தற்போதைய செய்திகள்

3,280 சிறந்த ஆசிரியர்களுக்கு பரிசு- பாராட்டு சான்றிதழ் – அமைச்சர்கள் வழங்கினர்

தருமபுரி

தருமபுரி கெரகோடஅள்ளியில் நடைபெற்ற ஆசிரியர் தினவிழாவில் 3280 சிறந்த ஆசிரியர்களுக்கு பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழை வழங்கினார்.

தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் வட்டம், கெரகோடஅள்ளியில் பள்ளிக்கல்வித்துறை மற்றும் சரஸ்வதி பச்சியப்பன் கல்வி அறக்கட்டளை இணைந்து நடத்திய ஆசிரியர் தினவிழாவில் பள்ளிக்கல்வி, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் ஆகியோர் 100 சதவீத தேர்ச்சி வழங்கிய 3,280 பள்ளி தலைமையாசிரியர்கள், ஆசிரியர்களுக்கு பரிசு கேடயம் மற்றும் பாராட்டு சான்றிதழ்களும், 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பில் மாவட்ட அளவில் அதிக மதிப்பெண்கள் பெற்ற 7 மாணவ, மாணவிகளுக்கு ரூ.91,000 மதிப்பிலான ஊக்கத்தொகையும் வழங்கினர். இவ்விழாவிற்கு முதன்மைக்கல்வி அலுவலர் அ.முத்துக்கிருஷ்ணன் தலைமை வகித்தார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பி.ராஜன் முன்னிலை வகித்தார்.

இவ்விழாவில் பள்ளிக்கல்வி, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேசியதாவது:-

புரட்சித்தலைவி அம்மாவின் அரசு கிராமப்புற மாணவர்களின் கல்வித்தரத்தை உயர்த்தும் சிறப்பான பணியை அரசு பள்ளி ஆசிரியர்கள் மேற்கொண்டு வருகின்றனர். ஆசிரியர்களின் அறிவும், ஆற்றலும், சிந்தனையும் கிராமப்புற மாணவர்களுக்கு சிறப்பான முறையில் பயன்பட்டு வருகிறது. அரசு பள்ளி ஆசிரியர்களின் திறனும், ஆற்றலும் எந்த தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கும் இல்லை.

இந்தியாவிலேயே திறமை வாய்ந்த அரசு பள்ளி ஆசிரியர்கள் தமிழகத்தில் தான் உள்ளனர். ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் சிறந்த ஆசிரியர்களை தமிழக அரசு தேர்வு செய்து வருகிறது. மற்ற மாநிலங்களை காட்டிலும் ஆசிரியர் தேர்வு வாரியத்தை தமிழக அரசு சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. தற்போது நடைபெற்று வரும் ஆசிரியர் கலந்தாய்வுகளில் ஒரு சிறிய தவறு கூட நடைபெறாத வகையில் கலந்தாய்வுகளை அரசு சிறப்பாக நடத்தி வருகிறது.

அரசு பள்ளி ஆசிரியர்கள் அச்சமும், தயக்கமும் கொள்ள தேவையில்லை. ஆசிரியர்களால் தான் இந்த சமுதாயம் வளரும். ஏழைகள் இல்லா தமிழகத்தை உருவாக்க அரசுப் பள்ளி ஆசிரியர்கள், ஏழை மாணவர்களுக்கு சிறந்த கல்வி அளிப்பதன் மூலமே நிறைவேற்ற முடியும். தமிழக மாணவர்களுக்கு உள்ள திறமையும் ஆற்றலும் இந்தியாவில் வேறு எந்த மாநில மாணவர்களுக்கும் இல்லை.

மிக விரைவில் முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் அனைவருக்கும் மடிகணினிகள் வழங்கப்படும். தற்போது 28 ஆயிரம் முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு மடிகணினிகள் வழங்கப்பட்டு உள்ளது. தமிழகத்தில் 54 லட்சத்து 62 ஆயிரம் மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மடிகணினிகள் வழங்கப்பட்டுள்ளது. அனைத்து அரசு பள்ளி ஆசிரியர்களுக்கும் மடிகணினி வழங்கும் திட்டம் அரசின் செயல்பாட்டில் உள்ளது.

இவ்வாறு அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேசினார்.