவிக்கு வரமுடியும். சாதாரண கிளைச் செயலாளராக இருந்து தமிழக முதல்வர் ஆகி உள்ளார் விவசாயி எடப்பாடி கே.பழனிச்சாமி.

புரட்சித்தலைவி அம்மா அவர்களின் வழியில் தமிழகத்தில் சிறப்பான ஆட்சியை நடத்திவரும் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தலைமையிலான கழக ஆட்சியை கலைத்து விட்டு தமிழக முதல்வராக வேண்டும் என்று மு.க. ஸ்டாலின் கனவு காண்கிறார். திமுக ஆட்சியில் இருந்தபோது துணை முதல்வராக இருந்த முக.ஸ்டாலின் தமிழகத்திற்கு என்ன திட்டத்தை கொண்டு வந்தார்.

திமுக மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சியில் இருந்தபோது தமிழக நலன் காக்கும் வகையில் எதையும் செய்யவில்லை. இலங்கை தமிழர்கள் கொல்லப்பட்ட போது என்ன செய்தார்கள்? முல்லைப் பெரியாறு பிரச்சினை, மீனவர் பிரச்சினை, கச்சத்தீவு பிரச்சினை, காவேரி பிரச்சனை என எதையும் தீர்க்கவில்லை. மேலும் எதிர்க்கட்சியாக இருக்கும்போதே அராஜகத்தில் ஈடுபடும் திமுக ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தின் நிலை என்னவாகும்.

சட்டசபையில் வெளிநடப்பு செய்வதையே வாடிக்கையாக கொண்ட திமுக கழக ஆட்சி கொண்டுவரும் மக்கள் நலத் திட்டங்களை தடுப்பது ஒன்றே குறிக்கோளாக கொண்டு செயல்பட்டு வருகிறது. பொங்கல் பரிசு தொகுப்பை தருவதை தடுத்து நிறுத்திய திமுக எப்படி மக்களுக்கு நல்ல திட்டங்கள் கிடைக்க முயற்சி செய்யும்.

தமிழக நலனிற்கு எதிராக செயல்பட்டு கழக அரசு கொண்டு வரும் மக்கள் நலத்திட்டங்களை தடுக்கும் திமுகவை தோற்கடியுங்கள். எண்ணற்ற மக்கள் நலத்திட்டங்கள் தந்து வரும் ஆள்கின்ற கட்சியை சேர்ந்த கழக வேட்பாளர்களை வெற்றி பெற செய்யுங்கள்.

இவ்வாறு அமைச்சர் எஸ்.பி. வேலுமணி பேசினார்.

பிரச்சாரத்தின்போது கிணத்துக்கடவு சட்டமன்ற உறுப்பினர் எட்டிமடை சண்முகம், கழக நிர்வாகிகள் மகாலிங்கம், வழக்கறிஞர் தாமோதரன், வெள்ளலூர் பாலகிருஷ்ணன், சிடிசி சின்ராஜ், கே.என்.செந்தில்குமார், ஆர்.சசிகுமார் உள்பட பலர் இருந்தனர்.