சிவகங்கை

கழக ஆட்சியில் கூட்டுறவு சங்கங்கள் புனரமைப்பு – அமைச்சர்கள் செல்லூர் கே.ராஜூ பெருமிதம்

சிவகங்கை

கழக ஆட்சியில் கூட்டுறவு சங்கங்கள் புனரமைப்பு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் செல்லூர் கே.ராஜூ ெபருமிதத்துடன் கூறினார்.

சிவகங்கையில் 66-வது கூட்டுறவு வார விழா மாவட்ட ஆட்சியர் ஜெயகாந்தன் தலைமையில் நடைபெற்றது. விழாவில் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ, கதர் மற்றும் கிராமத் தொழில்கள் துறை அமைச்சர் ஜி.பாஸ்கரன் ஆகியோர் 170 பயனாளிகளுக்கு ரூ.10.82 கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.

விழாவில் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ பேசியதாவது:-

புரட்சித்தலைவி அம்மா அவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகுதான் கூட்டுறவு சங்கங்கள் புனரமைக்கப்பட்டு நல்ல முறையில் செயல்பட்டு வருகிறது. சிவகங்கை மாவட்டத்தில் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி நலிவுற்ற போது அப்போதைய மத்திய நிதி அமைச்சர் தற்போது திகார் சிறையில் இருக்கும் ப.சிதம்பரம் இந்த வங்கிக்கு ஒன்றும் செய்யவில்லை. அப்போது ஆட்சியில் இருந்த அம்மா அவர்கள் நிதியை ஒதுக்கி வங்கியை செயல்பட வைத்தார்.

அதன் பயனாக ஆயிரக்கணக்கான மக்கள் இன்று பயனடைகின்றனர். இன்றைக்கு குடும்ப அட்டை இருந்தாலே ஒரு நபருக்கு ரூ.50 ஆயிரம் வரை குறைந்த வட்டியில் கடன் வழங்கும் சிறந்த வங்கியாக வங்கி திகழ்கிறது. ரூ.25 கோடி வட்டியில்லா கடன் வழங்கி வருகிறது. இந்த வங்கியின் வளர்ச்சியில் கழக அரசின் பங்களிப்பு இன்றியமையாதது. இந்தியாவிலேயே அதிக காப்பீட்டுத் தொகை பெற்ற மாநிலமாகவும், கூட்டுறவுத்துறை மூலம் சிறப்பான பயன்பாட்டிற்காக மத்திய அரசால் 27 விருதுகளை தமிழக அரசு பெற்றுள்ளது.

அம்மா வழியில் ஆட்சி புரிந்துவரும் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் சிறப்பாக ஆட்சி புரிந்து வருகின்றனர். எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலினுக்கு எது நன்மை, எது தீமை என்று கூட தெரியவில்லை. அவரது வாயிலிருந்து வருவது எல்லாம் பொய்யாகவே இருக்கிறது. மக்களாகிய நீங்களே யார் நல்லவர் யார் வல்லவர் என்று புரிந்து கொள்ளுங்கள்.

இவ்வாறு அமைச்சர் செல்லூர் கே.ராஜூ பேசினார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட கழக செயலாளர் பி.ஆர்.செந்தில்நாதன், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் சந்திரன், துணைத்தலைவர் ராஜா, மானாமதுரை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் நாகராஜன், ஆவின் சேர்மன் அசோகன், சிவகங்கை மாவட்ட கூட்டுறவு சங்க இணை பதிவாளர் ஆரோக்கிய குமார், மத்திய கூட்டுறவு வங்கி இணை பதிவாளர் பழனீஸ்வரி, துணை பதிவாளர் பாரதி உள்பட அரசு அலுவலர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.