தற்போதைய செய்திகள்

வரும் உள்ளாட்சி தேர்தலில் கழகத்தின் தேர்தல் வியூகத்தால் தி.மு.க. காணாமல் போய்விடும் –

திருவள்ளூர்

வரும் உள்ளாட்சித் தேர்தலில் கழகத்தின் தேர்தல் வியூகத்தால் தி.மு.க. காணாமல் போய் விடும் என்று அமைச்சர் பா.பென்ஜமின் கூறினார்.

திருவள்ளூர் மேற்கு மாவட்ட கழகம் சார்பில் நகர, ஒன்றிய, பேரூர், ஊராட்சி, கிளை கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் திருவள்ளூரில் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட கழக அவைத்தலைவர் தி.பா.கண்ணன் தலைமை வகித்தார். இதில் ஊரக தொழில்துறை அமைச்சர் பா.பென்ஜமின், தமிழ் வளர்ச்சி மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் க.பாண்டியராஜன், மாவட்ட கழக செயலாளரும் பொன்னேரி தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான சிறுணியம் பி.பலராமன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், கழக மருத்துவர் அணி செயலாளருமான டாக்டர் பி.வேணுகோபால், கழக புரட்சித்தலைவி பேரவை இணை செயலாளர் செவ்வை எம்.சம்பத்குமார் ஆகியோர் ஆலோசனை வழங்கி பேசினர்.

இக்கூட்டத்தில் அமைச்சர் பா.பென்ஜமின் பேசியதாவது:-

அம்மா அவர்களின் மறைவுக்கு பின் இந்த இயக்கம் அழிந்து விட்டது, வெற்றிடம் என்றெல்லாம் பொய்யான குற்றச்சாட்டை பரப்பி வந்தார்கள். அதன் தாக்கம் அண்மையில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் பின்னடைவு ஏற்பட்டது.கிராமத்தில் ஒரு பழமொழி சொல்வார்கள் தாய் எட்டடி பாய்ந்தால் குட்டி பதினாறு அடி பாயும் என்று சொல்வார்கள். ஆனால் தாய் வழி வந்த முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் 32 அடிக்கு மேலாக பாயக்கூடிய தலைவர்களாக இருக்கிறார்கள்.

நகர, பேரூர், ஊராட்சி, கிராமங்களில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் அசைக்க முடியாத சக்தியாக இருக்கிறது என்று எதிர்க்கட்சித் தலைவரே சொல்கிறார். அதை விக்கிரவாண்டி நாங்குநேரி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் உறுதிப்படுத்தி உள்ளோம். பொதுமக்கள் மத்தியில் கழகத்திற்கு நல்ல செல்வாக்கு உள்ளது. புரட்சித் தலைவி அம்மா அவர்கள் இருக்கும்போது உள்ளாட்சித் தேர்தலில் 90 சதவீதம் வெற்றி பெற்றோம். அதேபோல் வரும் உள்ளாட்சித் தேர்தலிலும் 100 சதவீத வெற்றி பெற வேண்டும்.

அம்மா அவர்கள் தேர்தல் யுத்திகளை எப்படி கையாண்டார்களோ அதே போல் முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் கையாள்கிறார்கள். இன்றைக்கு எதிர்க்கட்சிகளுக்கு சிம்ம சொப்பனமாக முதலமைச்சர் திகழ்கிறார். பொய்யான வாக்குறுதிகளை அளித்து வெற்றி பெற்று விடலாம் என்று எண்ணிய திமுகவிற்கு இடைத்தேர்தல் முடிவுகள் சவுக்கடி கொடுத்துள்ளது. இந்த தோல்வி மூலம் ஸ்டாலின் என்ன பேசுவது என்று தெரியாமல் உளறி வருகிறார். திமுகவினர் கதிகலங்கி உள்ளனர். வருகின்ற உள்ளாட்சி தேர்தலில் திமுக முகவரியே இல்லாமல் செய்ய வேண்டும்.

இவ்வாறு அமைச்சர் பா.பென்ஜமின் பேசினார்.

இக்கூட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள் பி.எம்.நரசிம்மன், கே.எஸ்.விஜயகுமார், கழக எம்.ஜி.ஆர். இளைஞர் அணி துணை செயலாளர் பஞ்சட்டி கே.நடராஜன், கழக தகவல் தொழில்நுட்ப பொருளாளர் எஸ்.டி.தர்மேஷ் குமார், அண்ணா தொழிற்சங்க துணை செயலாளர் டி.பி.சம்பத்குமார், மாவட்ட அம்மா பேரவை தலைவர் ஆர்.பரிமேலழகன், மாவட்ட பால்வளத் தலைவர் சந்திரன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் என்.எஸ்.ஜெகநாதன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆர்.சக்கரபாணி, கே.பி.கே.சேகர், ரவிக்குமார், டி சக்குபாய், எம்.அருண் சுப்பிரமணியன், நடராஜன், ரா.சண்முகம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.