தற்போதைய செய்திகள்

கழக அம்மா பேரவை சார்பில் மதுரையில் மாபெரும் தொடர் ஜோதி நடைபயணம் – அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரின் பிரச்சாரத்துக்கு வழிநெடுக உற்சாக வரவேற்பு

மதுரை

கழக அம்மா பேரவை சார்பில் மதுரையில் மாபெரும் தொடர் ஜோதி நடைபயணம் நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்ற இளைஞர்கள் ஜல்லிக்காட்டு காளைகள் போன்று சீறிப்பாய்ந்து மக்களிடம் கழக அரசின் சாதனைகளை விளக்கி கூறினர். அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரின் இந்த பிரச்சாரத்துக்கு பொதுமக்கள் வழிநெடுக உற்சாக வரவேற்பு அளித்தனர்.

கழக அம்மா பேரவை சார்பில் முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் ஆகியோரின் ஆணைக்கிணங்க அம்மா அரசை தலைமை தாங்கி நடத்தி வரும் முதலமைச்சரின் சாதனைகளை மக்களுக்கு எடுத்துக்கூறும் வண்ணம் மாபெரும் தொடர் ஜோதி நடைபயணம் கழக அம்மா பேரவை செயலாளரும், மதுரை புறநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளரும், வருவாய், பேரிடர் மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார் தலைமையில் மதுரையில் கடந்த 13-11-2019 அன்று தொடங்கப்பட்டது.

இதனைத்தொடர்ந்து இரண்டாம் நாள் பயணமாக அழகர் கோயிலிலிருந்து புறப்பட்டு, நடைபயணமாக சென்று கள்ளந்திரியில் உள்ள பள்ளியில், மரக்கன்று நட்டும், மாணவர்களுக்கு, புத்தகங்கள் வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து சத்திரப்பட்டி பகுதியில், உள்ள பள்ளியில் மரக்கன்று நட்டு, மாணவர்களுக்கு புத்தகங்கள் வழங்கப்பட்டது.

இந்த தொடர் ஜோதி நடைபயணம் சோழவந்தான் தொகுதியில் உள்ள அலங்காநல்லூர் பகுதிக்கு வந்த போது அங்கிருக்கும் ஜல்லிக்கட்டு விழா குழுவினர், அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரை வரவேற்றனர். அதனைத்தொட்ர்ந்து அலங்காநல்லூர் கிராமத்தின் சார்பாக ஜல்லிக்கட்டை மீட்டுக்கொடுத்த அரசை பாராட்டி எப்பொழுதும் உங்களுக்கு ஆதரவாக இருப்போம் என்று உறுதியளித்தனர்.

அதனை தொடர்ந்து சோழவந்தான் தொகுதியின் சார்பாக முதலமைச்சரின் சிறப்பு குறைதீர்க்கும் முகாமில் பெறப்பட்ட மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு, 1569 பயனாளிகளுக்கு ரூ. 6 கோடி மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு தொடர்ந்து அங்கே முதலமைச்சரின் சிறப்பு குறைதீர்க்கும் முகாமின் மூலம் பொதுமக்களிடமிருந்து மனுக்கள் பெறப்பட்டன.

அதனை தொடர்ந்து கொண்டையம்பட்டி பகுதியில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் மரக்கன்றுகள் நட்டும், பள்ளி மாணவர்களுக்கு நூல்கள் வழங்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து ரிஷபம் பகுதியில் உள்ள ஆர்.சி. நடுநிலைப்பள்ளியில் மரக்கன்று நட்டு, மாணவர்களுக்கு புத்தகங்களை வழங்கினார். நாகமலைப்புதுக்கோட்டை பகுதியில் கழக அரசின் சாதனைகளை மக்களிடத்தில் எடுத்துரைத்து பிரச்சாரம் செய்து, அதனை தொடர்ந்து செக்கானுரணி பகுதியில், தொடர் ஜோதி நடைபயணத்தை மேற்கொண்டு அங்கு திருமங்கலம், தொகுதியின் சார்பில் பெறப்பட்ட முதலமைச்சர் குறைதீர்க்கும் முகாமில் பெறப்பட்ட மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு நலத்திட்ட உதவிகளை வழங்கி, பொதுமக்களிடத்தில் மனுக்களை பெற்றுக்கொண்டார்.

இந்நிகழ்ச்சியில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசியதாவது:-

தமிழர் குலசாமி, புரட்சித்தலைவி அம்மாவின் புனித அரசை தலைமை தாங்கி நடத்தி வரும் முதலமைச்சரின் சரித்திர சாதனைகளை மக்களுக்கு எடுத்துரைக்கும் ஓரு புனித பணியினை இன்றைக்கு நாங்கள் மேற்கொண்டுள்ளோம். எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் இந்த அரசின் சாதனைகளை இரும்புத்திரை கொண்டு மூடி மறைக்க பார்க்கிறார். அதை தகர்த்தெறிய இந்த பிரச்சார பயணத்தை நாங்கள் வகுத்துள்ளோம். தமிழகத்தில் உள்ள 8½ கோடி மக்களின் வாழ்வில் ஒளியேற்றும் வகையில் பல்வேறு திட்டங்களை செய்து வரும், முதலமைச்சரின் சாதனை திட்டங்களை இந்த தொடர் ஜோதி நடைபயணத்தின் மூலம் மக்களிடம் எடுத்துக் கூற இருக்கிறோம்.

