தற்போதைய செய்திகள்

1216 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவி – அமைச்சர் ஓ.எஸ்.மணியன் வழங்கினார்

நாகப்பட்டினம்

நாகப்பட்டினம் நகராட்சி வி.பி.என் திருமண மண்டபத்தில் நடைபெற்ற விழாவில், முதலமைச்சரின் சிறப்பு குறைதீர்க்கும் திட்டத்தின் கீழ் தங்கள் கோரிக்கைகளை மனுக்களாக அளித்தவர்களில், தகுதியான 1216 பயனாளிகளுக்கு ரூ.5 கோடியே 42 லட்சத்து 4 ஆயிரத்து 925 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கைத்தறி மற்றும் துணிநூல்துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் வழங்கினார். விழாவுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் பிரவீன் பி.நாயர் தலைமை வகித்தார்.

நலத்திட்ட உதவிகளை வழங்கி அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பேசியதாவது:-

புரட்சித்தலைவி அம்மாவின் வழிகாட்டுதலுடன் செயல்பட்டு வரும் தமிழ்நாடு அரசு, பொதுமக்களின் வாழ்வாதாரம் மேம்படவும், ஏழை, எளிய மக்களின் முன்னேற்றத்திற்காகவும் பல்வேறு நல்ல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்த வகையில் தமிழக மக்களுக்கு அனைத்து வகையான அரசு நலத்திட்டங்களும் சென்று சேர்வதை துரிதப்படுத்தும் வகையில் முதலமைச்சர் சட்டப்பேரவையில் விதி எண் 110-ன் கீழ் சிறப்பு குறைதீர்வு முகாம் நடத்தி, பொதுமக்களிடமிருந்து அவரவர்க்கு தேவையான நலத்திட்ட உதவி குறித்த கோரிக்கைகளை மனுக்களாக பெற்று அவற்றில் தகுதியான கோரிக்கைகளுக்கு தீர்வு காண உத்தரவிட்டார்.

“முதலமைச்சரின் உத்தரவின்படி “மக்களை தேடி அரசு” என்ற கொள்கையின் அடிப்படையில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள 8 வட்டங்களுக்கு உட்பட்ட 523 வருவாய் கிராமங்களிலும் முதலமைச்சரின் சிறப்பு குறைதீர்வு முகாம்கள் கடந்த 01.08.2019 முதல் தொடங்கி நடைபெற்றது. இதற்கென தலா 6 அலுவலர்கள் கொண்ட 32 குழுக்கள் அமைக்கப்பட்டு, மாவட்டத்திலுள்ள அனைத்து கிராமங்களிலும் பொதுமக்களின் கோரிக்கைகளை மனுக்களாக பெறப்பட்டது.

முதலமைச்சரின் சிறப்பு குறை தீர்வு முகாம்களில் பெறப்பட்ட மனுதாரர்களின் மனுக்களில் உள்ள கோரிக்கைகளை அரசின் விதிகளுக்குட்பட்டு பரிசீலித்து, குறைகளுக்கு தீர்வு காணும் வகையில் இன்றைய தினம் தகுதியான மனுதாரர்களுக்கு உரிய நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன. தமிழக மக்களின் ஏற்றமிகு வாழ்விற்காக அரசு எப்போதும் நல்ல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. பொதுமக்கள் அனைவரும் அரசின் திட்டங்களை நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு அமைச்சர் ஓ.எஸ்.மணியன் ேபசினார்.

இவ்விழாவில் வருவாய் கோட்டாட்சியர் ரா.பழனிகுமார், தனித்துணை ஆட்சியர் கே.ராஜன், நாகப்பட்டினம் மாவட்ட கூட்டுறவு ஒன்றியத் தலைவர் தங்க.கதிரவன், கும்பகோணம் மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் எஸ்.ஆசைமணி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மீ.செல்வகுமார் உட்பட அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.