தற்போதைய செய்திகள்

ஸ்ரீவைகுண்டம் பேட்மாநகரில் மாபெரும் மாட்டுவண்டி, குதிரைவண்டி போட்டி – அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ தொடங்கி வைத்தார்

தூத்துக்குடி

கழகத்தின் 48-ம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் பேட்மாநகரில் மாபெரும் மாட்டுவண்டி, குதிரை வண்டி போட்டியை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ தொடங்கி வைத்தார்.

கழகத்தின் 48-ம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு தூத்துக்குடி தெற்கு மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் ஒன்றியம் மூலக்கரை ஊராட்சி கழகம் சார்பில் பேட்மாநகரில் நேற்று மாபெரும் மாட்டுவண்டி மற்றும் குதிரை வண்டி போட்டி நடைபெற்றது. ஒன்றிய கழக செயலாளர் காசிராஜன் ஏற்பாட்டில் நடைபெற்ற இப்போட்டிகளை தூத்துக்குடி வடக்கு மாவட்ட கழக செயலாளரும், செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சருமான கடம்பூர் செ.ராஜூ, தெற்கு மாவட்ட கழக செயலாளர் எஸ்.பி.சண்முகநாதன் எம்.எல்.ஏ. ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

முன்னதாக விளாத்திகுளம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பன், ஓட்டப்பிடாரம் தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மோகன் ஆகியோர் வரவேற்றனர். இதில் ஏராளமான மாட்டு வண்டிகளும், குதிரை வண்டிகளும் பங்கேற்றன. பெரிய மாட்டுவண்டி, சிறிய மாட்டுவண்டி, பூஞ்சிட்டு மாட்டுவண்டி என பல்வேறு பிரிவுகளாக போட்டிகள் நடத்தப்பட்டன. பெரிய மாட்டுவண்டி போட்டியில் வெற்றி பெற்ற வண்டிக்கு முதல் பரிசாக ரூ.50 ஆயிரமும், இரண்டாம் பரிசாக ரூ.40 ஆயிரமும், மூன்றாம் பரிசாக ரூ.30 ஆயிரமும், நான்காம் பரிசாக ரூ.10 ஆயிரமும் வழங்கப்பட்டது.

சிறிய மாட்டுவண்டி போட்டியில் வெற்றி பெற்ற வண்டிக்கு முதல் பரிசாக ரூ.30 ஆயிரமும், இரண்டாம் பரிசாக ரூ.25 ஆயிரமும், மூன்றாம் பரிசாக ரூ.20 ஆயிரமும், நான்காம் பரிசாக ரூ.5 ஆயிரமும் வழங்கப்பட்டது. பூஞ்சிட்டு மாட்டுவண்டி போட்டியில் முதல் பரிசாக ரூ.15 ஆயிரமும், இரண்டாம் பரிசாக ரூ.10 ஆயிரமும், மூன்றாம் பரிசாக ரூ.7 ஆயிரமும் வழங்கப்பட்டது.குதிரை வண்டி போட்டியில் முதல் பரிசாக ரூ.20 ஆயிரமும், இரண்டாம் பரிசாக ரூ.15 ஆயிரமும், மூன்றாம் பரிசாக 10 ஆயிரமும் வழங்கப்பட்டது.

இந்த மாட்டு வண்டி மற்றும் குதிரை வண்டி போட்டிகளை ஸ்ரீவைகுண்டம் மட்டுமல்லாது திருநெல்வேலி உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான கிராம மக்கள் வந்திருந்து கண்டு கழித்தனர். காவல்துறை ஆய்வாளர் ஜட்சன் தலைமையிலான காவல்துறையினர் சிறப்பாக பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

இந்த நிகழ்ச்சியில் ஸ்ரீவைகுண்டம் தாசில்தார் சந்திரன், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி, தலைவர் சுதாகர், மாவட்ட ஆவின் பால் துறை இயக்குனர் நீலகண்டன், நம்பிக்கை ஜான்சன், தேவராஜ், டிரைவர் ஆனந்த் உள்பட ஏராளமான கழகத்தினர் கலந்து கொண்டனர்.