சிறப்பு செய்திகள்

உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட கழகத்தினர் போட்டி போட்டு மனு – தமிழகம் முழுவதும் தொண்டர்கள் உற்சாகம்

சென்னை:-

உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்து தமிழகம் முழுவதும் கழகத்தினர் போட்டி போட்டு விருப்ப மனுக்களை அளித்தனர். ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆயிரக்கணக்கான பேர் போட்டியிட விருப்பம் தெரிவித்து ஆர்வத்துடன் மனுக்களை அளித்தனர்.

சென்னை மேயர் தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்து கட்சியின் முன்னாள் எம்.பி.க்கள், நிர்வாகிகள், எம்.எல்.ஏ.க்கள் உள்பட ஏராளமான பேர் மனுக்கள் கொடுத்தனர்.

சென்னையில் மட்டும் 5 இடங்களில் விருப்ப மனுக்களை பெறுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேயர் தேர்தல், மாமன்ற உறுப்பினர் தேர்தலில் போட்டியிடுவதற்காக ஆயிரக்கணக்கான கழகத்தினர் போட்டி போட்டுக் கொண்டு நேற்று விருப்ப மனுக்களை கொடுத்தனர்.

உள்ளாட்சி தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட இருக்கிறது. தேர்தலை சந்திக்க கழகத்தின் சார்பில் அனைத்து ஏற்பாடுகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. கழகத் தொண்டர்களும் மிகுந்த உற்சாகத்தோடு இத்தேர்தலை சந்திக்க இருக்கிறார்கள். விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் கழகம் அமோக வெற்றி பெற்றதையடுத்து தொண்டர்கள் மத்தியில் புதிய உற்சாகமும், எழுச்சியும் ஏற்பட்டுள்ளது. இடைத்தேர்தல் வெற்றியை தொடர்ந்து உள்ளாட்சித் தேர்தலிலும் கழகத்தினர் வெற்றிக்கனி பறிக்க முனைப்புடன் செயல்பட்டு கொண்டிருக்கிறார்கள்.

கழக ஒருங்கிணைப்பாளர்கள் அறிவித்தபடி நேற்று தமிழகம் முழுவதும் கழகத்தினர் தாங்கள் போட்டியிட விரும்பும் பதவிகளுக்கு விருப்ப மனுக்களை பூர்த்தி செய்து கொடுத்தார்கள். மாவட்டம் வாரியாக விருப்ப மனுக்களை பெற பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள். ஒவ்வொரு பதவிக்கும் போட்டியிட விருப்பம் உள்ளவர்கள் எவ்வளவு கட்டணம் செலுத்த வேண்டு என்ற விபரமும் அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி விருப்ப மனுக்களோடு கட்டணத்தையும் செலுத்தி தொண்டர்கள் உற்சாகத்துடன் காணப்பட்டார்கள்.

காலை 10 மணி முதல் விருப்ப மனு பெறப்படும் என்று அறிவிக்கப்பட்ட போதிலும் அறிவிக்கப்பட்ட இடங்களில் கழகத்தினர் காலை 8 மணி முதலே வந்து குவிந்தவண்ணம் இருந்தார்கள். வாழ்த்து கோஷங்களுடன் தொண்டர்கள் சாரை, சாரையாக வந்து விருப்ப மனுக்களை பெற்று பூர்த்தி செய்து அளித்தனர்.