தற்போதைய செய்திகள்

விவசாயிகளை பாதிக்கும் எந்த ஒரு திட்டத்தையும் அரசு செயல்படுத்தாது – அமைச்சர் பி.தங்கமணி உறுதி

நாமக்கல்

விவசாயிகளை பாதிக்கும் எந்த ஒரு திட்டத்தையும் அரசு செயல்படுத்தாது என்று அமைச்சர் பி.தங்கமணி கூறினார்.

நாமக்கல்- ஈரோடு மாவட்டங்களை இணைக்கும் காவேரி ஆற்றின் குறுக்கே அமைக்கப்பட்ட பாலம் அருகில் நாமக்கல் மாவட்டம் சோழசிராமணியில் கதவணை மின் உற்பத்தி நிலையம் இயங்கி வருகிறது. இதன் அருகில் இரண்டு மாவட்டங்களை இணைக்கும் சாலை மழையால் இரண்டு முறை சேதம் அடைந்தது. இதையடுத்து தற்போது சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில் சாலை சரிசெய்யும் பணிகளை மின்சாரம் மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் பி.தங்கமணி, நாமக்கல் மாவட்ட ஆட்சியர் கா.மெகராஜ் மற்றும் அரசு துறை அதிகாரிகளுடன் சென்று ஆய்வு செய்தார். அதனை தொடர்ந்து நாமக்கல் மாவட்டம் சோழசிராமணியில் கதவணை மின் உற்பத்தி நிலைய செயல்பாடுகள், சாலை பராமரிப்பு பணிகள் குறித்து மின்சாரம், வருவாய்த்துறை அதிகாரிகளுடன் கேட்டறிந்தார். பணிகளை விரைந்து முடிக்கவும் அமைச்சர் அறிவுறுத்தினார்.

பின்னர் அமைச்சர் பி.தங்கமணி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

சோழசிராமணி கதவணை மின் உற்பத்தி நிலையம் அருகே சாலைகளில் ஏற்பட்டுள்ள மண் சரிவு சரி செய்யப்பட்டு வருகிறது. மேலும் அந்த பகுதியில் எப்போதும் மண் சரிவு ஏற்படாத வண்ணம் சாலைகள் சரி செய்யப்படும். மக்கள் பாதுகாப்பாக செல்ல நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம். இன்னும் 10 நாட்களில் போக்குவரத்து சரி செய்யப்படும்.

மாநில கம்யூனிஸ்ட் கட்சி பிரமுகர் முத்தரசன் கேரளா மாநிலத்தில் விளைநிலம் அல்லாத பகுதிகளில் மின்கோபுரம் அமைப்பதாக சொன்னார். முதலில் ஏற்கனவே முழுவதுமாக புதைவழித்தடம் என்று சொன்னார்கள். அதற்கு பின்னால் நாங்கள் எடுத்துக் கூறியதற்கு பின்னால் இப்போது 120 டவர்கள் விளைநிலங்கள் அல்லாத இடங்களில் என்று சொல்லியிருக்கிறார்கள். புகைப்படம் என்னிடம் உள்ளது.

முழுமையாக அந்த விளை நிலத்தில்தான் வைத்திருக்கிறார்கள். அதுவும் குறிப்பாக சொல்ல வேண்டும் என்று சொன்னால் நெற்பயிர் இருக்கின்ற இடத்தில் தான் டவர் அமைத்திருக்கிறார்கள். முத்தரசன் பார்க்கவில்லை என்று நினைக்கிறேன். ஆகையால் விவசாயிகளை பாதிக்கும் எந்த ஒரு திட்டத்தையும் அரசு மேற்கொள்ளாது. உயர்மின் கோபுரம் அமைப்பது தொடர்பாக விவசாயிகள் தமிழக முதல்வரை நாளை சந்தித்து நன்றி தெரிவிக்க உள்ளனர்.

அரசியல் நோக்கத்திற்காக மட்டுமே சிலர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். விவசாயிகள் பாதிக்கட்டும் என்ற எண்ணம் என்றைக்கும் அரசுக்கு கிடையாது. விவசாயிகளின் நஷ்ட ஈடுகளை அவர்கள் கேட்டதற்கு இணங்க உயர்த்தி கொடுத்துள்ளோம். தென்னை மரம் ஒன்றுக்கு ரூ. 37600-ம், கோபுரம் அமையும் இடத்திற்கு 100 சதவீதமும், மின் பாதை செல்லும் நிலத்திற்கு 20 சதவீதமும் நஷ்ட ஈடு வழங்க மாநில அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. உயர்மின் கோபுரம் அமைக்கும் இடத்தில் விவசாயம் செய்யலாம் பாதிப்புகள் கிடையாது. ஆனால் அரசியல் காரணங்களுக்காக சிலர் தவறான தவகல்களை மக்கள் இடையே பரப்பி வருகின்றனர்.

இவ்வாறு அமைச்சர் பி.தங்கமணி கூறினார்.