தமிழகம்

ஹூஸ்டன் மீனாட்சி அம்மன் கோயிலில் துணை முதலமைச்சர் சாமி தரிசனம்

ஹூஸ்டன்

தமிழ்நாடு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் 14.11.2019 அன்று ஹூஸ்டன் ஸ்ரீ மீனாட்சி அம்மன் திருக்கோயிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்தாார். பின்னர் ஹூஸ்டன் ஸ்ரீ மீனாட்சி திருக்கோயில் தேவஸ்தானம் சார்பில் புனரமைக்கப்பட்ட திருமண மண்டபத்தின் கல்வெட்டு திறந்து வைத்து ஆற்றிய உரை வருமாறு:-

தமிழகத்திலிருந்து ஐரோப்பா, ஸ்வீடன், கனடா என மூன்று நாடுகளை கடந்து, 21 மணி, 26 நிமிட நேரம் எந்திர பறவைக்குள் அடைந்து கடந்து 15,000 கிலோ மீட்டருக்கும் மேலான தூரம் பயணம் செய்து, தங்களது வாழ்வின் வழி இதுவே என, புலம் பெயர்ந்து, அமெரிக்கா நாட்டின் டெக்ஸாஸ் ஹூஸ்டன் நகரில் நிலை கொண்ட போதிலும்.தமிழ் இனம், மொழி, கலை, பண்பாடுகளை மறந்திடாது, “தமிழன் என்று சொல்லடா, தலை நிமிர்ந்து நில்லடா” என உரைத்த நாமக்கல் கவிஞரின் வைர வரிகளுக்கு இலக்கணமாகி, தமிழ் பாரம்பரியத்தை காத்து, அதனுடன் ஒன்றி, அமெரிக்க டெக்ஸாஸ் ஹூஸ்டன் நகரில் வாழ்ந்து வரும் எனது இனிய தமிழ் சொந்தங்களுக்கு உளமார்ந்த வணக்கத்தை கரம் கூப்பி, சிரம் தாழ்த்தி தெரிவித்துக் கொள்கிறேன்.

தொழில் முதலீடுகளால், தாய்த் தமிழகமும் வளம் பெற வேண்டும், முதலீடு செய்வோரும் நலம் பெற வேண்டும் என்ற உயரிய நோக்குடன், அமெரிக்க மண்ணுக்கு வருகை தந்து, தொழில் முதலீட்டாளர்களை நேரில் சந்தித்து, அவர்களது அன்பையும், நம்பிக்கையும் பெற்று, தொழில் முதலீடுகளை ஈர்த்திட, மேற்கொள்ளப்பட்டுள்ள, இந்த அரசு முறைப் பயணம், குறுகிய நேரத்தில் ஏற்பாடு செய்யப்பட்டது எனில், அதனினும் குறுகிய கால அவகாசத்தில், டெக்ஸாஸ் ஹூஸ்டன் வாழ் தமிழர்களை ஒருங்கிணைத்து, அவர்கள் குடும்ப சகிதமாக பங்கேற்கும் வகையில்,

இவ்வளவு சிறப்பான முறையில் விழாவை ஏற்பாடு செய்து, அவ்விழாவில் பங்கேற்கும் நல்வாய்ப்பை எனக்கு அளித்த, ஹூஸ்டன் ஸ்ரீ மீனாட்சி திருக்கோயில் சொசைட்டி நிறுவனரும், அதன் கௌரவ தலைவருமான சொக்கலிங்கம் சாம் கண்ணப்பன் உட்பட அனைத்து பொறுப்பாளர்களுக்கும் எனது நெஞ்சம் நிறைந்த நன்றியையும், வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். இப்பூவுலகைப் படைத்த ஈசன், புவியைப் பேணி வளர்க்க, ஆணுக்கு அறிவையும், பெண்ணுக்கு ஞானத்தையும், வைத்துப் படைத்தான். அறிவும், ஞானமும், மனிதர்களுக்கு சிந்தனை ஆற்றலைக் கொடுத்தது. இந்த சிந்தனையிலிருந்து, எண்ணங்கள் பிறந்தன, ஆசைகள் தோன்றின, விருப்பங்கள் உருவாகின.

உலக நடைமுறையில், இரவும், பகலும், உறவும், பகையும், இருளும், ஒளியும், அருளும், பொருளும் – என இருக்கும்,
இரு வேறு உலகத்து இயற்கையைப் போல, சிந்தனையிலும் நல்லவையும், தீயவையும், உருவாயின. சிந்தனைகளும், எண்ணங்களும் நல்லவையாக இருந்து விட்டால், சிந்திப்பவர்களுக்கும், மற்றவர்களுக்கும் அது மகத்தான பயனைத் தந்திடும். அதுவே தீயவைகளாக இருந்துவிட்டால், அவருக்கும், பிறருக்கும் மிகப் பெரும் துன்பம் தருவதாக அமைந்து விடும்.

