சிறப்பு செய்திகள்

அமெரிக்கா ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் ஆய்வு இருக்கைக்கு தமிழக அரசு உதவி – துணை முதலமைச்சர் உறுதி

ஹூஸ்டன்

அமெரிக்காவில் உள்ள ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் ஆய்வு இருக்கை அமைக்க தமிழக அரசு முழு நிதி உதவி அளிக்கும் என்று துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார். சென்னை திரும்பியதும் முதலமைச்சருடன் ஆலோசனை நடத்தி உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அவர் உறுதி அளித்தார்.

ஹூஸ்டனில் இந்திய தூதரக அதிகாரிகள் மற்றும் ஹூஸ்டன் பல்கலைக்கழக இணைவேந்தர் மற்றும் அதிகாரிகள் ஆகியோர் அடங்கிய கூட்டத்தில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உரையாற்றினார். அப்போது அவர் ஆற்றிய உரை வருமாறு:-

குறுகிய காலத்தில் இந்நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்த இந்திய தூதரக அதிகாரிக்கும், தமிழ் ஆர்வலர்களுக்கும் பல்கலைக்கழக இணைவேந்தர் மற்றும் பேராசிரியர்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். ெகளடி மோடி நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த இந்த நிறுவனத்திற்கும், சரியான நேரத்தில் இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தவர்களுக்கும் எனது வாழ்த்துக்களையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த நேரத்தில் இந்திய அமெரிக்க நிறுவனத்தை சேர்ந்தவர்களுக்கும் கெளடி மோடி நிகழ்ச்சியை வெற்றிகரமாக நடத்தியிருக்கும் அமெரிக்க வாழ் மக்களுக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் செல்வாக்கு அமெரிக்காவில் மிக பிரபலமாக உள்ளது. இந்திய அமெரிக்க உறவுக்கு அவரது செல்வாக்கு ஒரு பாலமாக அமைந்திருக்கிறது. கலாச்சாரம், சமூகம், பொருளாதாரம் ஆகிய அனைத்திலும் இந்தியாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே உள்ள நல்லுறவு அதிகமாகி வருகிறது. இந்திய அமெரிக்க குழுவில் உள்ள உறுப்பினர்கள் இதற்கான பெருமுயற்சி செய்து முக்கிய அங்கம் வகிக்கிறார்கள். இந்தியன் என்ற முறையில் அமெரிக்காவில் இப்பொழுது நாம் தலைநிமிர்ந்து நிற்கிறோம். அமெரிக்காவில் உள்ள தமிழ் இனத்தவர்கள் பல்வேறு இடங்களில் தங்களுடைய வர்த்தகம், தொழில் போன்றவற்றால் வெற்றி பெற்று மிக உயர்நிலையில் இருக்கிறார்கள்.

உலகின் மூத்த மொழி, உலக மொழிகளுக்கெல்லாம் முன்னோடியான மொழி, செம்மை மிகுந்த மொழி, சீரிளமை கொண்ட மொழி, இனிமை கொஞ்சும் மொழி, இறைவனுக்கு உகந்த மொழி, குறளமுதைத் தந்த மொழி, கோலமிகு வண்ண மொழி, அதுவே நம் அன்னைத் தந்த மொழி, காலத்தால் அளவிட இயலாத தொன்மை வாய்ந்த மொழி,
நம்முடைய தாய்மொழி தமிழ்மொழி, தமிழ் மொழியின் தொன்மையை எடுத்துரைக்க வந்த பாவேந்தர் பாரதிதாசன்,
“திங்களோடும் செழும்பரிதி தன்னோடும் விண்ணோடும் மண்ணோடும் உடுக்களோடும் மங்குல் கடல் இவற்றோடும் பிறந்த தமிழ்” என்று பாடுகிறார்.

“கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே வாளோடும் – தமிழ் நூலோடும் முன் தோன்றி மூத்த குடி” என்று தமிழ்க்குடியை பெருமை பேசுவதும் இதனால்தான்! பாரம்பரியமான, மிகப் பழமையான இலக்கியத்தை கொண்ட மொழி, தமிழ் மொழி, வேறு எந்தப் பாரம்பரியத்தின் நிழலும் படிந்திராத மொழி – தமிழ் மொழி சொல் வளம் மிக்க மொழி, சொல்லும் பொருளும் பின்னிப் பிணைந்த மொழி- தமிழ் மொழி. உலகளாவி வழங்கும் ஆயிரக்கணக்கானமொழிக் கூட்டங்களில், பேச்சளவிலும், எழுத்தளவிலும் உயிர்ப்புடன் இருக்கும் மொழி – தமிழ் மொழி எப்படி முயற்சித்தாலும், தனக்குள் கலப்படம் ஏற்பட வாய்ப்பு தந்திடாத மொழி – தமிழ் மொழி,

எவ்விடத்தும் எப்போதும் தனக்கான தனித்தன்மையை விடத் தந்திடாத மொழி – தமிழ் மொழி.‘ ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர், சிற்றுளியால், கற்பாறைகளிலும், பின்னர் இரும்பாணிகளால் செப்புத்தகடுகளிலும், அதன்பின் எழுத்தாணிகளால் ஓலைச் சுவடிகளிலும்எழுதப்பட்டு வந்த தமிழ், மாறி வரும் காலத்தோடு இசைந்து, பேனாக்கள் மற்றும் பென்சில்களால், காகிதங்களில் எழுதப்பட்டு, பின் அச்சு காகிதங்களில் அச்சிடப்பட்டதுடன், வளர்ந்து வரும் அறிவியல் முன்னேற்றத்திற்கு ஈடு கொடுத்து கணினிப் பயன்பாட்டிலும் இன்று உலக அளவில் அதிகமாய்ப் பயன்படுத்தப்பட்டு வரும் மொழியாக  தமிழ் மொழி திகழ்கிறது.

