ஈரோடு

பவானி ஆற்றின் குறுக்கே புதிதாக 10 தடுப்பணைகள் – அமைச்சர் கே.சி.கருப்பணன் தகவல்

ஈரோடு:-

பவானி ஆற்றின் குறுக்கே புதிதாக 10 தடுப்பணைகள் கட்டப்படும் என்று அமைச்சர் கே.சி.கருப்பணன் தெரிவித்தார்.

ஈரோடு மாவட்டம் பவானி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட புன்னம், பருவாச்சி, ஜம்பை, மைலம்பாடி பகுதிகளில் 5 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கான்கிரீட் தளம், புதிய சாலைகள்,சிறு தடுப்பணைகள், குடிநீர்த் தொட்டிகள் அமைப்பதற்கான பணிகளை சுற்றுச் சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

ஈரோடு மாவட்டத்தில் பவானி ஆற்றின் குறுக்கே 10 தடுப்பணைகள் கட்ட மனு வழங்கப்பட்டு தற்போது ஆய்வுக் கட்டத்தில் உள்ளது. விரைவில் கட்டப்படும் முதல்கட்டமாக 18 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஜம்பை பகுதியில் தடுப்பணை கட்டுவதற்கு அனுமதி வழங்கப்பட்டு ஆற்றில் தண்ணீர் குறைந்தவுடன் தடுப்பணை பணி தொடங்கும் . காவேரி ஆற்றின் குறுக்கே தடுப்பணைகள் கட்டுவது குறித்து முதலமைச்சரின் ஆய்வுப் பணியில் உள்ளது. கரூரில் தடுப்பணை கட்ட முதலமைச்சர் அனுமதி வழங்கியுள்ளார் . முழு ஆய்வுக்கு றகு எத்தனை தடுப்பணைகள் எங்கு கட்டுவது என்று முடிவு செய்யப்படும்.

உள்ளாட்சித் தேர்தலை பொறுத்தவரை கழகம் 100 சதவிகிதம் வெற்றி பெறும் . கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது பொய்யான வாக்குறுதிகளை வழங்கி திமுக தலைவர் ஸ்டாலின் வெற்றி பெற்றதைப் போல் உள்ளாட்சித் தேர்தலில் நடக்க வாய்ப்பில்லை.

இவ்வாறு அமைச்சர் கே.சி.கருப்பணன் கூறினார்.

இந்நிகழ்ச்சிகளில் முன்னாள் எம்.பி. என்.ஆர்.கோவிந்தராஜர், பவானி ஒன்றிய செயலாளர் எஸ்.எம்.தங்கவேலு,பேரவை செயலாளர் விஸ்வநாதன், மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் கே.ஆர்.ஜான், புன்னம் ஊராட்சி செயலாளர் ராஜ்குமார், நெருஞ்சிபேட்டை மாரியப்பன், வாத்தியார் குப்புசாமி, மைலம்பாடி கண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்