முதலமைச்சர் 110 விதியின் கீழ் அறிவித்த அனைத்து திட்டங்களையும் தொடர்ந்து நிறைவேற்றி வருகிறார். மக்களின் தேவைகளை அறிந்து நிர்வாக வசதிக்காக இன்றைக்கு 5 புதிய மாவட்டங்களை முதலமைச்சர் அறிவித்துள்ளார். சேப்பாக்கம் ஸ்டேடியத்திற்கு ஏதோ நாங்கள் சலுகையை அறிவித்து விட்டது போல ஒரு மாய தோற்றத்தை ஸ்டாலின் கண்ணை மூடிக்கொண்டு ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். சேப்பாக்கம் ஸ்டேடியத்தை இன்று, நேற்று அல்ல பல ஆண்டு காலமாக நடைபெற்று வரும் நடைமுறையைத்தான் நாங்கள் பின்பற்றி வருகிறோம். திமுக ஆட்சிக்காலத்தில் கூட இந்த நடைமுறை இருந்துள்ளது.

அதில் சங்கங்கள், பல்வேறு கோரிக்கைகளை முதலமைச்சர், அமைச்சரவை கூட்டத்தை கூட்டி விளையாட்டுக்கு குந்தகம் விளைவிக்காமலும், சேப்பாக்கம் ஸ்டேடியத்திற்கு குந்தகம் வராமலும் செய்துள்ளார். எங்களை பொறுத்தவரை விளையாட்டு போட்டிகளை ஊக்குவிக்க வேண்டும், இங்கு வியாபார போட்டிகள் நடைபெறுவது கிடையாது என்பதை ஸ்டாலின் புரிந்து கொள்ள வேண்டும், முதலமைச்சர் எதை செய்தாலும், அதை என்ன என்று பார்க்காமல், அதை உள்நோக்கத்துடன் அரசியலாக்கி ஆதாயம் பார்த்து வருகிறார் ஸ்டாலின்.

ஜனநாயகத்தின் மாண்பாக தமிழகம் திகழ்ந்து வருகிறது. ஆனால் மாண்பை காக்கும் இயக்கத்தில் இருக்கும் ஸ்டாலின் நான் சர்வாதிகாரியாக மாறுவேன் என்று கூறுகிறார். ஜனநாயகத்தின் மாண்பை காப்பாற்ற வேண்டியவர் அதை மறந்து விட்டு சர்வாதிகாரி என்று கூறலாமா? இதன் மூலம் மக்கள் நம்பிக்கையையும், அவர் கட்சி தொண்டர்களின் நம்பிக்கையையும் ஸ்டாலின் இழந்து விட்டார்.

இன்றைக்கு தமிழகத்தை மின்மிகை மாநிலமாக உருவாக்கி 2 கோடி குடும்பங்களுக்கு மாதந்தோறும் 100 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது., 2 கோடிக்கும் மேற்பட்ட மக்களுக்கு பொங்கல் பரிசாக ரூ.1000 வழங்கப்பட்டது, அதை நீதிமன்றம் மூலம் தடுத்தவர் ஸ்டாலின் மீண்டும் அதனை தகர்த்தெறிந்து மக்களுக்கு வழங்கியவர் முதலமைச்சர் ஆவார். தற்போது கூட ரூ.2000 உதவித்தொகை வழங்கும் திட்டத்தை கூட நீதிமன்றத்திற்கு சென்று தடை வாங்கியது திமுக தான். மக்கள் திட்டங்களை முதலமைச்சர் செய்து வருகிறார். ஆனால் அதற்கு தடை வாங்கி மக்களுக்கு துரோகம் செய்து வருபவர் ஸ்டாலின்.

அது மட்டுமல்லாது, இன்றைக்கு உலக நாடுகள் எல்லாம் உற்றுநோக்கும் சீன தேசத்து அதிபரும், நமது பாரத பிரதமரும் இரு நாட்டு நல்லுறவை பற்றி பேச தேர்வு செய்த இடம் தமிழகம் தான் ஏனென்றால், அந்த அளவு தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ளது. இதற்காக பாரத பிரதமரும், சீன தேசத்து அதிபரும், நமது முதலமைச்சரை பாராட்டி உள்ளனர். இது எல்லாம் ஸ்டாலின் கண்ணுக்கு தெரியாதா?

இவ்வாறு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசினார்.