தன்னலத் தேவைகளாலும், சந்தர்ப்ப சூழ்நிலைகளாலும் உருவாகும் தீய சிந்தனைகளும், கெட்ட எண்ணங்களும்
மனித சமுதாயத்திற்கு மாபெரும் பின்னடைவைத் தந்திடும் என்பதை உணர்ந்து, மனிதர்களாகிய நாம் நல்ல சிந்தனைகளை பெற்று, அதன் பயனாக நல்ல செயல்களை விளைந்திட வேண்டுமாயின் அதற்கு தெய்வ பக்தி மிகவும் அவசியம் ஆகும்.

எது சரி, எது தவறு என பிரித்துப் பார்க்கின்ற, நல்லது எது, தீயது எது என்று பகுத்துக் கூறுகின்ற, பகுத்தறிவு நமக்கு அவசியம் ஆகும். அதே நேரத்தில், பேரறிஞர் அண்ணா எடுத்துக் கூறிய “ஒன்றே குலம், ஒருவனே தேவன்” என்னும் தெய்வ பக்தியும் மிகவும் அவசியம் ஆகும். மாகாளி பராசக்தியின் மீது எல்லையில்லா அன்பு கொண்ட, மகாகவி பாரதி, பக்தியினாலே – தெய்வ பக்தியினாலே – இந்தப் பாரினில் எய்திடும் மேன்மைகள் கேளீர்!என்று தொடங்கி, எழுதிய கவிதையில், “சித்தம் தெளியும், இங்கு செய்கை அனைத்திலும் செம்மை பிறந்திடும்,வித்தைகள் சேரும் – நல்ல வீரர் உறவு கிடைக்கும், மனத்திடைத் தத்துவ முண்டாம் – நெஞ்சில் சஞ்சலம் நீங்கி உறுதி விளங்கிடும். – என்று தெய்வப் பக்தியால் நாம் அடைகின்ற 50 வகையான நன்மைகளை வரிசைப்படுத்தி பட்டியலிட்டு காட்டுகிறார் மகாகவி பாரதியார்.

தெய்வ பக்தியில் மனம் திளைப்பதும், கடவுளுக்கு பயந்து தீமைகள் செய்யாமல் தவிர்ப்பதும், நன்மைகள் செய்து உயர்வதும், பாரம்பரியமாக தமிழர்களின் நெஞ்சத்தில் ஊறிய நற்குணங்கள் ஆகும். தமிழ் கலாச்சாரத்திற்கு முற்றிலும் மாறுபடும் ஒரு தூர தேசத்தில், வாழ்வாதாரத்தை நிலை நிறுத்திக் கொண்டு, வாழ்க்கை நடத்துவது என்பதும், அந்த வாழ்வில் முன்னேற்றம் காண்பது என்பதும் அவ்வளவு சாதாரண விஷயம் அல்ல.

இந்த நிலையை எய்திட நீங்கள் செய்த தியாகங்களும், ஏற்றுக் கொண்டு துன்பங்களும் எத்தகையது என்பதையும், “விட்டுக் கொடுப்பவர்கள் கெட்டுப் போவதில்லை” என்னும் பழமொழிக்கு எடுத்துக் காட்டாக நீங்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள் என்பதையும் நாங்கள் நன்றாகவே அறிந்திருக்கிறோம்.

இத்தகைய கடும் சூழல்களிலும், நமது பண்பாட்டையும், பராம்பரியத்தையும் மறந்து விடாமல், 1977 ஆம் ஆண்டில் டெக்காஸ் மாநிலம் ஹூஸ்டன் பகுதியில், அருள்மிகு மீனாட்சி திருக்கோயில் அமைந்திட, ஆக்கப்பூர்வ நடவடிக்கைகளை முன்னெடுத்து செயல்படுத்தி, இத்திருக்கோயில் அமைந்திட அடிப்படையாகத் திகழ்ந்த அத்துணை நல்ல உள்ளங்களுக்கும், இந்த இனிய தருணத்தில் எனது நன்றியையும், வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்வதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.

