தற்போதைய செய்திகள்

விவசாயிகளுக்கு அதிக அளவு கடனுதவி – கூட்டுறவு சங்களுக்கு அமைச்சர் உடுமலை ேக.ராதாகிருஷ்ணன் வலியுறுத்தல்

திருப்பூர்

விவசாயிகளுக்கு அதிக அளவில் கடனுதவிகள் வழங்க வேண்டும் என்று கூட்டுறவு சங்கங்களுக்கு அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.

திருப்பூர் மாவட்டம், பல்லடம் சாலை டி.ஆர்.ஜி. திருமண மண்டபத்தில் நேற்று கூட்டுறவுத் துறை சார்பில் 66 வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் க.விஜயகார்த்திகேயன் தலைமையில் நடைபெற்றது. இவ்விழாவில் 623 பயனாளிகளுக்கு ரூ.10.01 கோடி மதிப்பிலான கடனுதவிகள் மற்றும் சிறந்த கூட்டுறவு சங்கங்களுக்கான பாராட்டுக் கேடயங்களை கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் வழங்கி பேசியதாவது:-

கூட்டுறவில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் கடந்த 2011-ம் ஆண்டில் கூட்டுறவு சங்கங்களுக்கு சிறந்த முறையில் தேர்தலை நடத்தியவர் அம்மா அவர்கள். அம்மா அவர்களின் வழிகாட்டுதலின்படி செயல்படும் முதலமைச்சர் மக்கள் நலத்திட்டங்களை சிறப்புடன் செயல்படுத்தி வருகிறார். திருப்பூர் மாவட்டத்தில் கூட்டுறவுத் துறையானது விவசாய பெருங்குடி மக்கள் மற்றும் பொது மக்களுக்கு சிறந்த சேவையினை செய்து வருகிறது. குறிப்பாக விவசாயம், நெசவு, பால் உற்பத்தி, கால்நடை பராமரிப்பு, வீட்டுவசதி, கதர் கிராம தொழில்கள் மற்றும் மீன்வளம் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும், கூட்டுறவு இயக்கம் காலுன்றி உள்ளது. இத்தகைய கூட்டுறவு வங்கிகளின் மூலம் கிராமப்புறங்களில் உள்ள விவசாயிகளுக்கு அதிகளவிலான கடனுதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.

தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் 2018-2019-ம் ஆண்டில் 27,078 உறுப்பினர்களுக்கு ரூ.145.14 கோடி பயிர்க்கடன் வழங்கப்பட்டுள்ளது, 2,37,151 நபர்களுக்கு ரூ.109.66 கோடி அளவில் வட்டி மானியமாக வழங்கப்பட்டுள்ளது, காய்கறி பயிர்கடனாக ரூ.15.30 கோடி வழங்கப்பட்டுள்ளது, வறட்சி நிவாரணமாக 152618 நபர்களுக்கு ரூ.76.59 கோடியும், பயிர் காப்பீடு இழப்பீடாக 6121 நபர்களுக்கு ரூ.9.54 கோடியும், நடப்பாண்டில் 190 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.8.47 கோடி கடனுதவியும்,

1422 நபர்களுக்கு ரூ.6.44 கோடி மாற்றுத்திறனாளி கடனுதவியும், நகைக்கடனாக ரூ.5,570 கோடி அளவிற்கும், தானிய ஈட்டுக் கடனாக 5,442 நபர்களுக்கு ரூ.120.61 கோடி கடனுதவியும், சிறுவணிக கடனுதவியாக 77,087 நபர்களுக்கு ரூ.85.61 கோடியும், என கடந்த 2011-ம் ஆண்டு முதல் நடப்பாண்டு வரை சுமார் 20,07,146 நபர்களுக்கு ரூ.12,930 கோடி அளவிற்கு அனைத்து கடன்களும் வழங்கப்பட்டுள்ளது. மேலும் ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் மத்திய கூட்டுறவு வங்கிகளின் சார்பில் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் மற்றும் பொது மக்களுக்கு அதிகளவிலான கடனுதவிகளையும் வழங்க வேண்டும்.

இவ்வாறு அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் பேசினார்.

இந்நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர்கள் கரைப்புதூர் ஏ.நடராஜன், சு.குணசேகரன், கே.என்.விஜயகுமார், உ.தனியரசு, திருப்பூர் மாவட்ட ஆவின் சங்க தலைவர் மனோகரன், மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர்கள் வி.கிருஷ்ணகுமார், என்.கிருஷ்ணராஜ், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் பிரபு, கூட்டுறவுத்துறை துணை பதிவாளர்கள் நர்மதா, சண்முகவேல், கூட்டுறவு சங்கங்களின் தலைவர்கள் சேவூர் வேலுச்சாமி, புதூர் கலைமணி, பி.கே.எஸ்.சடையப்பன், கருணாகரன, சுப்பிரமணியன், சித்துராஜ், புத்தரச்சல் பாபு, ஜெகதீஸன், பரமராஜன், சக்திவேல், அரசு அலுவலர்கள், கூட்டுறவு சங்கத் தலைவர்கள், முன்னாள் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.