இவ்வளவு சிறப்புக்களையும், உயர்வுகளையும் தனக்கெனக் கொண்ட தமிழ் மொழிக்கு மேலும் மெருகூட்டி வளம் சேர்க்க புரட்சித்தலைவர் பொன்மனச்செம்மல் எம்ஜிஆர் அவர்களும் , இதயதெய்வம் மாண்புமிகு அம்மா அவர்களும் எண்ணிலடங்கா திட்டங்களை செயல்படுத்தினார்கள்.அதேபோல தேமதுரத் தமிழோசை உலகமெல்லாம் பரவும் வகை செய்வோம் என்ற மகாகவி பாரதியின் வைர வரிகளுக்கு உயிர் கொடுத்து, இதய தெய்வம் புரட்சித்தலைவி மாண்புமிகு அம்மா அவர்கள் தமிழக்கு ஆற்றிய தொண்டு அளப்பரியதாகும். உலகப் பொது மறையான திருக்குறளையும், பாரதியார், பாரதிதாசன் பாடல்களையும், சீனம் மற்றும் அரபு மொழிகளில் மொழி பெயர்த்திடச் செய்தார். தமிழ்ப் பெரும் புலலர்களும், தமிழ்ப் பேரறிஞர்களுமான கபிலர், கம்பர், உவேசா, ஜியு போப், உமறுப் புலவர், இளங்கோவடிகள் ஆகியோரது பெயரில் விருதுகள் ஏற்படுத்தினார்.

“ஹர்வேர்டு பல்கலைக்கழத்தில் தமிழ் இருக்கை அமைத்திட அம்மா அவர்களது அரசு 10 கோடி வழங்கியதையும்
சிகாகோவில் நடைபெற்ற 10-வது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டிற்கு தமிழ்நாடு அரசின் நிதியுதவியாக ரூபாய் 1 கோடி வழங்கப்பட்டதையும், பிரான்சு நாட்டின் பாரிசு நகரில் நடைபெற்ற 4ஆவது ஐரோப்பிய தமிழ் ஆய்வியல் மாநாட்டிற்கு அரசின் நிதியுதவியாக ரூபாய் 17 லட்சம் வழங்கப்பட்டதையும். நவி மும்பை தமிழ்ச் சங்கத்திற்கு கட்டட நிதியுதவியாக ரூபாய் 25 லட்சம் வழங்கப்பட்டதையும் இங்கே சுட்டிக் காட்ட விரும்புகிறேன். அந்த வகையில் நமது அருமை மிகு தமிழ் மொழியின் இப்பகுதியில் வளர்ச்சி காண ஹூஸ்டன் பல்கலைக் கழகத்தில் தமிழ் இருக்கை அமைத்திருப்பது கண்டு பெரும் மகிழ்ச்சியும் பூரிப்பும் அடைகிறேன்.

உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் எங்கு சென்றாலும் தமிழகத்தின் பெருமையையும், பாரம்பரியத்தையும், கலாச்சாரத்தையும் மறக்காமல் நிலை நாட்டி வருகிறார்கள். கடுமையாக உழைத்து இக்கட்டான நிலையிலும் கூட தாங்கள் பிறந்த மண்ணின் பெருமையைும், பாரம்பரியத்தயைும் எதிர்கால சந்ததியினர் உணரும் வகையில் பெரிய சாதனைகளை செய்து தமிழ் மொழியின் பெருமையையும், அதன் அருமையையும், அதன் பழமையையும், அதன் தனித்தன்மையையும் நிலைநாட்டி வருகிறார்கள்.

ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழக ஆய்வு இருக்கை சரியான நேரத்தில் அமைய இருக்கிறது. இங்குள்ள அமெரிக்க வாழ் தமிழர்கள் இந்த ஆய்வு இருக்கை உருவாக்குவதற்கு பெருமுயற்சி மேற்கொண்டுள்ளார்கள். ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைவதற்காக டாக்டர் ஷாம் கண்ணப்பன், துப்பில் நரசிம்மன், பல்கலைக் கழகத்தின் தலைவர் ரேணு காதர் போன்றவர்கள் பெரும் முயற்சி எடுத்து உள்ளார்கள். இந்த ஆய்வு இருக்கைக்கு தேவையான நிதி உதவி தமிழக அரசிடம் இருந்து தேவைப்படுகிறது என்பதை நான் உணர்கிறேன். என்னிடம் அதை தெரிவித்தனர். நான் சென்னை திரும்பியதும் உடனடியாக முதலமைச்சரை சந்தித்து இது குறித்து ஆலோசனை நடத்தி தமிழக அரசு இதற்கான என்ன நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியுமோ அனைத்தையும் செய்ய ஆவன செய்வேன் என்பதை உறுதி அளிக்கிறேன்.

இவ்வாறு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்