சிறப்பு செய்திகள்

8 வழிச்சாலை மத்திய அரசின் திட்டம் – முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி விளக்கம்…

மதுரை:-

8 வழிச்சாலை திட்டம் மத்திய அரசின் திட்டம், இதற்கும் மாநில அரசுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி விளக்கம் அளித்துள்ளார்.

மதுரை விமான நிலையத்தில்  முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

நெல்லை மாவட்ட முன்னாள் கழக செயலாளர் இல்ல திருமண விழாவுக்காக நெல்லை செல்கிறேன். நீட் தேர்வு பற்றி ஏற்கனவே நான் விளக்கம் அளித்து விட்டேன். அமைச்சர்களும், விரிவாக சொல்லி விட்டார்கள். திரும்ப திரும்ப நீங்கள் (ஊடகங்கள்) அதையே கேட்கிறீர்கள். நீட் தேர்வு இப்போதைய மத்திய அரசு கொண்டு வரவில்லை.

இதை கொண்டு வந்தது காங்கிரஸ்- தி.மு.க. கூட்டணி அரசு தான். அவர்கள் கொண்டு வந்த திட்டத்தால் மக்களிடையே கடும் அதிருப்தியும், எதிர்ப்பும் கிளம்பியதால் அதை திசை திருப்ப எங்கள் மீது வீண் பழி போடுகிறார்கள். இருப்பினும் நீட் தேர்வை பொறுத்தவரை தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என்பதில் அம்மாவின் அரசு தொடர்ந்து அதே நிலைப்பாட்டை தான் பின்பற்றுகிறது.

8 வழிச்சாலை பற்றி மீண்டும் மீண்டும் என்னிடம் கேட்டபோதெல்லாம் நான் அதற்கு தக்க பதிலை சொல்லி விட்டேன். இத்திட்டம் மாநில அரசின் திட்டம் அல்ல. மத்திய அரசின் திட்டமாகும். இந்த 8 வழிச்சாலை ஏதோ சேலத்துக்காக கொண்டு வரப்பட்டபோது போல் ஒரு மாயத்தோற்றத்தை உருவாக்க பார்க்கிறீர்கள். சேலத்துக்கும் 8 வழிச்சாலைக்கும் எந்த தொடர்பும் இல்லை. இந்த 8 வழிச்சாலை சேலம் வழியாக செல்கிறது.

சேலம், கரூர், நாமக்கல், ஈரோடு, திருப்பூர், கோவை வழியாக கேரளா வரை செல்கிறது. எனவே சேலத்துக்காக கொண்டு வரப்பட்ட திட்டம் போல ஒரு தோற்றத்தை உருவாக்க பார்க்கிறீர்கள். 8 வழிச்சாலையால் சென்னைக்கும், சேலத்துக்கும் இடையே உள்ள தூரம் 70 கி.மீ. வரை குறையும். இதனால் எரிபொருள் மிச்சமாகும். சாலை விபத்துகள் பெருமளவு குறையும். சுற்றுப்புற சூழல் பாதுகாக்கப்படும். இதன் காரணமாக ஏராளமான தொழிற்சாலைகள் உருவாவதற்கு வழிவகுக்கும். இந்த திட்டம் ஏதோ விவசாயிகளை பாதிக்கும் திட்டமாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன.

தி.மு.க.- காங்கிரஸ் கூட்டணி ஆட்சியின்போது டி.ஆர்.பாலு மத்திய அமைச்சராக இருந்தார். அப்போது தமிழகத்தில் 600 கி.மீ.க்கு மேலான சாலைகளை அமைத்தார். அதற்கு அப்போதைய அரசு கொடுத்த இழப்பீடு மிகவும் குறைவு. சாலை செல்லும ்வழியில் ஒரு வீடு 10 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டு இருந்தால் அதற்குரிய தேய்மானத்தை கழித்து விட்டுத்தான் இழப்பீட்டு தொகையை அப்போதைய மத்திய அரசும், மாநில அரசும் வழங்கியது. விவசாயிகளுக்கும் அப்படித்தான் வழங்கினார்கள். ஆனால் இப்போது அப்படி அல்ல.

8 வழிச்சாலை செல்லும் வழியில் 10 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட வீடாக இருந்தாலும் அந்த வீட்டிற்குரிய இழப்பீடு புதிய வீடு கட்டியதற்கு உரிய இழப்பீடு தொகை வழங்கப்படுகிறது. 60 சென்ட், 50 சென்ட் நிலம் கையகப்படுத்த வேண்டிய நிலை இருந்தால் அந்த நிலத்திற்குரிய மார்க்கெட் விலையை விட 3 மடங்கு அதிகமான இழப்பீடு தொகை வழங்குகிறோம். அது மட்டுமல்ல, அந்த இடத்தில் ஒரு கிணறு இருந்தால் அதற்கும் சேர்த்து இழப்பீ்ட்டு தொகையை வழங்குகிறோம்.

வழியில் ஒரு தென்னந்தோப்பு இருந்தால் தென்னந்தோப்பு இருக்கின்ற நிலத்திற்கும் இழப்பீடு வழங்குகிறோம். ஒவ்வொரு தென்னை மரத்திற்கும் உரிய தொகையை இழப்பீடாக வழங்குகிறோம். அப்படி பார்த்தால் ஒரு ஏக்கரில் தென்னந்தோப்பு இருந்தால் ஏறக்குறைய ரூ.25 லட்சம் இழப்பீட்டு தொகை கிடைக்கும்.

இந்த ரூ.25 லட்சம் தென்னை மரங்களுக்கு மட்டுமே உரியது. இது தவிர அந்த நிலத்திற்கும் உரிய இழப்பீட்டு தொகையை கொடுக்கிறோம். இத்தனை இழப்பீடுகளையும் கொடுத்து மக்களின் நன்மைக்காகத்தான் இந்த 8 வழிச்சாலை கொண்டு வரப்படுகிறதே தவிர வேறு எதற்காகவும் அல்ல. இது மாநில அரசின் திட்டம் அல்ல. மத்திய அரசு கொண்டு வந்த திட்டம். இதை அரசியல் நோக்கத்தோடு எதிர்க்கிறார்கள். இந்த 8 வழிச்சாலை அமல்படுத்தப்பட்டு விட்டால் இந்த அரசுக்கு நல்ல பெயர் கிடைத்து விடுமே என்ற ஆத்திரத்தில் மக்களை தவறாக தூண்டி விட்டு திசை திருப்புகிறார்கள்.

வேலூர் தொகுதியில் டி.டி.வி.தினகரன் கட்சி போட்டியிடாததற்கு காரணம் அக்கட்சி மக்கள் செல்வாக்கை இழந்து விட்டது தான். இனிமேல் அக்கட்சியால் எழுந்திருக்கவே முடியாது. வேலூர் மக்களவை தொகுதியில் கூட்டணி வேட்பாளராக புதிய நீதிக்கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகம் போட்டியிடுகிறார். அவர் நிச்சயம் அமோக வெற்றி பெறுவார். நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும் நல்லது செய்ய வேண்டும் என்ற ஒரே லட்சியத்தோடு அம்மாவின் வழி நின்று நாங்கள் செயல்பட்டு கொண்டிருக்கிறோம். எங்கள் லட்சியத்தில் எந்த சுயநலமும் கிடையாது. மக்கள் நலனே எங்கள் ஒரே லட்சியம்.

இவ்வாறு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி கூறினார்.