தற்போதைய செய்திகள்

விருதுநகர் மருத்துவக் கல்லூரிக்கு 2 மாதத்தில் அடிக்கல் நாட்டுவிழா – அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி தகவல்

விருதுநகர்

விருதுநகர் மருத்துவக் கல்லூரிக்கு 2 மாதத்தில் அடிக்கல் நாட்டு விழா நடத்தப்படும் என்று அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி கூறினார்.

விருதுநகரில் பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி  செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

எல்லா கட்சியினரும் தனது கட்சியை பெரிதாக தான் கூறுவார்கள். தாயும் தனது பிள்ளையை நல்ல பிள்ளை என்று சொல்ல மாட்டேன் என்று சொல்ல மாட்டார்கள். யாருக்கு என்ன பலன் என்று தமிழக மக்களுக்கு தெரியும். கூட்டணி தொடரும் என்று முதலமைச்சர் அறிவித்து உள்ளார். தலைவர்கள் சொல்வதை நாங்கள் கேட்போம். கழகம் சார்பில் விளம்பர பலகை யாரும் வைக்க மாட்டார்கள். விருதுநகரில் மருத்துவ கல்லூரிக்கு இரண்டு மாதங்களில் முதலமைச்சர் அடிக்கல் நாட்டுவார்.

கமல், ரஜினி போன்ற எந்த நடிகர் மீதும் காட்டத்தை காட்டுவதில்லை. அவர்களது விமர்சனங்களுக்கு பதில் அளிக்கிறோமே தவிர வேறொன்றுமில்லை. இருவரது படங்களையும் நான் விரும்பி பார்ப்பேன். குறிப்பாக ரஜினி படங்களை விரும்பிப் பார்ப்பேன். நடிகர் சிவாஜி குறித்த முதல்வரின் கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. சிவாஜி கணேசன் இயக்கம் ஆரம்பித்தார். வெற்றி பெறவில்லை என்றுதான் சொன்னார். மறைந்த தலைவர்கள் பற்றி நாங்கள் எப்போதும் தவறான கருத்து கூறுவதில்லை. ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தனது விஷமத்தனமான கருத்துக்களை கூறுவதை நிறுத்த வேண்டும்.

இவ்வாறு அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி கூறினார்.