சிறப்பு செய்திகள்

சர்வதேச போட்டியில் தங்கம் வென்ற தமிழக வீரர் பாஸ்கரனுக்கு ரூ.25 லட்சம் ஊக்கத்தொகை – முதலமைச்சர் வழங்கி வாழ்த்து

சென்னை:-

தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி நேற்று தலைமைச் செயலகத்தில், தேசிய மற்றும் சர்வதேச அளவில் உடற்கட்டு போட்டிகளில் பதக்கங்களை வென்று, 2019-ம் ஆண்டிற்கான மத்திய அரசின் அர்ஜூனா விருது பெற்ற சோ.பாஸ்கரனுக்கு சிறப்பினமாக உயரிய ஊக்கத் தொகையான 25 லட்சம் ரூபாய்க்கான காசோலையையும், அவரது பயிற்றுநர் எம்.அரசுக்கு 3 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய்க்கான காசோலையையும் வழங்கினார்.

அகில இந்திய அளவிலும், பன்னாட்டு அளவிலும் நடைபெறும் பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் தமிழகத்தைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பங்கு கொண்டு வெற்றி வாகை சூடும் வகையில் அவர்களுக்கு உரிய பயிற்சி அளித்தல், உயரிய ஊக்கத் தொகை வழங்குதல், சர்வதேச அளவில் பங்கு பெறும் விளையாட்டு வீரர்களுக்கு நிதியுதவி அளித்தல், மாணவர்கள் தங்கி விளையாட்டில் பயிற்சி பெற விளையாட்டு விடுதிகள் ஏற்படுத்துதல், கிராமப்புற விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும் வகையில் கிராம விளையாட்டுப் போட்டிகள் நடத்துதல், மாவட்ட விளையாட்டு மைதானங்களை மேம்படுத்துதல், பாரம்பரிய விளையாட்டுகளை ஊக்குவித்தல் போன்ற பல்வேறு முனைப்பான நடவடிக்கைகளை புரட்சித் தலைவி அம்மா அவர்களின் வழியில் செயல்படும் தமிழ்நாடு அரசு எடுத்து வருகிறது.

அந்த வகையில், தேசிய அளவிலான பல்வேறு உடற்கட்டு போட்டிகளில் வெற்றி பெற்றதற்காகவும், புனே நகரில் கடந்த 2.10.2018 முதல் 8.10.2018 நடைபெற்ற 52-வது ஆசிய பாடிபில்டிங் வாகையர் போட்டிகளில் கலந்து கொண்டு 60 கிலோ கிராம் உடல் எடைப்பிரிவில் தங்கப் பதக்கம் வென்றதற்காகவும், தாய்லாந்து நாட்டின், சியாங்மை நகரில் கடந்த 11.12.2018 முதல் 17.12.2018 வரை நடைபெற்ற 10-வது உலக பாடிபில்டிங் போட்டிகளில் தங்கப்பதக்கம் வென்றதற்காகவும், 2019-ம் ஆண்டிற்கான மத்திய அரசின் விளையாட்டு வீரர்களுக்கான உயரிய விருதான அர்ஜூனா விருது பெற்றதற்காகவும், சோ. பாஸ்கரனுக்கு சிறப்பினமாக உயரிய ஊக்கத் தொகையான 25 லட்சம் ரூபாய்க்கான காசோலையையும், அவரது பயிற்றுநர் எம். அரசுக்கு 3 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய்க்கான காசோலையையும் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி நேற்று வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில், பள்ளிக்கல்வி, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், தலைமைச் செயலாளர் க.சண்முகம், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை முதன்மைச் செயலாளர் தீரஜ்குமார், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் முதன்மைச் செயலாளரும், உறுப்பினருமான செயலர் ரமேஷ்சந்த் மீனா, மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.