சிறப்பு செய்திகள்

ஹூஸ்டன் பல்கலை. தமிழ் ஆய்வு இருக்கைக்கு துணை முதல்வர் 10 ஆயிரம் டாலர் நன்கொடை

ஹூஸ்டன்

ஹூஸ்டன் பல்கலைக்கழக தமிழ் ஆய்வு இருக்கைக்கு துணை முதலமைச்சர் 10 ஆயிரம் டாலர் நன்கொடை அளிப்பதாக தெரிவித்துள்ளார்.

துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் 15.11.2019 அன்று ஹில்டன் ஹோட்டலில், ஹூஸ்டன் பல்கலைக்கழக வேந்தர் டாக்டர் ரேனுகத்தார் மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

அமெரிக்காவில் வாழும், தமிழ் சமுதாயமும் வெற்றி பெற்றிருக்கிறது என்பது மனதிற்கு இதமாக இருக்கிறது. கல்வியாளர்களாகவும், பணியாளர்களாவும் வந்த பலர் இன்று தொழில் முனைவோராக, தொழிலதிபர்களாக மாறியிருக்கிறார்கள். ஆனாலும் தங்களது பாரம்பரியத்தை, கலாச்சாரத்தை மறக்காமல், அவற்றுடன் உணர்வு ரீதியாக ஒன்றிப் போயிருக்கும் உங்களைப் பார்த்து பெருமைப்படுகிறேன். சமுதாயத்தில் அனைவரையும் அரவணைத்துச் செல்லும் அமெரிக்க நாட்டின் பண்பினை இது எதிரொலிக்கிறது.

ஆகவே இங்குள்ள ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் ‘தமிழ் ஆய்வு இருக்கை’ அமைக்கும் முயற்சி மிகவும் சரியான நேரத்தில் பொருத்தமான முடிவாக அமைந்திருக்கிறது. அதற்காக இங்கு அமர்ந்திருக்கும் அப்பல்கலைக்கழக வேந்தர் டாக்டர் ரேனு கத்தார் மேடத்துக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். முழுமையான கல்வியாளராகவும், சிறந்த நிர்வாகியாகவும் பல சவால்களை சந்தித்த உங்களது வாழ்க்கை அனுபவங்கள் அனைவரையும் கவர்ந்திழுக்கத்தக்கது. தமிழ் ஆய்வு இருக்கை அமைப்பதற்கு தாங்கள் அளித்துள்ள ஆதரவிற்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் அமைய விருக்கும் தமிழ் ஆய்வு இருக்கைக்கு தமிழக அரசும் நன்கொடை அளித்திட வேண்டும் என்று உங்கள் மத்தியில் உள்ள எதிர்பார்ப்பை நான் உணர்ந்திருக்கிறேன். நான் சென்னை திரும்பியதும், தமிழக முதலமைச்சர் அவர்களுடன் கலந்து ஆலோசித்து, தமிழ் இருக்கைக்கு நிச்சயம் தமிழக அரசின் உதவி கிடைப்பதற்கு ஆவண செய்வேன் என்று உறுதியளிக்கிறேன்.

அமெரிக்கா மற்றும் அமெரிக்க வாழ் இந்தியர்கள் மற்றும் தொழில் முனைவோர் அனைவருக்கும் இந்தியாவில்- குறிப்பாக தமிழ்நாட்டில் முதலீடு செய்யுங்கள் என்று நான் அழைப்பு விடுக்கவே இங்கு வந்திருக்கிறேன். மிகவும் முன்னேறிய இந்திய மாநிலங்களில் ஒன்று தமிழ்நாடு. இந்திய பொருளாதாரத்தில் இரண்டாவது பெரிய மாநிலமாகவும், முதலீடு செய்வதற்கு மிகவும் விரும்பும் மாநிலமாகவும் தமிழ்நாடு இருக்கிறது. இந்தியாவில் உள்ள தமிழ்நாட்டிற்கும், அமெரிக்காவில் உள்ள டெக்ஸாஸ் மாநிலத்திற்கும் பல ஒற்றுமைகள் உள்ளன.

“ஹூஸ்டன் பெருநகரம்” டெக்ஸாஸ் மற்றும் அமெரிக்காவின் பொருளாதாரத்திற்கான மிகப்பெரிய “வளர்ச்சி எஞ்சின்”! ஆகவே இங்குள்ளவர்கள் தமிழ்நாட்டில் முதலீடு செய்வதற்கு பல வாய்ப்புகள் உள்ளன என்று நான் நம்புகிறேன். அதே போல் நாங்களும் இந்த நகரில் பயனுள்ள வகையில் பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை நல்கிட முடியும் என்று கருதுகிறேன். அந்த பரஸ்பர ஒத்துழைப்பை எதிர்பார்த்து, இங்குள்ள “தொழில் முனைவோர் குழு” முதலீடுகள் செய்வது குறித்து ஆலோசனை நடத்த தமிழ்நாட்டிற்கு வர வேண்டும் என்று நான் அன்புடன் அழைக்கிறேன்.

இவ்வாறு துணை முதலமைச்சர் பேசினார்.

பின்னர் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் ஆய்வு இருக்கை அமைக்க தனது பங்காக 10 ஆயிரம் டாலர் நன்கொடை அளிப்பதாக தெரிவித்தார்.