தற்போதைய செய்திகள்

மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் புதைவழி மின்பாதை திட்டம் படிப்படியாக அமல் – அமைச்சர் பி.தங்கமணி உறுதி

திருவள்ளூர்:-

தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் புதைவழி மின்பாதை திட்டம் படிப்படியாக அமல்படுத்தப்படும் என்று அமைச்சர் பி.தங்கமணி கூறினார்.

திருவள்ளூர் மாவட்டம் மற்றும் வட்டம், வாணியன்சத்திரம் 400/ 230-110 கிலோ வோல்ட் துணை மின் நிலையத்தில் மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் பி.தங்கமணி, ஊரக தொழில்துறை அமைச்சர் பா.பென்ஜமின், தமிழ் ஆட்சிமொழி, கலைபண்பாடு மற்றும் தொல்லியல்துறை அமைச்சர் க.பாண்டியராஜன் ஆகியோர் தமிழ்நாடு மின்பகிர்மான கழகம் சார்பாக, மின்னுளப்பாதை செயல்முறை விளக்கத்தினை நேரில் பார்வையிட்டனர்.

பின்னர் அமைச்சர் பி.தங்கமணி செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

புரட்சித்தலைவி அம்மாவின் வழியில் நடக்கும் முதலமைச்சரின் அரசு மின்சாரத்துறையில் பல்வேறு புதிய தொழில்நுட்பங்களை புகுத்தி உள்ளது. 400 கிலோ வோல்ட் உயர் மின் அழுத்தம் கொண்ட மின் பகிர்மானத்தில் ஷட்டவுன் செய்வதை தவிர்த்து, பயன்பாட்டில் இருக்கும்போதே பாதுகாப்பு உபகரணங்களுடன் அதில் பழுது நீக்கம் செய்வது தொடர்பான செயல் விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது.

அவ்வாறு பழுது நீக்கம் செய்வதற்கு ஷட்டவுன் செய்து, பழுது நீக்கம் செய்ய ஈடுபடும் பட்சத்தில் குறைந்தது 4 மணி நேரமாவது தேவைப்படும். இதை தடுக்கும் பொருட்டு, மின்வாரிய பணியாளர்களுக்கு பெங்களூரில் முறையான பயிற்சி வழங்கி, ரூ.4 லட்சம் செலவில் பாதுகாப்பு உடைகள் உள்ளிட்ட உபகரணங்களை தமிழ்நாடு மின்பகிர்மான கழகம் சார்பாக கொள்முதல் செய்து, அவர்களுக்கு மன ரீதியாக பயிற்சி ஊக்கம் வழங்கி, பாதுகாப்பான முறையில் மேலே ஏறி பழுது நீக்கம் செய்து பாதுகாப்பாக கீழே இறங்கி செயல்முறை விளக்கத்தினை செய்து காண்பித்துள்ளனர்.

இதனால் சென்னைக்கு முக்கிய மின் விநியோகம் செய்யும் அலமாதி துணை மின் நிலையத்தில் 2 முதல் 3 மணி நேரம் மின்வெட்டு ஏற்படுவது முற்றிலுமாக தவிர்க்கப்படும். புரட்சித்தலைவி அம்மாவின் எண்ணம் போல முதலமைச்சரின் எண்ணமாக செயல்படுட்டு மின்சார ஊழியர்கள் மற்றும் பணியாளர்கள் தங்களின் உயிர்களை பணயம் வைத்து, இதன் மூலம் பொதுமக்களுக்கு தடையில்லா சீரான மின்சாரம் வழங்க, இந்த அரசு தமிழ்நாடு மின்சாரம் வாரியம் மூலம் நிறைவேற்றி வருகிறது. மேலும், பழுது கண்டுபிடிப்பதற்கு டிரோன் சிறிய விமானத்தின் வாயிலாக 3 கி.மீ. தூரம் வரை பறந்து பழுதை கண்டறிந்து பழுதை நீக்குவதற்கு பயன்படுகிறது.

பாலிமர் இன்சுலேட்டர் பீங்கான் இன்சுலேட்டர்கள் கடற்கரை அருகில் உப்பு காற்றின் தூசுகள் படிந்து வெயில் மற்றும் மழை காலத்தில் இன்சுலேட்டர்களில் விரிசல்கள் ஏற்பட்டு பழுதடைந்து மின்விநியோகம் பாதிக்கப்படும். இதை கண்டுபிடிப்பது மிகவும் கடினமான ஒன்றாகும். இதை தவிர்க்கும் பொருட்டு, அதை ஹாட்வாஷ் செய்து தூசு மற்றும் மாசுகளை அகற்றப்படுவது குறித்து செயல்முறை விளக்கம்செய்து காண்பிக்கப்பட்டது. இதன் மூலம் தமிழ்நாடு மின்வாரியத்தின் சார்பாக தடையில்லா மின்சாரம் வழங்குவது உறுதி செய்யப்படுகிறது. இதுபோன்று தமிழ்நாடு முழுவதும் மொத்தம் 160 நபர்களுக்கு முறையான பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளது.

