தற்போதைய செய்திகள்

பொதுமக்கள் குறைகளை நிவர்த்தி செய்வதே கழக அரசின் லட்சியம் – அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் முழக்கம்

திண்டுக்கல்

பொதுமக்களின் குறைகளை நிவர்த்தி செய்வதே கழக அரசின் லட்சியம் என்று பெரியகோட்டையில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் கூறினார்.

திண்டுக்கல் மாவட்டம், பெரியகோட்டையில் முதலமைச்சரின் சிறப்பு குறை தீர்வு திட்ட முகாம் மாவட்ட ஆட்சித்தலைவர் மு.விஜயலட்சுமி தலைமையில் நடைபெற்றது.

விழாவில் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் கலந்து கொண்டு 484 பயனாளிகளுக்கு ரூ.58.26 லட்சம் மதிப்பீட்டிலான அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசியதாவது:-

புரட்சித்தலைவி அம்மாவின் வழியில் செயல்பட்டு கொண்டிருக்கும், முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும், தமிழகம் முன்னோடி மாநிலமாக திகழ வேண்டும் என்ற அடிப்படையில், தொலைநோக்கு பார்வையுடன் பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை அறிவித்து சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்.

மக்களின் குறைகளை நிவர்த்தி செய்வதற்கு, அம்மாவின் அரசு அதிக முன்னுரிமை அளித்து, அவர்களின் தேவைகளை உடனுக்குடன் நிவர்த்தி செய்து வருகிறது. பொதுமக்களின் தேவைகளை, கோரிக்கை மனுக்களாக அளித்து பயன்பெறும் வகையில், மக்கள் குறைதீர்க்கும் கூட்டம், அம்மா திட்ட முகாம் ஆகியவைகள் மூலம் பொதுமக்களின் தேவைகளை நிவர்த்தி செய்து வருகிறது.

பொதுமக்கள் தங்களுடைய தேவைகளான முதியோர் உதவித்தொகை, பட்டா மாறுதல், வீட்டுமனைப் பட்டா, உழவர் பாதுகாப்பு அட்டை, பிறப்பு, இறப்பு சான்றிதழ், சாதிச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், குடிநீர் வசதி, சாலை வசதி, மின்விளக்கு வசதி, குடும்ப அட்டை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை மனுக்களை பொதுமக்கள், பல்வேறு பகுதிகளிலிருந்து பேருந்தின் மூலம் வட்டாட்சியர், கோட்டாட்சியர் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்று மனுக்களை வழங்க, ஏற்படும் நேரம், செலவு, வேலை இழப்பு உள்ளிட்ட சிரமத்தை தவிர்க்கும் பொருட்டு, வருவாய்த்துறையின் மூலம் அலுவலர்கள் பொதுமக்களின் பகுதிகளுக்கு நேரடியாக சென்று மனுக்களை பெற அரசால் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

மேலும், பொதுமக்களின் குறைகளை மனு மூலமாக பெற்று, உடன் நடவடிக்கை மேற்கொள்ளும் பொருட்டு, மக்களைத் தேடி அரசு என்ற உன்னத நிலையை ஏற்படுத்தும் வகையில் “சிறப்பு குறை தீர்வு திட்டத்தை” முதலமைச்சர் 23.08.2019 அன்று தொடங்கி வைத்துள்ளார்.

அரசைத் தேடி மக்கள் என்ற நிலையை மாற்றி மக்களைத் தேடி அரசு என்ற சிறப்பான ஒருநிலை தற்சமயம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. முதலமைச்சரின் சிறப்பு குறை தீர்வு திட்டம் மூலம் அனைத்து கிராம, நகர்ப்புற பகுதிகளிலும் அடித்தட்டு மக்களின் கோரிக்கைகளை நிவர்த்தி செய்வதே இதன் நோக்கமாகும். அதன்படி திண்டுக்கல் மாவட்டத்தில் இத்திட்டமானது, செட்டிநாயக்கன்பட்டி ஊராட்சி, நந்தனார்புரத்தில் 23.08.2019 அன்று தொடங்கப்பட்டது.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள திண்டுக்கல் கிழக்கு, திண்டுக்கல் மேற்கு, ஆத்தூர், நிலக்கோட்டை, நத்தம், பழனி, ஒட்டான்சத்திரம், வேடசந்தூர், குஜிலியம்பாறை, கொடைக்கானல் ஆகிய 10 வட்டங்களில் வருவாய் கிராமங்கள்தோறும் நடைபெற்ற 709 முகாம்கள் மூலம் பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கைகளாக 20,371 மனுக்கள் பெறப்பட்டதில் 11,656 மனுக்கள் தகுதிவாய்ந்ததாக கருதப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. மீதமுள்ள 8,715 மனுக்களில் கோரிக்கை ஏற்க இயலாத நிலையில் இருந்தபடியால், மனு நிராகரிக்கப்பட்டதற்கான தகுந்த காரணத்தை சம்பந்தப்பட்ட மனுதாரர்களுக்கு கடிதத்தின் வாயிலாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசால் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வழங்கப்பட்ட நலத்திட்ட உதவிகளை பயன்படுத்தி பொதுமக்கள் தங்களது வாழ்வாதாரத்தினை வளப்படுத்திக்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் பேசினார்.

முன்னதாக, திண்டுக்கல் ஊராட்சி ஒன்றியம், பெரியகோட்டை ஊராட்சி மற்றும் அதனை சுற்றியுள்ள 5 கிராமங்கள் பயன்பெறும் வகையில் ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் 55 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட நீர் தேக்க தொட்டியை அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் திறந்து வைத்தார்.

இந்நிகழ்ச்சியில், மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் வி.மருதராஜ், வேடசந்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் வி.பி.பி.பரமசிவம், மாவட்ட வருவாய் அலுவலர் பா.வேலு, வருவாய் கோட்டாட்சியர் கு.உஷா, தனித்துணை ஆட்சியர் சிவக்குமார், நல்லமநாயக்கன்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவர் அ.ஜெயசீலன், அபிராமி கூட்டுறவு சங்கத் தலைவர் பாரதி முருகன், அரசு அலுவலர்கள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.