சிறப்பு செய்திகள்

உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட கழக தொண்டர்கள் போட்டி போட்டு மனு தாக்கல்

சென்னை

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் அடுத்த மாதம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட விரும்பும் கழகத்தினர் அதற்குரிய விண்ணப்ப படிவங்களை அந்தந்த மாவட்டங்களில் பெற்று பூர்த்தி செய்து அளிக்குமாறும், ஒவ்வொரு பதவிக்கும் நிர்ணயிக்கப்பட்ட தொகையை செலுத்தி விருப்ப மனுக்களை பெற்றுக் கொள்ளுமாறும் கழக ஒருங்கிணைப்பாளர்கள் அறிவித்திருந்தனர்.

அதைத்தொடர்ந்து நேற்று முன்தினமும், நேற்றும் விருப்ப மனுக்கள் விநியோகம் தமிழகம் முழுவதும் நடைபெற்றன. கழகத்தின் சார்பில் போட்டியிட விருப்ப மனு கொடுப்பதற்கு நேற்று இரண்டாவது நாளாகும். அதனால் கழகத்தினர் ஆயிரக்கணக்கில் திரண்டு சென்று போட்டி போட்டு க்கொண்டு விருப்ப மனுக்களை அளித்தனர்.

பலர் தொண்டர்களுடன் ஊர்வலமாக சென்றும், பேண்டு வாத்தியங்கள், மேள வாத்தியங்கள் ஆகியவற்றுடனும் சென்று உற்சாகமாக கட்டணத்தை செலுத்தி மனு கொடுத்தனர். விருப்ப மனு பெறும் இடங்களில் எல்லாம் கழக தொண்டர்களிடையே உற்சாகமும், எழுச்சியும் காணப்பட்டது. இதனால் உள்ளாட்சித் தேர்தல் இப்பொழுதே சூடுபிடித்தது போல் காணப்பட்டது.

இந்நிலையில் தமிழ்நாடு தேர்தல் ஆணையம் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுவதற்கான தேதியை இன்னும் அறிவிக்காத நிலையிலும் கூட தொண்டர்கள் தேர்தல் களத்தில் தீவிரமாக இறங்கியுள்ளதை காண முடிகிறது. மாவட்டம் தோறும் ஆலோசனை கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன. சென்னையில் அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகளுடன் கழக ஒருங்கிணைப்பாளர்கள் இருவரும் தலைமை கழகத்தில் ஆலோசனை நடத்தியதும், உள்ளாட்சித் தேர்தலில் கழகம் அமோக வெற்றி பெற வேண்டிய அவசியம் குறித்து அறிவுறுத்தியதும் தெரிந்ததே.

இதைத்தொடர்ந்து 15, 16 தேதிகளில் கழகத்தினர் விருப்ப மனுக்களை பூர்த்தி செய்து கொடுக்கலாம் என்று ஏற்கனவே ஒருங்கிணைப்பாளர்கள் அறிவித்திருந்தனர். மேயர் பதவிக்கு ரூ.25 ஆயிரமும், மாநகராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு ரூ.5 ஆயிரமும், நகரமன்ற தலைவர் பதவிக்கு ரூ.10 ஆயிரமும், நகரமன்ற வார்டு உறுப்பினர் பதவிக்கு ரூ.2500-ம் நிர்ணயிக்கப் பட்டு இருந்தது. விருப்ப மனு தாக்கல் செய்ய கடைசி நாளான நேற்று தமிழகம் முழுவதும் பல்லாயிரக் கணக்கான கழகத்தினர் திரண்டு சென்று தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் விருப்ப மனுக்களை பூர்த்தி செய்து அளித்தனர். தொண்டர்கள், நிர்வாகிகள் கூட்டம், விருப்ப மனு வாங்கும் இடங்களில் அலைமோதியது. திருவிழா கூட்டம் போல் தொண்டர்கள் கழக கொடியுடன் உற்சாகத்துடன் காணப்பட்டனர்.

சென்னையில் 5 இடங்களில் மனுக்கள் பெறப்பட்டன. சென்னையில் அவைத்தலைவர் மதுசூதனன் உள்பட கழக நிர்வாகிகளும், கோவையில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியும், நாமக்கல்லில் அமைச்சர் பி.தங்கமணி மற்றும் சரோஜாவும், மதுரையில் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ, வி.வி.ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ.வும், திருச்சியில் அமைச்சர் வெல்லமண்டி நடராஜனும், அரியலூரில் அமைச்சர் வளர்மதியும், அரசு தலைமை கொறடா தாமரை எஸ்.ராஜேந்திரனும் மனுக்களை பெற்றனர். இதேபோல் மற்ற மாவடங்களில் அமைச்சர்கள், மாவட்ட கழக நிர்வாகிகள் விருப்ப மனுக்களை பெற்றனர்.