ஒவ்வொருவருக்கும் ரூ.15 லட்சம் வரை காப்பீடு செய்யப்பட்டு, தமிழ்நாடு மின்வாரியம் மூலம் அவர்களுக்கு பாதுகாப்பு உடை மற்றும் உபகரணங்கள் கொள்முதல் செய்யப்பட்டு வழங்கப்படுகிறது. மழை மற்றும் வெயில் காலங்களில் ஷட்டவுன் செய்யாமல் பழுது நீக்கம் செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது. இது சென்னைக்கே முன்னோட்டமாக எடுத்து செயல்முறை விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது. இது தமிழகம் முழுவதும் எடுத்து செல்லப்படவுள்ளது. இவ்வாறு 2 அல்லது 3 மணி நேரம் ஏற்படும் மின்தடை அரை மணி நேரத்தில் நிவர்த்தி செய்யப்படும் சூழல் ஏற்படும். தற்பொழுது தமிழ்நாடு மின் வாரியத்தின் சார்பாக ஒப்பந்த தொழிலாளர்களுக்கு தினந்தோறும் ரூ.1000 ஊதியமாக வழங்கப்படுகிறது.

ஒப்பந்த பணியாளர்களாக 5000-ம் நபர்கள் தேர்ந்தெடுக்கப்படும் பட்சத்தில் அவர்கள் மனு செய்து முறையான தேர்வினை எழுதிய பின்னர் அவர்களுக்கான முன்னுரிமைகள் வழங்கப்படும். உயர்மின் அழுத்த மின்சாரத்தை எடுத்துச் செல்ல உயர்மின்னழுத்த கோபுரங்களை அமைப்பதற்கு விளை நிளங்களில் முதலமைச்சரின் ஆணைக்கிணங்க நில உரிமையாளர்களுக்கு உரிய இழப்பீடாக தென்னை மரங்களை எடுப்பதற்கு ரூ.36800, கோபுரம் அமைக்க 100 சதவிகிதமும், மின் கம்பிகள் செல்லும் பாதைகளில் 15 சதவிகிதமாக இருந்தது 20 சதவிகிதம் உயர்த்தி வழங்கப்படுகிறது. இதனால் அனைத்து விவசாய பெருமக்களும் முதலமைச்சருக்கு நன்றி தெரிவிக்கின்றனர்.

தடையில்லா மின்சாரம் வழங்க உயர்மின் கோபுரங்கள் அமைக்கப்பட்ட இடங்களின் அருகிலேயே விவசாயம் பாதிக்காத வகையில் பயிர் செய்யப்பட்டுள்ளது. சத்தீஷ்கர் மாநிலத்திலிருந்து 6000 மெகாவாட் மின்சாரம் பெறப்பட்டு, 4000 மெகாவாட் தமிழ்நாடு மாநிலத்திற்கும், 2000 மெகாவாட் கேரள மாநிலத்திற்கும் வழங்கப்படுகிறது. முதற்கட்டமாக பெருமாநகராட்சி, பின்னர் நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் பூமிக்கு அடியில் மின்சாரத்தை எடுத்துச்செல்லும் பணிகள் படிப்படியாக மேற்கொள்ளப்படவுள்ளது.

இதற்கான தொகை மின்சார கோபுரம் அமைத்து எடுத்துச்செல்வதைவிட 20 சதவிகிதம் அதிகமாக பூமிக்கு அடியில் மின்சாரத்தை எடுத்துச்செல்லும் பணிகளுக்கு தொகை செலவாகிறது. கடந்த 8 ஆண்டுகளில் புதியதாக 450 துணை மின்நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. மாநிலத்தில் மொத்தம் உள்ள 1682 துணை மின் நிலையங்களில் கடந்த 8 ஆண்டுகளில் 450 துணை மின்நிலையங்களும், 110, 230 மற்றும் 400 கிலோ வோல்ட் கொண்ட 1012 துணை மின் நிலையங்கள் உள்ளது. தேவைக்கேற்ப துணை மின் நிலையங்கள் அமைக்கும் பணிகள் அரசின் மூலமாக துரிதமாக நடைபெறுவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது. முதலமைச்சரின் ஆணைக்கிணங்க அனைத்து மின்சாரம் சம்பந்தப்பட்ட பணிகளும் விரைவாகவும், சிறப்பாகவும் நடைபெறுகிறது.

இவ்வாறு அமைச்சர் பி.தங்கமணி செய்தியாளர்களிடம் கூறினார்.

இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு மின் பகிர்மான கழக தலைவர், விக்ரம் கபூர், திருவள்ளூர் மாவட்ட ஆட்சித்தலைவர் மகேஸ்வரி ரவிக்குமார், சட்டமன்ற உறுப்பினர்கள் சிறுணியம் பி.பலராமன், பி.எம்.நரசிம்மன், கே.எஸ்.விஜயகுமார், இணை நிர்வாக இயக்குநர் எஸ்.வினித், நிர்வாக இயக்குநர் (டான்டிரான்ஸ்கோ) எஸ்.சண்முகம், இயக்குநர் (செயல்பாடுகள்) ரவிச்சந்திரன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.