தற்போதைய செய்திகள்

நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரியில் 2021-க்குள் மாணவர் சேர்க்கை துவக்கம் – அமைச்சர் பி.தங்கமணி உறுதி

நாமக்கல்

நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி கட்டுமான பணிகள் 2 மாதத்தில் தொடங்கும் என்றும், 2021-ம் ஆண்டுக்குள் மாணவர் சேர்க்கை நடைபெறும் என்றும் அமைச்சர் பி.தங்கமணி தெரிவித்தார்.

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் வட்ட லாரி உரிமையாளர்கள் சங்க திருமண மண்டபத்தில் 66-வது அனைத்திந்திய கூட்டுறவு வாரவிழா மாவட்ட ஆட்சித்தலைவர் கா.மெகராஜ் தலைமையில் நடைபெற்றது. நாமக்கல் நகர கழக செயலாளரும், தொகுதி கழக சட்டமன்ற உறுப்பினருமான கே.பி.பி.பாஸ்கர், கொல்லிமலை ஒன்றிய கழக செயலாளரும், சேந்தமங்கலம் தொகுதி கழக சட்டமன்ற உறுப்பினருமான சி.சந்திரசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த விழாவில் சிறப்பாக செயல்பட்ட கூட்டுறவு சங்கங்கள் மற்றும் சங்க பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் கேடயங்கள், மகளிர் சுயஉதவிக்குழுக்கள் மற்றும் விவசாயிகள், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட 4,915 பயனாளிகளுக்கு ரூ.40.07 கோடி கடனுதவி ஆகியவற்றை கழக அமைப்பு செயலாளரும், நாமக்கல் மாவட்ட கழக செயலாளரும், மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சருமான பி.தங்கமணி, கழக மகளிர் அணி இணை செயலாளரும், சமூக நலன் மற்றும் சத்துணவுத் திட்டத்துறை அமைச்சருமான மருத்துவர் வெ.சரோஜா ஆகியோர் வழங்கினர்.

இந்நிகழ்ச்சியில் அமைச்சர் பி.தங்கமணி பேசியதாவது:-

அம்மா அவர்கள் விவசாயிகளுக்கு வட்டியில்லா கடனுதவிகளை வழங்கினார். அதனடிப்படையில் விவசாயிகள் தாங்கள் வாங்குகின்ற கடனை குறிப்பிட்ட காலத்திற்குள் திருப்பி செலுத்தினால் வட்டி முற்றிலும் தள்ளுபடி செய்யப்படுகிறது. மேலும் நகைக்கடன் குறைந்த வட்டியில் கூட்டுறவு சங்கங்கள் மூலம் வழங்கப்படுகின்றது. நாமக்கல் மாவட்டத்தில் விவசாயி களானாலும், மகளிர் சுய உதவிக்குழுக்களானாலும் வாங்குகின்ற கடனை 95 சதவீதம் அளவிற்கு திருப்பிச் செலுத்தி முதன்மை மாவட்டமாக விளங்குகிறது.

கூட்டுறவு வங்கிகளில் எளிதில் கடன் வழங்கப்படுகிறது. ரூ.5,000 முதல் ரூ.50 லட்சம் வரையிலான கடன்கள் வழங்கப்படுகின்றன. சரியாக திருப்பி செலுத்துபவர்களுக்கு மீண்டும், மீண்டும் கடன் வழங்கப்படுகிறது. பெண்கள் சொந்த காலில் நின்று பொருளாதார முன்னேற்றம் அடைய வேண்டும் என்று அம்மா அவர்கள் மகளிர் சுய உதவிக்குழுக்களை ஆரம்பித்தார். அம்மா அவர்கள் கொண்டு வந்த திட்டங்களை முதலமைச்சர் சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்.

விவசாயிகளின் முன்னேற்றத்திற்காக முதலமைச்சர் குடிமராமத்து திட்டத்தை கொண்டு வந்து மழை நீரை சேகரிக்க நடவடிக்கை மேற்கொண்டார். தற்போது ஏரி, குளங்களில் நீர் நிரம்பி விவசாயிகள் நம்பிக்கையுடன் விவசாய பணிகளை மேற்கொள்ள குடிமராமத்து திட்டம் உதவியுள்ளது. கூட்டுறவு வங்கிகளில் தலைவர்களாக வந்துள்ளவர்கள் கூட்டுறவு சங்கங்களின் முன்னேற்றத்திற்காக பணியாற்றி கொண்டிருக்கிறார்கள்.

நாமக்கல் மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் வசதியான சாலைகள் போடப்பட்டுள்ளன. மேலும் நாமக்கல் மாவட்டத்திற்கு அம்மா அவர்களின் அரசு 4 புதிய வட்டங்களை வழங்கியுள்ளது. மேலும் இரண்டு அரசு கலைக்கல்லூரிகளையும், சட்டக்கல்லூரி, மருத்துவக்கல்லூரிகளையும் வழங்கியுள்ளது. மருத்துவக்கல்லூரிக்கு இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதுடன் ரூ.350 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதால், கல்லூரி கட்டும் பணிகள் இன்னும் 2 மாத காலத்திற்குள் தொடங்கப்படுவதுடன் 2021-ம் ஆண்டிற்குள் மாணவர்கள் சேர்க்கை நடைபெறும்.

இவ்வாறு அமைச்சர் பி.தங்கமணி பேசினார்.

பின்னர் பரமத்தி ஊராட்சி ஒன்றியம், வேலூர் பேரூராட்சி மற்றும் பரமத்தி பேரூராட்சி ஆகிய பகுதிகளை சேர்ந்த 107 உழைக்கும் மகளிருக்கு மொத்தம் ரூ.26,75,000 மானிய விலையில் அம்மா இருசக்கர வாகனங்களை அமைச்சர்கள் வழங்கினர்.

இந்நிகழ்ச்சியில் நாமக்கல் மாவட்ட கழக அவைத்தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான பி.ஆர்.சுந்தரம், பரமத்தி ஒன்றிய கழக செயலாளரும், கூட்டுறவு பண்டகசாலை தலைவருமான எஸ்.பி.சுகுமாரன் உள்பட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.