திண்டுக்கல்

1,387 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவி – அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் வழங்கினார்

திண்டுக்கல்:-

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் 1387 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் வழங்கினார்.

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் நேற்று முதலமைச்சரின் சிறப்பு குறை தீர்வு முகாமில் பெறப்பட்ட மனுக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மாவட்ட வருவாய் அலுவலர் பா.வேலு தலைமையில் நடைபெற்றது. வேடசந்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் வி.பி.பி.பரமசிவம் முன்னிலை வகித்தார். விழாவில் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் கலந்து கொண்டு 130 பயனாளிகளுக்கு ரூ.5.47 லட்சம் மதிப்பீட்டில் இலவச வீட்டுமனை பட்டா, 10 பயனாளிகளுக்கு ரூ.39,100 மதிப்பீட்டில் இலவச தையல் இயந்திரம்,

373 பயனாளிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 முதியோர் உதவித்தொகை பெறுவதற்கான ஆணை, 476 பயனாளிகளுக்கு பட்டா மாறுதல், 303 பயனாளிகளுக்கு உட்பிரிவு பட்டா மாறுதல், 40 பயனாளிகளுக்கு நத்தம் பட்டா மாறுதல், 59 பயனாளிகளுக்கு சிறுகுறு விவசாய சான்று, வேளாண்துறை சார்பில் 4 பயனாளிகளுக்கு வேளாண் இயந்திரம் என மொத்தம் 1,387 பயனாளிகளுக்கு ரூ.51.05 லட்சம் மதிப்பீட்டிலான அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இந்த விழாவில் அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் பேசியதாவது:-

மக்களின் குறைகளை நிவர்த்தி செய்வதற்கு, புரட்சித்தலைவி அம்மாவின் அரசு அதிக முன்னுரிமை அளித்து, அவர்களின் தேவைகளை உடனுக்குடன் நிவர்த்தி செய்து வருகிறது. பொதுமக்களின் தேவைகளை, கோரிக்கை மனுக்களாக அளித்து பயன்பெறும் வகையில், மக்கள் குறைதீர்க்கும் கூட்டம், அம்மா திட்ட முகாம் ஆகியவைகள் மூலம் பொதுமக்களின் தேவைகளை நிவர்த்தி செய்து வருகிறது.

பொதுமக்கள் தங்களுடைய தேவைகளான முதியோர் உதவித்தொகை, பட்டா மாறுதல், வீட்டுமனைப் பட்டா, உழவர் பாதுகாப்பு அட்டை, பிறப்பு, இறப்பு சான்றிதழ், சாதிச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ், வருமான சான்றிதழ், குடிநீர் வசதி, சாலை வசதி, மின்விளக்கு வசதி, குடும்ப அட்டை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை மனுக்களை பொதுமக்கள், பல்வேறு பகுதிகளிலிருந்து பேருந்தின் மூலம் வட்டாட்சியர், கோட்டாட்சியர் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்று மனுக்களை வழங்க, ஏற்படும் நேரம், செலவு, வேலை இழப்பு உள்ளிட்ட சிரமத்தை தவிர்க்கும் பொருட்டு, வருவாய்த்துறையின் மூலம் அலுவலர்கள் பொதுமக்களின் பகுதிகளுக்கு நேரடியாக சென்று மனுக்களை பெற தமிழக அரசால் உத்தரவிடப்பட்டு வழிவகை செய்யப்பட்டுள்ளது.

மேலும், பொதுமக்களின் குறைகளை மனு மூலமாக பெற்று, உடன் நடவடிக்கை மேற்கொள்ளும் பொருட்டு, மக்களைத் தேடி அரசு என்ற உன்னத நிலையை ஏற்படுத்தும் வகையில் “முதலமைச்சரின் சிறப்பு குறை தீர்வு திட்டத்தை” முதலமைச்சர் 23.08.2019 அன்று தொடங்கி வைத்துள்ளார். தமிழ்நாட்டில் உள்ள மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் அனைத்து கிராமங்களிலும் முகாம்கள் நடத்தி, பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்று, அம்மனுக்களின் மீது தொடர்புடைய அலுவலர்கள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டார்.

அரசைத் தேடி மக்கள் என்ற நிலையை மாற்றி மக்களைத் தேடி அரசு என்ற சிறப்பான ஒருநிலை தமிழக அரசால் ஏற்படுத்தப்பட்டது. “முதலமைச்சரின் சிறப்பு குறை தீர்வு திட்டம்” மூலம் அனைத்து கிராம, நகர்புற பகுதிகளிலும் அடித்தட்டு மக்களின் கோரிக்கைகளை நிவர்த்தி செய்வதே இதன் நோக்கமாகும்.

அதன்படி திண்டுக்கல் மாவட்டத்தில் இத்திட்டமானது, செட்டிநாயக்கன்பட்டி ஊராட்சி, நந்தனார்புரத்தில் 23.08.2019 அன்று தொடங்கப்பட்டது. அதனடிப்படையில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள திண்டுக்கல் கிழக்கு, திண்டுக்கல் மேற்கு, ஆத்தூர், நிலக்கோட்டை, நத்தம், பழனி, ஒட்டன்சத்திரம், வேடசந்தூர், குஜுலியம்பாறை, கொடைக்கானல் ஆகிய 10 வட்டங்களில் 23.08.2019 முதல் வருவாய் கிராமங்கள்தோறும் நடைபெற்ற 709 முகாம்கள் மூலம் பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கைகளாக 20,371 மனுக்கள் பெறப்பட்டதில் 11,656 மனுக்கள் தகுதிவாய்ந்ததாக கருதப்பட்டு ஏற்றுக்கொள்ளப் பட்டுள்ளது. மீதமுள்ள 8,715 மனுக்களில் கோரிக்கை ஏற்க இயலாத நிலையில் இருந்தபடியால், மனு நிராகரிக்கப் பட்டதற்கான தகுந்த காரணத்தை சம்பந்தப்பட்ட மனுதாரர்களுக்கு கடிதத்தின் வாயிலாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேடசந்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்ற முகாமில் 2,403 மனுக்கள் பெறப்பட்டது. இதில் 1,816 மனுக்கள் தகுதிவாய்ந்ததாக கருதப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. மீதமுள்ள 587 மனுக்களில் கோரிக்கை ஏற்க இயலாத நிலையில் இருந்தபடியால், மனு நிராகரிக்கப்பட்டதற்கான தகுந்த காரணத்தை சம்பந்தப்பட்ட மனுதாரர்களுக்கு கடிதத்தின் வாயிலாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசால் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வழங்கப்பட்ட நலத்திட்ட உதவிகளை பயன்படுத்தி பொதுமக்கள் தங்களது வாழ்வாதாரத்தினை வளப்படுத்திக்கொள்ள வேண்டும். மேலும் அரசால் செயல்படுத்தப்படும் திட்டங்களுக்கு பொதுமக்கள் தங்களது ஒத்துழைப்பினை வழங்கிட வேண்டும்.

இவ்வாறு அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் பேசினார்.

இந்நிகழ்ச்சியில் மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் வி.மருதராஜ், பழனி சார் ஆட்சியர் உமா, தனித்துணை ஆட்சியர் சிவக்குமார், வட்டாட்சியர் ராஜேஸ்வரி, செயல் அலுவலர் கோபிநாத், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் பழனிசாமி, பிரேம்குமார், அரசு அலுவலர்கள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.