1977-ம் ஆண்டில் ஏற்றப்பட்ட அந்த ஒளிச்சுடரை அணையாமல் காத்து, அதற்கு மேலும் மெருகூட்டும் வகையில் தங்களது சேவையை தொடர்ந்து வழங்கி வரும் இன்றைய பொறுப்பாளர்களுக்கு எனது பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நெடிய மகுடத்தை சிரம் தாங்கி, அழகிய கிளியை கரம் ஏந்தி சுந்தரத் திலகம் அணிந்த சுடர் முகத்துடன் அன்னை மீனாட்சி அருள் பாலிக்கும், ஹூஸ்டன் ஸ்ரீ மீனாட்சி திருக்கோயிலுக்கு வருகை தந்ததை எனது பாக்கியமாகக் கருதுகிறேன். இத்திருக்கோயிலில், கட்டப்படும் அரங்கத்தை மக்கள் பயன்பாட்டுக்கு அர்ப்பணித்த இன்றைய விழா, மனதுக்கு நிறைவான , நினைவில் என்றும் நிலைத்து நிற்கும் இனிய விழா என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். அத்துடன் உலகப் பொதுமறையான திருக்குறள் புத்தகங்களை அமெரிக்க மக்களுக்கு அளிக்கின்ற வாய்ப்பை வழங்கியமைக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

பழமைக்கும் பழமையான தமிழ் மொழி, புதுமைக்கும் புதுமையான கருத்துக்களை, மக்களுக்கு எடுத்து இயம்பும் ஆற்றல் கொண்ட, வளமும் திறமும் படைத்த மொழி ஆகும். உலகின் மூத்த மொழியான தமிழ் மொழி, உலகமே போற்றுகின்ற உன்னதமான இலக்கிய வளத்தை பண்டைக் காலந்தொட்டே பெற்றிருந்தது. தமிழ் மொழியில் நாம் காணும் இலக்கியச் செல்வங்களின் மணி மகுடமாக, வைரக் கிரீடமாக, தமிழ் அன்னையின் நெற்றித் திலகமாக, திருக்குறள் திகழ்ந்து கொண்டிருக்கிறது.

அதனால்தான், இந்த வையகமே திருவள்ளுவர் அருளிய திருக்குறளை உலகப் பொது மறை என்று வாழ்த்தி, கொண்டாடிக் கொண்டிருக்கிறது. உலக அரங்கில் தமிழ்ப் பெருங்குடி மக்கள் தங்களது நெஞ்சை நிமிர்த்திப் பெருமிதத்துடன் நிற்கச் செய்யும் மிக உயர்ந்த படைப்பாக திருக்குறள் திகழ்கிறது. இந்த உலகிற்கு தமிழ் தந்த கொடையான திருக்குறள், 2000 ஆண்டுகளுக்கு முன்னரே ஈரடிகளில் உலகளாவிய தத்துவங்களையும், தமிழ்ப் பெருங்குடி மக்களின் பண்பாட்டுச் சிறப்புகளையும் உலகிற்கு வெளிச்சம் போட்டுக் காட்டிய உன்னத இலக்கியம், ஆகும்.

சாதி, மத, இன, மொழி, பேதங்களைத் தாண்டி காலங்கள் பல கடந்தாலும் இன்றைக்கும் என்றைக்கும் உலக மக்கள் அனைவருக்கும் பொருந்துகின்ற கருத்துக்களை பொதியச் செய்து, மக்கள் வேதமாக திருக்குறளை இயற்றிய சிந்தனைச் சிற்பி, திருவள்ளுவர். வள்ளுவரை இந்த உலகுக்குத் தந்து வான்புகழ் கொண்டது தமிழ்நாடு – என்று, பாட்டுக்கொரு புலவன் பாரதி போற்றினார்! வள்ளுவனைப் பெற்றதால், பெற்றதே புகழ் வையகம் – என்று, பாவேந்தர் பாரதிதாசன் பாடினார்!இவ்வளவு சிறப்புகளின் இருப்பிடமாகவும், இத்தனை பெருமைகளில் நிலைக் களமாகவும் திகழ்ந்திடும், ‘திருக்குறள்’ நூலை உங்களுக்கு வழங்குவதில் நான் மிகவும் மகிழ்ச்சியும் பெருமையும் அடைகிறேன்.

தமிழ் மொழி வளம் காணவும், புலம்பெயர்ந்த தமிழ் மக்களின் நலம் பேணவும், மக்கள் மனதில் தெய்வீகம் நிலை நின்று சிறக்கவும், ஹூஸ்டன் ஸ்ரீ மீனாட்சி திருக்கோயில் சொசைட்டி ஆற்றி வரும் அரும்பணிகளை பாராட்டி,
இப்பணிகள் தொடர்ந்திட எனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்து கொள்கிறேன்.

இவ்வாறு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேசினார்.